அலசல்
அரசியல்
Published:Updated:

‘‘எனக்கு எதிராக எங்கள் கட்சியிலேயே சிலர்!”

ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி ஆதங்கம்

தமிழக ஆளுங்கட்சி அமைச்சர்களில் கணிசமானோர் மீது சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். நாட்டில் நடக்கும் எந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டாலும் தடாலடியாக பதில் சொல்லி அனைவரையும் அதிரவைக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்துவரும் ஒரு வழக்கு ரொம்பவே அப்செட் செய்துள்ளது. தற்போது அந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதைத் தொடர்ந்து, “கட்சியிலேயே எனக்கு எதிராக சிலர் வேலை செய்கிறார்கள்” என்று கொந்தளித்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், ‘‘வழக்கில் முகாந்திரமில்லை’’ என்று முதலில் சொன்னது லஞ்ச ஒழிப்புத் துறை. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு விசாரணை நடத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட காலத்துக்குள் ராஜேந்திர பாலாஜியின் சொத்துமதிப்பு நிர்ணயிக்கப் பட்ட அளவைவிட குறைந்த அளவே அதிகரித்துள்ளது’’ என்று தெரிவித்தது லஞ்ச ஒழிப்புத் துறை. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “முதற்கட்ட விசாரணை அடிப்படையிலேயே சொத்துக்குவிப்பு வழக்கை முடிக்க முடியுமா? ஏன் அடுத்தகட்ட விசாரணையைத் தொடரக் கூடாது?’’ என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாது, முதற்கட்ட விசாரணை அறிக்கையின் 750 பக்கங்களையும் தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

இதுதான் இப்போது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் ராஜேந்திர பாலாஜிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கை தாக்கல்செய்த மகேந்திரன் என்பவர் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. அவர் நீதிமன்றத்துக்கும் வருவதில்லை. இந்தப் புகாரை ஆரம்பத்திலேயே `ஆதாரம் ஏதுமில்லை’ என்று லஞ்ச ஒழிப்புத் துறை முடித்துவிட்டது. ஆனால், மீண்டும் மீண்டும் இதே புகாரில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதன் பின்னணி என்னவெனத் தெரியவில்லை.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் ஆரம்பத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி முன்னுக்கு வந்தவன். அப்படியொன்றும் பெரிய சொத்தும் என்னிடம் இல்லை. என்னைப் பற்றி எதுவும் தெரியாத ஒருவர், என்மீது ஏன் வழக்கு தொடுக்கிறார் எனத் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. ஆனால், வழக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. இந்த வழக்கின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் எதிர்க்கட்சியினர் கிடையாது. என் வளர்ச்சி பிடிக்காமல் எங்கள் கட்சியிலேயே பொறாமை யோடு இருக்கும் சிலர்தான், என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் இதுபோன்ற பொய்யான வழக்குகளைத் தயார்செய்து யார் மூலமோ தாக்கல் செய்கிறார்கள்.

கட்சியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்குடன் இருக்கிறேன். எல்லோருக்கும் உதவுகிறேன். தெற்கில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கு, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த நான் அரசியலில் பெரிய சக்தியாக இருப்பது உறுத்துகிறது. அதனால் என்னை அசிங்கப்படுத்த இதுபோன்ற அவதூறு வழக்குகளைப் போடவைக்கிறார்கள். இவர்கள் யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன். இந்த வழக்கில் சிறிதும் உண்மையில்லை என்பதை சட்டரீதியில் நிரூபிப்பேன்’’ என்றார்.

ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், ‘‘மெஜாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த தென் மாவட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு, மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த அண்ணன் அமைச்சராக இருந்து சிறப்பாகச் செயல்படுவது பிடிக்கவில்லை. அதனால், ஏதாவது புகாரைச் சுமத்தி எப்படியாவது பதவியைவிட்டு காலிசெய்ய நினைக்கிறார்கள். அவர்கள் யார் என்பது அவருக்கும் தெரிந்து விட்டது. அம்மா உயிரோடு இருந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களை ஒரு வழி செய்துவிடலாம். ஆனால், எடப்பாடியாரிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அதனால், அண்ணன் பொறுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் தன் கோபத்தை வெளிப்படுத்துவார்’’ என்றனர்.

பொதுவாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்தாம் சாமானியர்களைப் புலம்பவைப்பார்கள். சாமானியர் ஒருவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரை புலம்பவைத்திருப்பது ஆச்சர்யமே!

மகேந்திரன் மர்மம்!

அமைச்சர்மீது வழக்கு தொடர்ந்த மகேந்திரன் என்பவர் தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் மட்டும்தான் வெளியாகியிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மகேந்திரனுக்காக பிரபு ராஜதுரை என்கிற வழக்குரைஞர் ஆஜரானார். வழக்கு தொடர்பான தகவல்களையும் மீடியாக்களிடம் உற்சாகமாக அவர் பகிர்ந்துகொண்டார். பிறகு என்ன காரணத்தினாலோ, அவர் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்டார். அமைச்சர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் காரணம் என்று வழக்குரைஞர்கள் வட்டாரம் கிசுகிசுத்தது. அதையடுத்து, ராபர்ட் என்கிற வழக்குரைஞர் இந்த வழக்கில் ஆஜரானார். ஒருகட்டத்துக்குப் பிறகு அவரும் வழக்கிலிருந்து பின்வாங்கிக்கொண்டார்.

அதன் பிறகு, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போதும், மனுதாரர் மகேந்திரனோ, அவர் சார்பில் வழக்குரைஞர்களோ ஆஜராவதில்லை. நீதிபதியே வழக்கை விசாரித்து, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வரிசையாக உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறார். மகேந்திரனைத் தொடர்புகொள்வதற்காக அவர் சார்பாக ஆஜரான வழக்குரைஞர்கள், நீதித்துறை வட்டாரம், காவல் துறை எனப் பல்வேறு தரப்பில் விசாரித்தபோதும் சரியான தகவல் கிடைக்கவில்லை.