Published:Updated:

`வாழ்க பெரியார்!’ - மத்திய அமைச்சர் முன்பு தி.மு.க-வினர் திடீர் முழக்கம்

வேலூரில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பா.ஜ.க-வினர் ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் தி.மு.க-வினர் ‘வாழ்க பெரியார்’ என்றும் மாறிமாறி முழக்கமிட்டனர்.

Nitin Gadkari
Nitin Gadkari

மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக முதலில் கலந்துகொண்டு 7,022 மாணவ-மாணவிகளுக்குப் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

Nitin Gadkari
Nitin Gadkari

அவர் பேசுகையில், ``மத்திய அரசு தூத்துக்குடி, காண்லா, பாரதீப் ஆகிய துறைமுகங்களிலிருந்து, குறைந்த விலையில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த பரிசீலித்துவருகிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், ஒரு யூனிட் மின்சாரத்தை வெறும் 2.50 ரூபாயில் தயாரிக்கலாம்.

இதனுடன் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் இணைக்க ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை 96,000 கிலோ மீட்டரிலிருந்து இரண்டு லட்சம் கிலோ மீட்டர் வரை அதிகப்படுத்தி, இரண்டு வழி நெடுஞ்சாலைகளை நான்கு வழிப் பாதைகளாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

Nitin Gadkari
Nitin Gadkari

இதைத்தொடர்ந்து, வேலூர் பென்ஸ் பார்க் ஹோட்டலில் கயிறு வாரியம் சார்பில் நடைபெற்ற தமிழகத்தில் குடியாத்தம் பாக்கம் கிராமம் உட்பட 13 மாநிலங்களில் தொடங்கப்பட்ட கயிறு குழுமங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புதிய பொருள்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியிலும் நிதின் கட்கரி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நிதின் கட்கரி புறப்பட்டபோது, அங்கிருந்த பா.ஜ.க-வினர், ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டனர். அமைச்சருக்குப் பின்னால் வந்த வேலூர் தி.மு.க எம்.பி கதிர் ஆனந்தின் ஆதரவாளர்களான தி.மு.க-வினர், `வாழ்க பெரியார்’ என்று முழக்கமிட்டனர்.

Nitin Gadkari
Nitin Gadkari

முன்னதாக வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் காந்தி, கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் ஆகியோர் நிதின் கட்கரியை பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். பிறகு, வேலூர் மக்களவைத் தொகுதியில் மேம்பாலம் மற்றும் சாலை வசதி அமைக்கக்கோரி கதிர் ஆனந்த், அமைச்சரிடம் கோரிக்கை மனுக் கொடுத்தார்.