Published:Updated:

கீதை, குர்ஆன், பைபிள் என எனக்கு எல்லா வேதமும் மு.க.ஸ்டாலின்தான்!

சா.மு.நாசர்
பிரீமியம் ஸ்டோரி
News
சா.மு.நாசர்

சரண்டராகிறார் அமைச்சர் சா.மு.நாசர்

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஆவின் ஊழல் பொங்கிவழிந்தது என்றால், தி.மு.க ஆட்சியில், ‘பாலில் டிடர்ஜென்ட் வாசம் வீசுகிறது’ என்பதில் ஆரம்பித்து, ‘பாலில் தண்ணீர் கலக்கிறார்கள்’, ‘ஊழல் அதிகாரிகள் மாற்றப்படவில்லை’, ‘அமைச்சரின் மகன் ஆதிக்கம் செலுத்துகிறார்’ என்றெல்லாம் அடுக்கடுக்கான புகார்கள். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரிடமே கேள்விகளை முன்வைத்து விளக்கம் கேட்டோம்...

“ஆவினுக்குப் போட்டியாக இருக்கும் தனியார் பால் நிறுவனங்களும் ஆவின் டெண்டர்களை எடுக்கலாம் என அண்மையில் விதி திருத்தப்பட்டிருப்பது தனியார் நிறுவனங்களை வளர்க்கத்தானே உதவும்?’’

“தனியார் நிறுவனங்கள் ஆவினில் பால் கொள்முதல் செய்து, மீண்டும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தால்தான் தவறு. கொள்முதல் செய்த பாலை, பால் பவுடர் மாதிரியான மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ‘தனியார் நிறுவனங்கள் ஆவின் டெண்டரில் கலந்துகொள்ளக் கூடாது’ என்று கடந்த காலங்களில் விதிமுறை இருந்தபோது, இடைத்தரகர்களே ஆவினிலிருந்து பாலைக் கொள்முதல் செய்து தனியார் நிறுவனங்களுக்கு விற்று லாபம் பார்த்தனர். இப்போது தனியார் நிறுவனங்களே நேரடியாக, ஆவின் டெண்டரில் பங்கேற்கலாம் என்று விதிமுறையைத் திருத்திய பிறகு, லாபம் அனைத்தும் ஆவினுக்கே வந்து சேர்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?’’

கீதை, குர்ஆன், பைபிள் என எனக்கு எல்லா வேதமும் மு.க.ஸ்டாலின்தான்!

“முதலமைச்சர் குடும்பத்துக்கு நெருக்கமான தனியார் நிறுவனம் ஒன்று ஆதாயம் பெறுவதற்காகவே, ஆவின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளனவே?’’

“முழுக்க முழுக்க கற்பனையான, ஆதாரமற்ற, தவறான தகவல் இது!’’

“ஆவின் நிர்வாகத்தில், உங்கள் மகனின் தலையீடு அதிகரித்திருப்பதாகவும், முதல்வரே இது குறித்துத் தங்களை நேரடியாகக் கடிந்து கொண்டதாகவும்கூடச் சொல்கிறார்களே?’’

“இப்படியான எந்த நிகழ்வுமே நடைபெறவில்லை. என்னுடைய அரசியல் எதிரிகள்தான் காழ்ப்புணர்ச்சியோடு இது போன்ற தவறான தகவல்களைக் கொடுக்கிறார்கள். எனக்கு ஒரு மகன் மட்டுமே. அவரது திருமணத்துக்குப் பிறகும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்துவருகிறோம். ஏற்கெனவே நான் பார்த்துவந்த ரியல் எஸ்டேட் பிசினஸைத் தற்போது என் மகன்தான் நடத்திவருகிறார். இப்போது நான் அமைச்சராகிவிட்டேன் என்பதற்காக, ‘இனிமேல் வீட்டுக்கு வராதே’ என்று என் மகனிடம் சொல்லிவிட முடியுமா என்ன?

