Election bannerElection banner
Published:Updated:

விருதுநகர்: `மினி கிளினிக்’ திறப்புவிழா... பலூன் வெடித்து விளையாடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகரில் `மினி கிளினிக்’ திறப்புவிழாவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரிப்பன் வெட்டுவதற்கு முன்னதாக, நுழைவு வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த அலங்கார பலூன்களைக் கத்திரிக்கோலால் குத்தி உடைத்து விளையாடினார்.

அ.தி.மு.க-வில் அதிரடியாகப் பேசக்கூடியவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பரபரப்பான பதிலைச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பிவிடுவார். எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வினரே முகம் சுளிக்கும் அளவுக்கு சில சமயங்களில் அமைந்துவிடும் அவரின் பேச்சு. எந்த அளவுக்கு அதிரடியாகப் பேசுவாரோ, அந்த அளவுக்கு காமெடியாகவும் பேசிச் சுற்றியிருப்பவர்களைச் சிரிக்கவைத்துவிடுவார். ``அம்மா இல்லாத சூழலில் மோடிதான் எங்களுக்கு டாடி’’ எனச் செய்தியாளர் சந்திப்பில் பேசி அ.தி.மு.க-வினரையே அலறவிட்டார்.

பலூன் வெடிக்கும் அமைச்ச்சர்
பலூன் வெடிக்கும் அமைச்ச்சர்

அதோடு மட்டுமல்லாமல், அவர், `இந்தியாவின் டாடி’யும்கூட. என்றார். அடுத்த பிரஸ்மீட்டில், `சோனியாவை அன்னை என்று அழைக்கிறார்கள். மோடியை டாடி எனச் சொல்வதில் என்ன தவறு?’ என விளக்கி அசத்தினார். நாட்டுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே மல்லுக்கட்டித் தடுக்கக்கூடிய மனிதர் என்பதால், அவர் `ஸ்டன்ட் மாஸ்டர்’, `மல்யுத்த வீரர்’ என்ற பட்டங்களையும் மோடிக்குச் சூட்டினார்.

பிரதமர் மோடிக்கு மட்டுமல்ல, `எடப்பாடியார் என் தலைவன், புரட்சித்தலைவி எட்டடி பாய்ந்தார். அம்மாவின் செல்லப்பிள்ளையான எடப்பாடியார் 36 அடி பாய்ந்து சென்றுகொண்டிருக்கிறார். அவர் ஒரு ராஜதந்திரி’’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்தார். அதேசமயத்தில், முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன் குறித்து ஒரு பேட்டியில், `வைகைச்செல்வன் ஒரு சீக்குவந்த பிராய்லர் கோழி. அழுகிப்போன தக்காளி. கறிக்கும் ஆகாது. குழம்புக்கும் ஆகாது’ எனப் பேசி வைகைச்செல்வனின் ஆதரவாளர்களைக் கொந்தளிக்கவைத்தார்.

பலூன் வெடித்த அமைச்சர்
பலூன் வெடித்த அமைச்சர்

இப்படியாக அவரது ஒவ்வொரு பேட்டியிலும் சீரியஸும், காமெடியும், அதிர்ச்சியும், ஆக்ரோஷமும் கலந்திருக்கும். ஒரு கட்டத்தில் `ராஜேந்திர பாலாஜியைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்க. தேவையில்லாம பேசி சர்ச்சையைக் கிளம்பிவிடுறாரு’ என சக அமைச்சர்களே முதல்வரிடம் புகார் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால், எதையும கண்டுகொள்ளாமல் வழக்கம்போல பரபரப்பைக் கிளப்பிவருகிறார் ராஜேந்திர பாலாஜி.

இந்தநிலையில், சிவகாசியில் அரசு நிகழ்ச்சியில், குழந்தைகளைப்போல பலூன் விளையாட்டை விளையாடி அனைவரையும் சிரிக்கவைத்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட அய்யனார் காலனியில் `மினி கிளினிக்’ திறப்புவிழா நடைபெற்றது. முதலில், பெண்களின் குலவைச் சத்தத்துடன் அமைச்சருக்கு வீரவாளை வழங்கினார்கள் கட்சியினர். பின்னர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

பலூன் வெடித்த அமைச்சர்
பலூன் வெடித்த அமைச்சர்

அப்போது, ரிப்பன் வெட்டுவதற்கு முன்னதாக, நிலைப்பகுதியின் இருபுறத்திலும் தொங்கவிடப்பட்டிருந்த அலங்கார பலூன்களை சிறு குழந்தைகள் விளையாடுவதுபோல, ஒவ்வொன்றாகக் கத்திரிக்கோலால் குத்தி உடைத்து விளையாடினார். அமைச்சரின் இந்த விளையாட்டுத்தனத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. மாவட்ட ஆட்சியர் கண்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சியினர் உள்ளிட்டோர் வேடிக்கையாகப் பார்த்தனர். அமைச்சரின் பலூன் விளையாட்டு, சிரிப்பையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு