Published:Updated:

"ஆளுநருக்கு, எந்த அளவுக்கு வரலாறு தெரியும் என எனக்குத் தெரியவில்லை..!" - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

" 'தமிழ்நாடு' என்பது சரியான வார்த்தை. அதில் எந்தத் தவறும் இல்லை." - அமைச்சர் பொன்முடி.

"ஆளுநருக்கு, எந்த அளவுக்கு வரலாறு தெரியும் என எனக்குத் தெரியவில்லை..!" - அமைச்சர் பொன்முடி

" 'தமிழ்நாடு' என்பது சரியான வார்த்தை. அதில் எந்தத் தவறும் இல்லை." - அமைச்சர் பொன்முடி.

Published:Updated:
அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அரசுப் பள்ளியில் இன்றைய தினம் அறிவியல் ஆய்வுக்கூடத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவரிடம், ``தமிழகம் என்பதுதான் சரியாக இருக்கும். தமிழ்நாடு என்பது பிரிவினையைக் குறிக்கும்" என ஆளுநர் பேசியிருக்கிறாரே... எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, " 'தமிழ்நாடு' என்பது சட்டமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்ட ஒரு கருத்து. அவர் சொல்லும் 'தமிழகம்' என்பதற்கும், 'தமிழ்நாடு' என்பதற்கும் என்ன வித்தியாசம்... தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம். குறிப்பாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறபோதே, அங்கு ஒரு விவாதம் நடந்தது. சிலர் ஒற்றை ஆட்சியாக்க வேண்டும் என்றனர், சிலர் கூட்டாட்சியாக்க வேண்டும் எனச் சொன்னார்கள். 

செய்தியாளர் சந்திப்பு - பொன்முடி
செய்தியாளர் சந்திப்பு - பொன்முடி

அப்போது அரசியலமைப்பு கமிட்டியில் இருந்த அம்பேத்கர், `யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்று சொன்னார். அதுதான் அரசியலமைப்பில் இருக்கிறது. அப்படி பார்த்தால், மாநிலங்கள்தானே ஒன்றியமாக (யூனியனாக) இருக்கின்றன... அதன் அடிப்படையில்தான், தமிழ்நாடு இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் நம் மாநிலத்தை தமிழ்நாடு என்று சொல்கிறோம். இதில் எந்தத் தவறும் இல்லை என்பதுதான் உண்மையான கருத்து. அதைத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

ஆளுநர் அவர்கள் கடந்த சில காலமாக இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு வரலாறு எந்த அளவுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் காரணத்தால் இதைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். 'தமிழ்நாடு' என்பது சரியான வார்த்தை. அதில் எந்தத் தவறும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நாம் தமிழ்நாடு என்கிறோம். அதேபோல் மகாராஷ்டிரா என்பதில் ராஷ்டா என்று சொன்னாலே அதற்கு 'நாடு' என்றுதான் பெயர். அதிலொன்றும் தவறில்லை.

தமிழக ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி

அவர் ஏதோ ஓர் எண்ணத்துக்காக அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். திராவிடம் என்பதையே சில நேரம் அவர் என்னென்னவோ சொல்லியிருக்கிறார். தேசியகீதத்திலேயே திராவிடம் எனும் சொல் வந்திருப்பதை அறிவீர்கள். திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். ஆளுநரை நாங்கள் வேண்டிக் கேட்டுக்கொள்வதெல்லாம், தமிழக அரசு செய்வதை அவர் நிறைவேற்றித் தர வேண்டும் என்பதுதான்" என்றார்.