நாகை: அரசு நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போகக்கூடாது! - அதிகாரிகளுக்கு ஓ.எஸ் மணியன் அட்வைஸ்

அமைச்சர் ஓ.எஸ் மணியன், மக்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக, அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் வண்ணம் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் பணிபுரியும் 453 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ1,12,16,000 மதிப்பீட்டில் மடிக்கணினிகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ``தமிழகத்தில் வருவாய்த்துறை இணையவழி சேவைகள் மூலம் 22 வகையான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களின் இணையதள பரிந்துரை பேரில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மானியம் பெறுவதற்காக சிறு, குறு விவசாயி சான்று மற்றும் விவசாயி வருமான சான்று வழங்கப்படுகிறது. விவசாய கடன், பயிர்க்காப்பீடு, விவசாய நகை கடன் மற்றும் விவசாய மானியங்கள் பெறுவதற்காக வழங்கப்படும் பெயர் ,அடங்கல் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கணினி பயன்பாட்டை முழுவதுமாக அறிந்து கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் . அரசு தொடர்பான பல அலுவலகங்கள் கட்டுவதற்கும், மக்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் நிலம் தேவை என்பது பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த சூழலில் பல அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள். அமைச்சர், அதிகாரிகள், என யாருக்காகவும் துணை போகாமல் இருக்க வேண்டும். அரசு நிலங்களை பாதுகாப்பதே கிராம நிர்வாக அலுவலர்களின் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

மேலும், மக்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக, அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் வண்ணம் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.