Published:Updated:

`அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை’ - ஃபாரூக், உமர், முப்தி கைதுக்கு ராஜ்நாத் சிங் பதில்!

மெஹ்பூபா - பரூக் அப்துல்லா - உமர் அப்துல்லா
மெஹ்பூபா - பரூக் அப்துல்லா - உமர் அப்துல்லா

``காஷ்மீரின் நன்மைகளுக்காக அரசால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லோரும் அதை வரவேற்க வேண்டும்” என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்துசெய்தது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அப்பகுதிகளில் விதித்தது. அணிவகுப்பு மற்றும் பேரணிகளைத் தடை செய்தல், இணையதளச் சேவை மற்றும் மொபைல் சேவைகளைத் தடை செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும். பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களை அப்பகுதியில் அதிக அளவில் நிறுத்தியதுடன், முக்கிய அரசியல் தலைவர் பலரையும் தடுப்புக் காவலில் வைத்தனர்.

' ராஜ்நாத் சிங்
' ராஜ்நாத் சிங்

பெரும்பாலான அரசியல்வாதிகள் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வந்தாலும், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உட்பட முக்கிய தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்படுவதற்கு முன்பு, அச்சுறுத்தும் அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஃபாரூக் அப்துல்லவை கடந்த செப்டம்பர் மாதம் தடுப்புக் காவலில் வைத்தனர். இவரைத் தொடர்ந்து, மெஹ்பூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோரும் இந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

`காஷ்மீர் விவகாரத்தில் பேச வேண்டியது இது மட்டும்தான்!'- ஐ.நா கோரிக்கையை நிராகரித்த இந்தியா

இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசியுள்ளார். அதில், ``காஷ்மீர் அமைதியாக உள்ளது. அங்குள்ள சூழல் முன்னேறிவருகிறது. இதைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் இருக்கும் அரசியல்வாதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை” என்றார்.

காஷ்மீரின் நன்மைகளுக்காக அரசால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லோரும் அதை வரவேற்க வேண்டும். தடுப்புக்காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் ஃபாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். விடுதலையான பின்னர், அவர்கள் காஷ்மீரின் நிலையை மேம்படுத்த உழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்
காஷ்மீர்

தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, பனிபோர்த்திய பின்னணியில் தாடியுடன் இருக்கும் உமர் அப்துல்லாவின் புகைப்படம், சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் பலரும் காஷ்மீரின் நிலைகுறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

`உண்மையில் இது உமர் அப்துல்லா தானா?!' - வைரல் போட்டோவால் கலங்கிய மம்தா
அடுத்த கட்டுரைக்கு