Published:Updated:

``உங்க வீட்டை இப்படிதான் வெச்சிருப்பீங்களா?" - ஆவின் தொழிற்சாலையில் அதிகாரிக்கு டோஸ் விட்ட அமைச்சர்

அமைச்சர் நாசர்

ஈரோடு வந்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சித்தோடு ஆவின் பால் குளிரூட்டும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

``உங்க வீட்டை இப்படிதான் வெச்சிருப்பீங்களா?" - ஆவின் தொழிற்சாலையில் அதிகாரிக்கு டோஸ் விட்ட அமைச்சர்

ஈரோடு வந்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சித்தோடு ஆவின் பால் குளிரூட்டும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Published:Updated:
அமைச்சர் நாசர்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோடு வந்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சித்தோடு ஆவின் பால் குளிரூட்டும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவரது வருகை பற்றி முன்கூட்டியே தகவல் அளிக்கப்படாததால் அதிகாலையில் அமைச்சர் தனது காரில் ஆவின் வளாகத்திற்குள் நுழைந்ததும் பணியிலிருந்த அதிகாரிகளும், ஊழியர்களும் பரபரப்பானார்கள். அப்போது வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக பால் பாக்கெட்டுகளை லோடிங் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய அமைச்சர் வெளியூர்களுக்கு பால் அனுப்பும் பதிவேட்டை ஆய்வு செய்தபோது அதில் முறையாக பால் அனுப்பும் அளவை பதிவுசெய்யாமல் இருந்ததை கண்டுபிடித்தார்.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

பின்னர் பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் பகுதி, பால் ஃபிலிம் பயன்பாடு போன்ற பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வளாகத்தின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருள்களின் இருப்பை ஆய்வுசெய்தபோது ரூ. 22,400 மதிப்புள்ள பொருள்களின் இருப்பு குறைவாக
இருப்பதைக் கண்டறிந்தார்.

இதையடுத்து பாலகத்தை பராமரித்து வரும் துணை
மேலாளர் முகமது முஸ்தபாவையும், பால் அனுப்பும் பதிவேட்டை பராமரித்து வரும் பணியாளர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்தார். இதனை தொடர்ந்து ஈரோடு, சென்னிமலை சாலையிலுள்ள ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கால்நடை தீவனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்குச் சென்று பணியிலிருந்த அதிகாரியிடம் மேலே படிந்திருந்த ஒட்டடைகளையும், தூசுகளையும் ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, குடோனை மாதம் ஒருமுறை சுத்தம் செய்வோம் என்று கூறினார். `என்னிடம் பொய்யான தகவலை கூறாதீர்கள்... சுத்தம் செய்து ஓராண்டுக்கும் மேலாகி இருக்கும். இதுவே உங்க வீடா இருந்தா இப்படி வைச்சிருப்பீங்களா?' என்று அந்த அதிகாரியிடம் கேட்டார் அமைச்சர். ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால்தான் முறையாக சுத்தம் செய்ய முடியாமல் உள்ளது என்று அதிகாரி கூறினார்.

கால்நடைத் தீவனங்கள் பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்து விற்பனைக்காக வைத்திருந்ததை கண்ட அமைச்சர் `இந்த பிளாஸ்டிக் எத்தனை மைக்ரான் என்று தெரியுமா?' என்று கேட்டார். யாருக்கும் சரியான அளவு தெரியவில்லை. அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் `நான் படிக்காதவன், நீங்கள் படித்தவர்கள். இதை எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?' என்று கேட்டார்.

ஆய்வு
ஆய்வு

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ``தீபாவளி பண்டிகையின்போது தரமான இனிப்புகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் ரூ.53 கோடி அளவிற்கு
தயாரிக்கப்பட்டு, அதில் 10 டன் இனிப்புகள் வீணாக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்தாண்டு ரூ. 85 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. கூட்டுறவு சங்கங்கள் ஆவின் நிறுவனத்திலிருந்து இனிப்புகளை வாங்க அறிவுறுத்தப்பட்டது. நடப்பு ஆண்டு தரமான மூலப் பொருள்களைக் கொண்டு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு
விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆவின் பால் குறிப்பிட்ட சதவிகிதத்தில் எஸ்.என்.எஃப் மற்றும் ஃபேட் அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பாலில் ஒரு சதவிகிதம் கூடுதலாக அல்லது குறைவாக இருந்தால்கூட அந்த பால் நிராகரிக்கப்படுகிறது. ஆவின் விற்பனைக் கூடங்களில் ஆவின் பொருளைத் தவிர வேறு பொருள்கள் விற்கக் கூடாது. விழுப்புரத்தில் ஆவின் கடையில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்ததற்காக இரண்டு கடைகள் சீல் வைக்கப்பட்டன. இதேபோன்று தஞ்சை, கோயம்புத்தூர், சென்னையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் கட்சிக்காரர்களுக்கு ஆவின் கடைகள் ஒதுக்கப்பட்டதால் தவறுகள் நிகழ்ந்தன. அதைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆவின் கால்நடை தீவனத்தில் ஏதாவது குறை இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். முட்டம் பகுதியிலிருந்து எங்களுக்கு இவ்வாறு புகார் வந்ததையடுத்து உடனடியாக அதிகாரியிடம் பேசி குறைகள் களையப்பட்டன. ஆவின் நிறுவனத்தில் பணியாளர்கள் இனிவரும் காலங்களில் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுவார்கள்" என்றார்.

ஆய்வின்போது மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்களின் தரத்தின் மாதிரிகளை ஆய்வுக்காக அமைச்சர் சேகரித்துக் கொண்டார்.