Published:Updated:

அடிக்கு அடி; ரத்தத்துக்கு ரத்தம்... இனிமேல் இதுதான்!

ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி

துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றிப் பேசி ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் தகிக்கவைத்திருக்கிறார் ரஜினிகாந்த். துணை முதல்வரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை அனைவரும் ரஜினிகாந்தின் பேச்சைக் கண்டித்துப் பேச, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ‘ரஜினி பேசியதில் தவறு இல்லை’ என்று ‘யூ டர்ன்’ எடுத்து திகைக்கவைத்திருக்கிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ‘இதெப்படி இருக்கு?’ அரசியலைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

‘‘துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலரும் ரஜினிகாந்த்தின் பேச்சை விமர்சிக்கும்போது, நீங்கள் மட்டும் ஆதரவு தெரிவிப்பது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகாதா?’’

‘‘ரஜினிகாந்தை எதிர்க்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு கிடையாது. ரஜினிகாந்த் பற்றிய கேள்வி வந்தபோது, ‘பெரியார் பற்றிய பேச்சை அவர் தவிர்த்திருக்கலாம்’ என்றுதான் துணை முதல்வர் சொன்னாரே தவிர, ரஜினிகாந்தை பெரிதாகக் கண்டித்தெல்லாம் எதுவும் சொல்லவில்லை. அதேசமயம், என்னுடைய நிலையிலிருந்து நான் என் கருத்தைச் சொல்கிறேன். பெரியார் பற்றி அவமரியாதையாக ரஜினிகாந்த் எதுவுமே பேசியிராத சூழலில், அவருக்கு எதிராக கொடும்பாவி எரிப்பது, கட் அவுட் உடைப்பது, வீட்டை முற்றுகையிடுவது என திராவிடர் கழகத்தினர் செய்த அக்கிரமங் களைக் கண்டித்து நான் குரல்கொடுத்தேன். இதில் என்ன தவறு? இந்தக் கொடுமைகளைக் கண்டு ஒரு தமிழனாக, ஓர் அமைச்சராக எதிர்த்துக் குரல்கொடுக்காமல் இருந்தால், அதுதான் சமூகத்துக்கு நான் இழைக்கின்ற அநீதி!’’

‘‘அதிசயம் - அற்புதம் என அ.தி.மு.க-வை நேரடியாக அட்டாக் செய்த ரஜினிகாந்துக்கு நீங்கள் ஆதரவளிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?’’

‘‘திட்டமிட்டு எவரையும் வெறுத்துப் பேசக்கூடியவர் அல்ல ரஜினிகாந்த். அந்தந்த நேரங்களில் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசுகிறார். எல்லா கட்சித் தலைவர்களையும் அவர் வாழ்த்தவும் செய்திருக்கிறார், விமர்சனமும் செய்திருக்கிறார். விமர்சனம் செய்தவர்களையெல்லாம் நாங்கள் எதிரிகளாகவே பார்க்க முடியாது. விமர்சனங் களில் உள்ள நியாயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ரஜினியின் கருத்தை பொதுவான கருத்தாக மட்டும் பார்க்க வேண்டுமே தவிர, பிரச்னைக்குரிய கருத்தாக விவாதம் செய்து அவரை குற்றவாளியாகப் பார்க்க வேண்டியதில்லை.

அரசியலைப் பொறுத்தவரை அதிசயமும் அற்புதமும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என இவர்கள் எல்லோருமே முதல்வரானது அதிசயம்தான். அடுத்து ‘நாமும் முதலமைச்சர் ஆக வேண்டும்’ என எவரும் நினைத்திருந்து, அது நடந்தாலும் அதிசயம்தான். இப்படி, அரசியலில் எது நடந்தாலும் அது அதிசயம் - அற்புதம்தான். இதைத்தான் ரஜினிகாந்தும் சொல்லியிருக்கிறார். அதை ஏன் அ.தி.மு.க-வுக்கு எதிரான கருத்தாக நீங்கள் பார்க்கிறீர்கள்?’’

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

‘‘ ‘ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருப்பது எனக்கு சங்கடமாக இருக்கிறது’ என்று நீங்கள் கூறியிருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?’’

‘‘அரிவாள், கத்தி, துப்பாக்கி வைத்துக்கொண்டு மிரட்டி உருட்டுவதெல்லாம் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல; அனைவருக்கும் சொந்தமானவை தான். கத்தியை எடுத்துக்கொண்டு வருகிறவனுக்கு எதிராக நாம் குச்சியை வைத்து ஆட்டிக்கொண்டிருக்க முடியாது; கத்தியை காட்ட வேண்டும். குறிப்பிட்ட ஓர் அமைப்பைச் சார்ந்தவர்கள், ரஜினிகாந்த் மற்றும் இந்து கடவுள்களைப் பற்றி கெட்டவார்த்தைகளைப் பேசிக்கொண்டு அவர் வீடு நோக்கிப் போகிறார்கள். அ.தி.மு.க தலைவர்களைப் பற்றி இப்படியொரு விமர்சனம் வந்தால், நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போமா? ரஜினிக்காக உயிரைக் கொடுக்கிற ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். எங்களைப்போல், ரஜினி ரசிகர்களும் மாற்று நடவடிக்கைகளில் இறங்கினால்தானே அவர்கள் பயப்படுவார்கள்!’’

‘‘ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரே இதுபோல் வன்முறையைத் தூண்டிவிடலாமா?’’

