Published:Updated:

கோயில் நிலங்களில் பள்ளிக்கூடங்கள் வரும்!

சேகர் பாபு
பிரீமியம் ஸ்டோரி
சேகர் பாபு

- பொளேர் சேகர் பாபு

கோயில் நிலங்களில் பள்ளிக்கூடங்கள் வரும்!

- பொளேர் சேகர் பாபு

Published:Updated:
சேகர் பாபு
பிரீமியம் ஸ்டோரி
சேகர் பாபு

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்கள் மீட்பு, கொரோனா பேரிடர் நிவாரணப் பணி, கோயில்களில் அதிரடி ஆய்வு என பிஸியாகிவிட்டார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. சமீபத்தில், ‘பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று அவர் கூறிய கருத்து, ஒரு பக்கம் விமர்சனங்களை உருவாக்கினாலும், மறுபக்கம் பா.ஜ.க வட்டாரங்களில் இருந்துகூட பாராட்டைப் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில், அமைச்சர் சேகர்பாபுவைச் சந்தித்தோம். ‘‘மன்னராட்சி காலங்களில், கோயில்களின் திருப்பணி, குடமுழுக்கு போன்ற நிகழ்வுகளை மன்னர்கள்தான் நடத்துவார்கள். மக்களாட்சியில் இதற்கான பொறுப்பு, இந்து அறநிலையத்துறையின் கீழ் வந்திருக்கிறது. அதை விரைந்து முடிக்கப் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுவருகிறோம். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன’’ என்றபடி நம் கேள்விகளை எதிர்கொண்டார்.

‘‘பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர், ‘தி.மு.க இந்து விரோதக் கட்சி’ எனத் தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்களே?’’

‘‘தி.மு.க இந்துக்களுக்கு எதிரான இயக்கமல்ல. மதிப்புக்குரிய அண்ணியார்கூட (முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவைக் குறிப்பிடுகிறார்) தீவிர தெய்வபக்தி உடையவர். சாமி கும்பிடக் கூடாது என்று தி.மு.க எங்கும் சொன்னதில்லை. தற்போது, கொரோனா நிவாரணமாக அர்ச்சகர்களுக்கு பத்து கிலோ பொன்னி அரிசி, 15 விதமான மளிகைப் பொருள்களுடன் 4,000 ரூபாய் பணமும் அளித்திருக்கிறோம். பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம். சமீபத்தில்கூட பா.ஜ.க தரப்பில், ‘மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தீ விபத்துக்கு பிரசன்னம் பார்க்க வேண்டும்’ என்றார்கள். உடனே ஏற்றுக்கொண்டோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளைக் கூறினால், அவற்றுக்கு நாகரிகமாக பதிலடி கொடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.’’

‘‘ `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்கிற திட்டத்தை எப்போது முழுமையாகச் செயல்படுத்துவீர்கள்?’’

‘‘சைவ, வைணவ திருக்கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை, 2006-ம் ஆண்டு கலைஞர் கொண்டுவந்தார். இதன்படி ஆறு பாடசாலைகளில் பயின்ற 207 பேர் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு மீண்டும் தேர்வுவைத்து, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சிறப்பு பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். பயிற்சி முடித்தவுடன், அவர்கள் படிப்படியாக திருக்கோயில்களில் பணியமர்த்தப்படுவார்கள். நிறைய கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கெனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கும், புதிதாக பணியமர்த்தப்படுபவர்களுக்கும் இடையே எந்த முரண்பாடும் ஏற்படாது என்கிற நம்பிக்கை இருக்கிறது. ‘அனைவரும் சமம்’ என்கிற நிலையை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.’’

‘‘ `பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று நீங்கள் கூறிய கருத்து ஒரு பக்கம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், மறுபக்கம் விமர்சனங்களையும் உருவாக்கியிருக்கிறதே?’’

‘‘கோயில்களில் தெய்வங்களுக்குப் பெண்களே பூஜைகள் செய்வது ஒன்றும் புதிதல்ல. மேல்மருவத்தூர் கோயிலில் பெண்கள்தான் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். இது போன்ற பல உதாரணங்களைக் காட்ட முடியும். சொத்தில் சம பங்கு அளித்துவிட்டோம். கருவறையிலும் அவர்களுக்குச் சம பங்கு அளிப்பதில் என்ன தவறு? இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம்தான்; பாலின பேதமில்லை. பெண்கள் அர்ச்சகராக விரும்பினால், அவர்களுக்கு முறையான ஆகமப் பயிற்சிகளை அளித்து அர்ச்சகராக்குவதற்கு உண்டான முயற்சிகளைச் செய்வோம். அதேபோல, முக்கியமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்கிற பதாகையை வைக்கவிருக்கிறோம்.’’

கோயில் நிலங்களில் பள்ளிக்கூடங்கள் வரும்!

‘‘எத்தனை கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன?’’

‘‘தற்போது கிடைத்திருக்கும் தரவுகளின்படி, திருக்கோயில்களுக்குச் சொந்தமான 7,000 ஏக்கர் நிலங்கள், 960 ஏக்கர் வீட்டுமனைகள், 190 ஏக்கர் கட்டடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. முதலமைச்சர் உத்தரவுப்படி, அவற்றைச் சட்டரீதியாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும் மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். ஆக்கிரமிப்பாளர்கள் எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும், அமைப்பினராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்படும். அந்த நிலங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்விச் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக அவை நிறைவேற்றப்படும்.’’

‘‘கோயில் சிலைகளைப் பாதுகாப்பதற்கு என்ன திட்டமிருக்கிறது?’’

‘‘புராதன மதிப்புமிக்க கோயில் சிலைகளைப் பாதுகாப்பதற்கு, 16 உலோக திருமேனி பாதுகாப்பு அறைகள் தயார்நிலையில் இருக்கின்றன. பல்வேறு கோயில்களில், 303 கோடி ரூபாயில் உலோக திருமேனி பாதுகாப்பு அறைகளை அமைப்பதற்கான திட்டமும் இருக்கிறது.’’

‘‘ `கோயில்கள் திறக்கப்படாதபோது, டாஸ்மாக் மட்டும் திறப்பது நியாயமா?’ என பா.ஜ.க கேள்வி எழுப்புகிறதே?’’

‘‘கொரோனா உச்சத்தில் இருந்தபோதுகூட, கர்நாடகாவில் மதுக்கடைகள் மூடப்படவில்லை. அந்தமான், நிகோபார் தீவுகளில் ஒன்றிய அரசின் நிர்வாகி ஒருவரை பணியமர்த்திய பிறகு, அங்கு மது விற்பதற்கு அனுமதியளித்திருக்கிறார்கள். கொரோனா தாக்குதல் படிப்படியாகக் குறைந்த பிறகுதான் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில், கொரோனா பேரிடர் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் முதல்வர் கொண்டு சென்றிருக்கிறார். எதையாவது விமர்சனம் செய்ய வேண்டுமே என பா.ஜ.க-வினர் பேசக் கூடாது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism