Published:Updated:

`சத்துணவு வேலைக்குப் போய்விடுங்கள்!' - அதிகாரிகளைத் திட்டி சர்ச்சையில் சிக்கிய ராஜேந்திர பாலாஜி

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

``பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியாவிட்டால் சத்துணவு வேலைக்குச் சென்றுவிடுங்கள்'' என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

K.T.Rajenthra Bhalaji
K.T.Rajenthra Bhalaji

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

K. T. Rajenthra Bhalaji
K. T. Rajenthra Bhalaji

அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ``மழைபெய்யும் காலங்களில் மழைநீரை சேமிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பே குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழை பெய்வதற்குள் கண்மாய், குளங்களை எல்லாம் தூர்வார வேண்டும். அப்போதுதான் மழைநீரை சேமித்து வைக்க முடியும். அனைத்து மாவட்டங்களிலும் 60 சதவிகிதத்துக்கும் மேலான பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், நம் மாவட்டத்தில் 20 சதவிகிதம் வேலைகள்கூட இன்னும் முடியவில்லை.

எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் குடிமராமத்துப் பணியைத்தான் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். முதல்வர் இதற்கென சிறப்புக் கவனம் எடுத்துச் செய்கிறார். அடிக்கடி கூட்டம் நடத்தி ஆய்வுசெய்கிறார். எனவே, இன்னும் 4 நாள்களுக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும். உடனுக்குடன் பில்களைத் தயார் செய்துவிட வேண்டும். உங்களுடைய வேலையை நீங்கள் முறையாகச் செய்யுங்கள். வேலை சரியாக நடக்காவிட்டால் அனைவரையும் சஸ்பெண்டு செய்துவிடுவோம். இன்னும் நீங்கள் உயர் பதவிக்கெல்லாம் வர வேண்டும். தேவையில்லாமல் எந்தப் பிரச்னையிலும் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

K. T. Rajenthra Bhalaji meeting
K. T. Rajenthra Bhalaji meeting

நீர்நிலைகளைத் தூர்வார வேண்டியது முக்கியமான வேலை. உங்களால் அந்த வேலையை செய்ய முடியவில்லை என்றால் பேசாமல் சத்துணவு வேலைக்குச் சென்றுவிடுங்கள். யாரும் உங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். மேல் அதிகாரிகள் எல்லாம் கீழே உள்ள அலுவலர்களை அடிக்கடி கண்காணியுங்கள்.

காஷ்மீரில் இருந்தெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். ஆனால், அங்கே சுகாதாரம் இல்லை. நகராட்சி ஊழியர்கள் ஹோட்டல்களில் பணம் வாங்கிக் கொண்டு இரவு நேரங்களில் அவர்களுக்குத் தண்ணீர் திறந்துவிடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, அதிகாரிகள் தங்களுக்கு கீழே இருப்பவர்களை நன்றாக கண்காணிக்க வேண்டும். குடிமராமத்துப் பணிகளை மிகவும் விரைந்து முடிக்க வேண்டும்” எனக் கொதிப்புடன் பேசி முடித்தார்.

சத்துணவு பணியாளர்கள் குறித்து அமைச்சர் குறிப்பிட்ட விதத்தால் கொதிப்பில் இருக்கின்றனர் அத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள்.