Published:Updated:

``ஆளுநர்களைவைத்து பாஜக சிந்தனையைத் தூண்டுவதற்கு முயல்கின்றனர்!" - பொன்முடி காட்டம்

அமைச்சர் பொன்முடி. ( தே.சிலம்பரசன் )

"திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் இல்லையென்றால், தமிழை எப்போதோ ஒழித்திருப்பார்கள். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல." - அமைச்சர் பொன்முடி

``ஆளுநர்களைவைத்து பாஜக சிந்தனையைத் தூண்டுவதற்கு முயல்கின்றனர்!" - பொன்முடி காட்டம்

"திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் இல்லையென்றால், தமிழை எப்போதோ ஒழித்திருப்பார்கள். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல." - அமைச்சர் பொன்முடி

Published:Updated:
அமைச்சர் பொன்முடி. ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்புவிழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் சில மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, "ஒருத்தர் சொல்லியிருக்கிறார், `தமிழகத்தில் பொறியியல் படிப்பில் தமிழ் மீடியமே இல்லை' என்று. 2010-ம் ஆண்டு தமிழ் மீடியத்தை பொறியியல் கல்லூரிகளில் கொண்டுவந்தது கலைஞர் ஆட்சியில். அப்போது நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சிவில், மெக்கானிக்கல் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியைக் கொண்டு வந்தோம். கடந்த வருடம், கணிப்பொறியியல் படிப்பிலும் தமிழ்வழி கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அரங்கத்தில் அமைச்சர் பொன்முடி
அரங்கத்தில் அமைச்சர் பொன்முடி

ஆங்கிலவழியிலும் முக்கியமாகப் படித்தாக வேண்டும். ஏனெனில், பல நாடுகளுக்குச் சென்று பொறியாளராகப் பணியாற்றி வருபவர்களும் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள், பணியாற்ற வேண்டியவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளை நீங்கள் பெற வேண்டும். எனவே, தாய் மொழியான தமிழும் வேண்டும், ஆங்கிலமும் வேண்டும். என்றும் தமிழுக்காக குரல் கொடுப்பது திராவிட மாடல் ஆட்சிதான் என்பதை மனசாட்சி உள்ள யாரும் மறுக்க முடியாது. தமிழில் படிப்பதில் தவறில்லை. அதேநேரத்தில் ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிடக் கூடாது. ஒருகாலத்தில் கல்லூரிகளில் ஆங்கிலவழி மட்டுமே இருந்தது. அதில் மாணவர்கள் கஷ்டப்படுவதை அறிந்து... கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்வழியிலும் பயிலலாம் எனும் சட்டத்தைக் கொண்டுவந்தவர் கலைஞர். இப்படியெல்லாம் நாங்கள் தமிழை வளர்க்கவில்லையா!

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் இல்லை என்றால், தமிழை எப்போதோ ஒழித்திருப்பார்கள். இந்தியை இங்கே புகுத்தி, 'படி' என்றால் எப்படிப் படிப்பார்கள்... எனவே, திராவிட மாடல் என்றால் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கைதான். இந்தியாவிலேயே உயர்கல்வி தமிழகத்தில்தான் அதிகம் என்று சொன்னால், அதற்கு இரு மொழிக் கொள்கைதான் காரணம். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியைப் படிக்க ஆசை இருப்பவர்கள் படித்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்தியும் கட்டாயப் பாடம். அதையும் நீங்கள் படித்தாக வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா... அதில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

இந்தி, விருப்பப் பாடமாக இருக்கலாம். ஆனால், அதைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்ற பாடமாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்றால், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... ஆரம்பத்திலேயே வடிகட்டினால் நிறைய பேர் கல்வியில் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான், புதிய கல்விக் கொள்கையை வேண்டாம் என்று சொல்கிறோம். மேலும், அதில் தொழிற்கல்வி என்ற பெயரில் குலத்தொழிலைக் கொண்டுவருகிறார்கள். இதெல்லாம் தேவையா?