‘‘அவர்களை வெட்டுங்கள்; இவர்களை அடியுங்கள் என வன்முறையைத் தூண்டி விடவில்லை. அவர்கள் நூறு பேர் வந்தால், நீங்கள் 500 பேராகத் திரண்டு நின்றால்தானே எதிரில் நிற்பவனுக்கு பயம் வரும். அடிக்கு அடி; ரத்தத்துக்கு ரத்தம்... இதுதான் இனி சரிப்பட்டுவரும். ஒரு சாரார் மட்டுமே பயங்கர வாதத்தை வைத்துக்கொண்டு மற்ற சமுதாயங்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தால், அதை எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்?’’

‘‘பொன்.ராதாகிருஷ்ணன், ‘தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது’ என்று குற்றம்சாட்டிவரும் வேளையில், அ.தி.மு.க அமைச்சரான நீங்கள் இப்படிப் பேசுவது தவறில்லையா?’’

‘‘மறுபடியும் சொல்கிறேன்... நான் யாரையும் சண்டைபோடச் சொல்லவில்லை. ரஜினிகாந்த் கொடும்பாவியை எரிப்பதற்கு அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்? அப்படியென்றால், ரஜினியையும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் நீங்கள் அச்சுறுத்து கிறீர்கள் என்றுதானே அர்த்தம்! இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ரஜினிக்கு எதிராக கொடும்பாவி எரித்தால், ரசிகர்களாகிய நீங்களும் அவர்களுக்கு எதிராக கொடும்பாவி எரியுங்கள் என்றுதான் சொல்கிறேன்!’’

‘‘அமைச்சர் பாஸ்கரன் ‘பா.ஜ.க-விலிருந்து விலக நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்’ என்கிறாரே, உண்மைதானா?’’

‘‘சில இஸ்லாமிய அமைப்புகள், குடியுரிமை சட்டத்திருத்தம் குறித்த தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து, ‘நாங்கள் உங்களுக்கு இனி ஓட்டு போட மாட்டோம்’ என அமைச்சர் பாஸ்கரனிடம் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கோபத்தில் அவரும் மேடையில் பேசும்போது, கொஞ்சம் வேகமாகப் பேசிவிட்டார். ஆனாலும்கூட உடனடியாக அவர் தன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். ஏனெனில், அ.தி.மு.க யாருடன் கூட்டணி சேர்வது என்பதையெல்லாம் முடிவெடுக்கக் கூடிய அதிகாரம், எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதிலெல்லாம் நாங்கள் தலையிடவே முடியாது. நியாய, தர்மங்களை வேண்டுமானால் நாங்கள் எடுத்துச் சொல்லலாம்.’’

ரஜினி
ரஜினி
ரஜினிக்கு எதிராக கொடும்பாவி எரித்தால், ரசிகர்களாகிய நீங்களும் அவர்களுக்கு எதிராக கொடும்பாவி எரியுங்கள்!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

‘‘அ.தி.மு.க அரசை, பா.ஜ.க பிரமுகர்கள் தான் ஆட்டுவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதுபோல், அமைச்சர் பாஸ்கரனை மிரட்டும்விதமாக ‘ஹலோ ராஜ்பவனா...’ என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறாரே எஸ்.வி.சேகர்?’’

‘‘எஸ்.வி.சேகர் என்ன சொன்னார் என எனக்குத் தெரியாது. ‘ஹலோ ராஜ்பவனா...’ என்று கேட்டு அவர் ட்வீட் போட்டதும் அதைக் கேட்டு அமைச்சர் பாஸ்கரனின் மந்திரி பதவியைப் பிடுங்கிவிட்டார்களா என்ன? இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கேலிச்சித்திரங்களாகக் கருதி கடந்துவிட வேண்டும். மற்றபடி, பா.ஜ.க எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை; அ.தி.மு.க-வும் அடிபணிந்து நடக்க வில்லை என்பதுதான் உண்மை.’’

‘‘அ.தி.மு.க - பா.ஜ.க என இரு கட்சிகளுமே கூட்டணியிலிருந்து விலகிவிட நினைப்பதால் தான் தொடர்ந்து உரசிக்கொள் கின்றனவா?’’

‘‘யார், யாரோடு கூட்டணி வைத்தாலும் மக்கள்தான் எஜமானர்கள். ‘யாருக்கு வாக்களித்தால் நாம் நிம்மதியாக வாழ முடியும்’ என்பதைக் கணக்கில்கொண்டுதான் அவர்கள் வாக்களிப்பார்கள். அந்த வகையில், அ.தி.மு.க ஆட்சிதான் மக்களுக்கான பாதுகாப்பான ஆட்சியாக விளங்கிவருகிறது.’’

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

‘‘திராவிடக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பா.ஜ.க மீது தொடர்ந்து தனிப்பட்ட கரிசனம் காட்டிவருவதன் ரகசியம் என்ன?’’

‘‘ஐந்து வருடங்களாக ஊழல் இல்லாத ஆட்சியை நடத்திக்காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. இரண்டாவது முறையாகவும் அசுர பலத்தோடு வெற்றி பெற்றிருக்கிறார். உலக அளவில், இந்தியாவைப் பெருமைப்படச் செய்திருக்கிறார். திராவிடப் பாரம்பர்யத்தில் வந்தவன் என்பதால், இந்த உண்மையை எல்லாம் சொல்லக் கூடாது என்கிறீர்களா? பிரதமர் மோடி மீதான பாசம் என்பது, ஓர் இந்தியன் மீது இன்னோர் இந்தியன் வைத்திருக்கக் கூடிய பற்றும் பாசமும்தான்!’’