Published:Updated:

`தினகரனின் கார் டிரைவர்கூட சீக்கிரம் அ.தி.மு.க-வில் சேர்ந்துவிடுவார்!' - ராஜேந்திரபாலஜி

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

'தினகரன் தனிமையில் இருக்கிறார்' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார்.

ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவியில்லை. ஆனால், ஏசி காரில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க-வில் பதவி வழங்கியிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியும் புதிய பேருந்துகளை இயக்கியும் வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ மிகச்சிறந்த தமிழ்ப் போராளி. தமிழ் உணர்வுகளைப் பிரதிபலித்தவர். தற்போது, அவருக்கு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனை எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.

பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி தராமல், ஏசி காரில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க-வில் பதவி வழங்கியிருப்பது, ஸ்டாலின் குடும்ப பாசத்தில் மூழ்கியுள்ளார் என்பதையே காட்டுகிறது. மத்திய பட்ஜெட் என்பது ஏழைகளுக்கானது. டி.டி.வி. தினகரன் தனிமையில் உள்ளார். அவரது கார் டிரைவர்கூட ஒரு வாரத்தில் அ.தி.மு.க-வுக்கு வந்துவிடுவார். குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியை நடத்த முயன்றார், அது முடியவில்லை. எனவே, மத்திய மாநில அரசுகளை அவர் குறை சொல்கிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட, மக்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு எதிர்க்கும். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மட்டுமே ஆதரிப்போம். மக்களைப் பாதிக்காத வகையில் பால் விலையை உயர்த்தும் பணியில் தமிழக அரசு ஈடுபடும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க தான் மக்கள் இயக்கம் என்பதை ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் ஸ்டாலின் அ.தி.மு.க-வில் சேர்ந்துகொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.