Published:Updated:

`இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி; பதவி விலகிய அமைச்சர்?’ - மகாராஷ்டிரா அரசியலில் புதிய குழப்பம்!

அமைச்சர் அப்துல் சத்தார் மற்றும் உத்தவ் தாக்கரே
அமைச்சர் அப்துல் சத்தார் மற்றும் உத்தவ் தாக்கரே

அமைச்சர் அப்துல் சத்தார், மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்.

மகாராஷ்டிராவில், சிவேசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் கடந்த 30-ம் தேதி மகாராஷ்டிரா அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் சோலங்கே, ``நான் அரசியல் செய்யத் தகுதியற்றவன்” என்று கூறி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர் கட்சித் தலைவர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் வெற்றி கண்டனர். இதனால் பிரகாஷ் சோலங்கே ராஜினாமா முடிவை கைவிட்டார். இந்நிலையில் சிவசேனாவின் அப்துல் சத்தார், தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் அப்துல் சத்தார்
அமைச்சர் அப்துல் சத்தார்

அமைச்சர் அப்துல் சத்தார், மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். மாநில அமைச்சரவையில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்கப்படவில்லை என்ற வருத்தத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. சிவசேனாவின் தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, ``நாங்கள் இன்னும் அவரின் ராஜினாமா கடிதத்தைப் பெறவில்லை” என்று கூறியுள்ளார்.

`அரசியலுக்குத் தகுதியற்றவன்; எம்.எல்.ஏ-வின் ராஜினாமா முடிவு!’ - தொடரும் மகாராஷ்டிரா குழப்பம்

இதுதொடர்பாக சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், ``அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது, சில தலைவர்கள் தங்களுக்கு விருப்பமான பதவி கிடைக்காததால் ஏமாற்றமடைகின்றனர். அவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அரசு மூன்று கட்சிகளின் கூட்டணிகளால் உருவானது. சிவசேனாவுக்கு மட்டுமானது அல்ல. அப்துல் சத்தார் வெளியிலிருந்து வந்தபோதும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவுடனான பேச்சு வார்த்தைக்குப் பிறகு, அவர் ஏமாற்றமடைந்துள்ளார்” என்றார்.

அமைச்சர் அப்துல் சத்தார்
அமைச்சர் அப்துல் சத்தார்

அப்துல் சத்தாரின் மகன் சமீர் சத்தார், ``எனக்கு இதுகுறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. ராஜினாமா குறித்து அவர்தான் பேச வேண்டும். கண்டிப்பாக அவர் பேசுவார். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி குறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ``மூன்று கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், மூன்று சக்கரத்தில் ஆட்சி நீண்ட நாள் ஓடும் என நான் நினைக்கவில்லை” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே உட்பட 36 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்ட பின் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி விலகுவது மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர அரசை விடாமல் துரத்தும் பதவி மோதல்!- உத்தவ் தாக்கரேவுக்குப் புதிய தலைவலி
அடுத்த கட்டுரைக்கு