Published:Updated:

`உறவினருக்கு கொரோனா; அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பு!'- சர்ச்சைக்கு நிலோஃபர் கபில் விளக்கம்

அமைச்சர் நிலோஃபர் கபில்
அமைச்சர் நிலோஃபர் கபில்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை நிலோஃபர் கபில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதில் அவரது உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

நிலோஃபர் கபில்
நிலோஃபர் கபில்

இந்த நிலையில் டெல்லியில், கடந்த மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லீக் ஜமாத் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலம் கொரோனா பரவியது தற்போது தெரியவந்துள்ளது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், கூட்டம் முடிந்த பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகியுள்ளனர். அப்படி வந்தவர்களை கொரோனா தொற்று இருக்கிறதா என அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மாநாட்டுக்குச் சென்றுதிரும்பிய வாணியம்பாடியைச் சேர்ந்த 8 பேரை மருத்துவமனையில் சேர்த்து அதிகாரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 52 பேரைத் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருக்குக் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடைய உறவினர்களான 12 பேருக்கும் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நிலோஃபர் கபில்
நிலோஃபர் கபில்

மீதமுள்ள 40 பேரைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் 6 நாள்கள் மட்டுமே தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி அமைச்சர் நிலோஃபர் கபில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி பூங்கொத்து கொடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

`40 பேரைக் குறைந்தபட்சம் 14 நாள்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்காமல் வீட்டுக்கு அனுப்பியது குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், அனைவருக்கும் கடந்த 11-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்

கடந்த 13-ம் தேதி வந்த ஆய்வின் முடிவில் வாணியம்பாடி கோட்டைப்பகுதியைச் சேர்ந்த 48 வயதுப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அமைச்சரிடம் அதிகாரிகள் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையும் பொருட்படுத்தாமல் கடந்த 11-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார் என்று தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

இத்தகவல் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் நிலோஃபர் கபிலிடம் பேசினோம். ``என்னை யாரும் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லவில்லை. இது முற்றிலும் தவறான தகவல். கொரானோ வார்டிலிருந்து மீண்டவர்களை தமிழகம் முழுவதிலும் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களின் மனநிலையை மாற்றுவதற்காக அவர்களுக்கு பூங்கொத்து மற்றும் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார்கள். எங்கள் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கொரானோ தொற்று இல்லையென்றும் அவர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறோம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆட்சியரும் சொன்னதும் என் சார்பில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுக்கச் சென்றேன் அவ்வளவுதான். நான் யாரையும் காப்பாற்றும் நோக்கில் செயல்படவில்லை. நான் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் என்பதால் என்மீது திட்டமிட்டு பழிசுமத்தப் பார்க்கிறார்கள் எதிர்க்கட்சியினர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு