Published:Updated:

ஆவின் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை உயர்வு: `பொதுமக்களுக்கு பாதிப்பில்லை!' - சொல்கிறார் அமைச்சர் நாசர்

ஆவின் பால்

``மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பால் விலை குறைவாகவே உயர்த்தப்பட்டிருக்கிறது” என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருக்கிறார்.

ஆவின் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை உயர்வு: `பொதுமக்களுக்கு பாதிப்பில்லை!' - சொல்கிறார் அமைச்சர் நாசர்

``மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பால் விலை குறைவாகவே உயர்த்தப்பட்டிருக்கிறது” என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஆவின் பால்

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், ஆவினின் ஆரஞ்ச் பால் சில்லறை விற்பனை விலையை இன்று முதல் உயர்த்தியிருக்கிறது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், "கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் அரை லிட்டர் ரூ.24-லிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும். அதேநேரம் அட்டைதாரர்களுக்கு விலை உயர்வு இன்றி லிட்டர் ரூ.48-க்கு விற்பனை செய்யப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆவின்
ஆவின்

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``ஆவின் பால் கொள்முதல் விலையில், பசும்பால் லிட்டருக்கு ரூ.32-லிருந்து ரூ.35-ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக முதல்வர் உயர்த்திருக்கிறார். இந்த பால் விலை ஏற்றம் சாதாரண மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. முழுக்க முழுக்க வாணிப நோக்கத்தோடு விற்பனை செய்யப்படுகிற, ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கான விலை மட்டும்தான் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு ரூ.48-க்கு விற்பனை செய்து வந்தோம். இதே நிறை கொழுப்புப் பாலை மற்ற மாநிலங்களும் மற்ற தனியார் நிறுவனங்களும் ஏறக்குறைய ரூ.70 வரை விற்பனை செய்கின்றன. பா.ஜ.க ஆளுகிற குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் விலையைவிட ரூ.10 குறைவாக, அதாவது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படவிருக்கிறது.

அமைச்சர் நாசர்
அமைச்சர் நாசர்

தமிழ்நாட்டில் ஆரஞ்சு பாக்கெட் பாலை ஏற்கெனவே 11லட்சம் பேர் வாங்கிவருகின்றனர். இந்தப் பால் சந்தா அட்டைகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு அதே ரூ.48-க்கு விற்பனை செய்யப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. மத்திய அரசு, வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பாலுக்கும் ஜி.எஸ்.டி விதித்திருக்கிறது. இதனால் விற்பனை விலை உயர்ந்திருக்கிறது. இருந்தாலும், மக்களை பாதிக்காத வகையில்தான் இந்த விலை உயர்த்தப்பட்டிருக்கிறது" என்றார்.

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், ``ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக் கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அதேபோல பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில்,``தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பால் விலை இப்போதுதான் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், பால் உற்பத்தியாளர்கள் கோரிய விலை வழங்கப்படவில்லை.

எருமைப்பாலின் விலையை ரூ.51-ஆகவும், பசும்பாலின் விலையை ரூ.44-ஆகவும், அதாவது லிட்டருக்கு ரூ.10 உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்கள் கோரியதைவிட ரூ. 7 குறைவாகவே உயர்த்தப்பட்டிருக்கிறது. பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்.

அன்புமணி
அன்புமணி

நீல உறை, பச்சை உறை பால்களின் விலை உயர்த்தப்படாததும் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஆரஞ்சு நிற உறையில் சில்லறையில் விற்கப்படும் நிறைக்கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

மாதாந்தர அட்டை மூலம் வாங்கப்படும் பால், வீட்டுப் பயன்பாட்டுக்கானது. சில்லறை விற்பனையில் வாங்கப்படும் பால் வணிகப் பயன்பாட்டுக்கானது என்ற ஆவினின் யூகம் தவறு. பெரும்பாலான மக்கள் சில்லறைக் கடைகளில்தான் பால் வாங்குகின்றனர். எனவே, ஆரஞ்சு பால் விலை உயர்வை ரத்துசெய்ய வேண்டும்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.