கீதை, குர்ஆன், பைபிள் என எனக்கு எல்லா வேதமும் மு.க.ஸ்டாலின்தான். அவரோடு இந்த 40 ஆண்டுக்காலப் பயணத்தில், அவர் சொல்லியும் நான் கேட்காத ஒரு விஷயம் என்றால், ‘என்னைப் புகழாதீர்கள்’ என்று அவர் சொன்ன பிறகும்கூட, கூட்டத்தொடரில் அவரைப் புகழ்ந்து பேசியது மட்டும்தான். வேறு எதற்காகவும் அவர் என்னைக் கடிந்துகொண்டதில்லை!’’

“காலாவதியான பால் பவுடரைக் கலப்பதால், பாலில் டிடர்ஜென்ட் வாசனை வருகிறது, பாலின் தரம் சோதிக்கப்படுவதில்லை என்றெல்லாம்கூட ஆவின் பற்றிப் புகார்கள் வருகின்றனவே?’’

“கறந்த பால் தரத்தோடு பால் விற்பனை செய்துவரும் ஒரே நிறுவனம் ஆவின் மட்டும்தான். ஆவினில் தற்போதுகூட 16 டன் பால் பவுடர் கைவசம் உள்ளது. இதை விற்பதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பவுடரை நாங்கள் பாலில் கலப்பதில்லை.

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலமாகப் பாலைப் பெறும்போதே, அதன் கொழுப்பு உள்ளிட்ட அம்சங்கள் முறையாகப் பரிசோதிக்கப்படுகின்றன. பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட பால், அந்தந்த மாவட்டங்களிலேயே கெட்டுப் போகாவண்ணம் சேமித்துவைக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுக்க, தினசரி ஆவின் பால் விற்பனை என்பது 27.4 லட்சம் லிட்டராக இருக்கிறது. ஆனால், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினந்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்படி, தேவைக்கு அதிகமாகக் கொள்முதல் செய்யப்படும் பாலை வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம், குலாப் ஜாமூன் என 152 உப பொருள்களாகத் தயாரிக்கிறோம். இதைத் தவிர்த்தும் மிச்சமாகிற பாலை பவுடராக மாற்றிச் சேமித்துவைக்கிறோம். இதுதான் நடைமுறை. சுவைக்காக ரசாயனம் எதுவும் கலக்கப்படாத, தாய்ப்பாலுக்கு நிகரான ஆவின் பாலை, நீங்களேகூட நேரில் வந்து, ஆய்வுசெய்து பார்க்கலாம்!’’

கீதை, குர்ஆன், பைபிள் என எனக்கு எல்லா வேதமும் மு.க.ஸ்டாலின்தான்!

“அ.தி.மு.க ஆட்சியில், ‘ஆவினில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருக்கிறது’ என அரசியல்வாதிகளைக் குற்றம்சாட்டுகிற நீங்கள், அந்தக் காலக்கட்டத்தில் பணிபுரிந்த அதிகாரிகளைத் தொடர்ந்து பணி செய்ய அனுமதித்திருக்கிறீர்களே?’’

“எந்தெந்த வகைகளில் ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பது குறித்த விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த விசாரணை முடிந்து ஆய்வறிக்கை வெளிவரும்போதுதான், இந்த முறைகேடுகளில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். அதன் பிறகே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்யலாமா அல்லது இடைநீக்கம் செய்யலாமா என்பதெல்லாம் தெரியவரும்.’’

“நெல்லையில், பா.ஜ.க-வினரைத் தாக்கியதாக தி.மு.க எம்.பி மீது வழக்கு பதிவு, கடலூரில் கொலை வழக்கில் தி.மு.க எம்.பி கைது... இதுதான் தி.மு.க தரும் விடியல் ஆட்சியா?’’

“சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் புகார் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனி உண்மை என்னவென்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். ஆளுங்கட்சியாக இருந்தாலும்கூட, தவறு செய்திருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான சிறந்த உதாரணமாகத்தான் இந்த நிகழ்வுகளைப் பார்க்க வேண்டுமே தவிர... இதையும்கூட குறை சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது!’’