மேடையில் பொன்முடி
மேடையில் பொன்முடி

பொறியியல் படிப்பவர்களும் தமிழ்ப் பாடம் படிக்க வேண்டும் என்பதால், வருகிற ஆண்டிலிருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்குக் கட்டாயமாக 'தமிழர் மரபு', 'தமிழரும் தொழில்நுட்பமும்' எனும் பாடங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களைவிட தமிழை வேறு யாராலும் சிறப்பாக வளர்க்க முடியுமா... நாங்கள் மற்ற மொழிகளைப் படிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. அவர்களின் கொள்கையில்... இந்தி, சம்ஸ்கிருதம் படித்தால் உதவித்தொகை உண்டாம். ஆனால், தமிழ் மொழி படிப்பவர்களுக்கு இல்லை. அப்படியானால் எந்த மொழியை வளர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது... அதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?!

இங்குள்ள மாவட்ட ஆட்சியரும் உங்களைப்போல் பொறியியல் படித்துவிட்டுத்தான் கலெக்டராகியிருக்கிறார். நீங்களும் உங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்வதுதான் முக்கியம். அதில் ஐ.ஏ.எஸ்-ஸும் ஆகலாம், ஐ.பி.எஸ்-ஸும் ஆகலாம். ஆனால், ஐ.பி.எஸ் ஆகி கண்ட மாதிரி பேசிக்கிட்டு இருக்காதீங்க. என்னால் என்ன செய்ய முடியும் என நினைக்காதீர்கள், நீங்கள் நினைத்தால் எல்லாமே செய்ய முடியும்" என்றார். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 1,119 பேருக்கு இன்று பட்டமளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். நாங்கள் தேசிய கல்விக்கொள்கையில் உள்ள குறைபாடுகள் குறித்துக் கடிதமெல்லாம் எழுதிவிட்டோம். அவற்றைச் சரிசெய்வதுபோல் ஒப்புக்குச் சப்பாணியாக பதிலெழுதி அனுப்பியிருக்கின்றனர். எனவேதான் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசின் சார்பில் ஆதரவு இல்லை என சட்டமன்றத்திலே முதலமைச்சர் நிறைவேற்றினார்கள். தேசிய கல்விக் கொள்கை என்பது, அவர்கள் இந்தியைத் திணிப்பதற்காகக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பொன்முடி
செய்தியாளர்கள் சந்திப்பில் பொன்முடி

இந்தக் கல்விக் கொள்கை என்பது தமிழ் வளர்ச்சிக்கும், தமிழகக் கல்வி வளர்ச்சிக்கும் தடையாக இருக்குமே தவிர, கல்வியை வளர்ப்பதாக இருக்காது. அதேபோல் மாநில மொழிக்காக அவர்கள் இதில் ஏதும் சொல்லவில்லை, செய்யவில்லை. தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பில்கூட தமிழ்வழி இல்லை என்பவருக்கு நடப்பாண்டு அரசியலும் தெரியவில்லை, கடந்த கால அரசியலும், தெரியவில்லை. நாம் அதற்கு என்ன பண்ண முடியும்... நீட் தேர்வுக்காக எல்லா ஏற்பாடுகளையும், முயற்சிகளையும் நீதிமன்றத்தின் மூலமாகச் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு கவர்னர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசலாமா? அவர், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவர்தான். நாங்களும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். ஏதாவது அதில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில்தான் கொண்டுவர முடியும்.

அதை விடுத்து, வெளியில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுவதே தவறு. ஆனால், ஓர் ஆளுநராக இருப்பவர் மதச்சார்பற்ற நாடு என்பதற்கு பதிலாக, 'பல்வேறு நாடுகள் மதத்தின் அடிப்படையில் இருக்கின்றன. இந்தியாவும் அதுபோல் இருக்க வேண்டும்' என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம். எனவேதான் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து, டி.ஆர்.பாலு தலைமையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து இந்த கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி

இங்கு மட்டும் இந்தப் பிரச்னை இல்லை, எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களிலெல்லாம் ஆளுநர்களைக் கிளப்பிவிட்டு, பா.ஜ.க சிந்தனைகளைத் தூண்டுவதற்கு முயன்றுகொண்டிருக்கின்றனர். அதேபோல், மாநில அரசுகளுக்கு எதிராகச் செயல்பட்டால் பதவி உயர்வும் தருகிறார்கள். அந்த எண்ணத்தில்கூட ஆளுநர் இப்படிச் செய்திருக்கலாம். ஆகவே, ஆளுநர் இப்படிப் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார்.