Published:Updated:

``அண்ணாமலை ஸ்டன்ட் அடிக்கிறார்; ஆதாரத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள்!" - அமைச்சர் சேகர் பாபு காட்டம்

சேகர் பாபு

``இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1959-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்துக்கொண்டால், இந்த 20 மாத காலம்போல் ஆன்மிகப் புரட்சி எந்தக் காலத்திலும் ஏற்படவில்லை." - அமைச்சர் சேகர் பாபு

``அண்ணாமலை ஸ்டன்ட் அடிக்கிறார்; ஆதாரத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள்!" - அமைச்சர் சேகர் பாபு காட்டம்

``இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1959-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்துக்கொண்டால், இந்த 20 மாத காலம்போல் ஆன்மிகப் புரட்சி எந்தக் காலத்திலும் ஏற்படவில்லை." - அமைச்சர் சேகர் பாபு

Published:Updated:
சேகர் பாபு

`` ‘திருச்செந்தூர் கோயிலில் 5,309 மாடுகள் காணாமல் போகவில்லை' என அமைச்சர் சேகர் பாபு சொல்லட்டும். கிட்டத்தட்ட 1,302 கோடி ரூபாய்க்கு அறநிலையத்துறையில் இன்டர்னல் ஆடிட்டிங்கில் அப்ஜக்‌ஷன் இல்லையென அவர் சொல்லட்டும். கிட்டத்தட்ட 15 லட்சம் பில்கள் அப்ஜெக்‌ஷனில் இல்லையென அவர் தெளிவுபடுத்தட்டும். கோயில் உண்டியலில் மக்கள் போடும் பணத்தை எடுத்து மிக்‌ஷர் வாங்கி சாப்பிடக் கூடாது" என திருச்சி விமான நிலையத்தில் வைத்து அமைச்சர் சேகர் பாபுவை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதே திருச்சி விமான நிலையத்தில் வைத்து அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்திருக்கிறார்.

அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், ``அரசினுடைய சொத்துகளைச் சொந்தமாக அபகரித்தோ அல்லது வேண்டியவர்களுக்கு சலுகை காட்டி அதனால் அரசுக்கு ஏதாவது பொருள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள். அவர் சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் அதற்கு நாங்கள் தலைகுணிந்து பரிகாரம் செய்யத் தயாராக இருக்கிறோம். இறை சொத்து இறை அன்பர்களுக்கே, இறைவனுக்கே, இறைவனுடைய சொத்தை யார் களவாடினாலும் அதை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான், எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

``அண்ணாமலை ஸ்டன்ட் அடிக்கிறார்; ஆதாரத்தைக் கொடுக்கச் சொல்லுங்கள்!" - அமைச்சர் சேகர் பாபு காட்டம்

நிலுவையிலே இருந்த வாடகை பாக்கி 280 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே களவு போயிருந்த 282 சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. 62 சிலைகள் பல்வேறு நாடுகளில் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இப்படி இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1959-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்துக்கொண்டால், இந்த 20 மாத காலம்போல் ஆன்மிகப் புரட்சி எந்தக் காலத்திலும் ஏற்படவில்லை என நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம். குற்றச்சாட்டுகள் எதை வேண்டுமானாலும் கூறட்டும். தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அதற்கு பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். சென்னை துறைமுகத்தில் எனக்கோ என்னுடைய உறவினர்களுக்கோ இடம் இருக்கிறது என அண்ணாமலை நிரூபிக்கத் தயாரா?... இது குறித்து நான் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டபோதிலும், துறையில் குறை சொல்ல எதுவுமில்லை என்பதற்காக தேவையில்லாத அரசியல் ஸ்டன்ட்டை அண்ணாமலை செய்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “திருச்செந்தூர் கோயில் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பது இப்போது நடந்ததல்ல. 2007-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக அவர் கருத்துகளைச் சொல்லிவருகிறார். புதிதாக இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 20 மாதக் காலங்களில் திருக்கோயிலுக்குத் தானமாக வருகின்ற பசுக்கள் போன்றவை, திருக்கோயில் பயன்பாட்டுக்குப் போக, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையோடு சுய உதவிக் குழுக்களுக்குத் தானமாக வழங்கப்பட்டுவருகின்றன. தவிர, மாடுகளோ அல்லது திருக்கோயிலுக்கு தானமாக வருகின்ற பொருள்களோ முறையற்று எந்தவகையிலும் யாருக்கும் அளிப்பதில்லை. அப்படி நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த 20 மாதங்களில் எங்காவது ஒரு சம்பவம் நடந்திருந்தால் அதற்குண்டான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது.

1,500 திருக்கோயில்களில் 1,000 கோடி ரூபாயில் திருப்பணி, 100 கோடி ரூபாயில் பழைமை வாய்ந்த 1,000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிற 104 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் வைப்புநிதி இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரித்துக் கொடுத்து, ரூ.129.50 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

மேலும், இந்தாண்டு 2,000 திருக்கோயில்கள் ஒருகால பூஜைத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, 40 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியிருக்கிறது. 6 திருக்கோயில்களில் புதிதாக முழுநேர அன்னதானத் திட்டம், 15 திருக்கோயில்களில் மருத்துவமனை, 15 திருக்கோயில்களில் நாள்தோறும் பிரசாதம் வழங்குகிற திட்டம், 5 மாவட்டங்களில் மகா சிவராத்திரிக்கு விழா இப்படி அடுக்கிக்கொண்டே போகின்ற அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறை நாலுகால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. இதை சகிக்க முடியாதவர்கள், இதை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்கள், ஏதாவது ஒருவகையில் குற்றம்சுமத்திக்கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற வசைமொழிகள் எங்களுடைய பயணத்தின் வேகத்தைக் குறைக்காது. இன்னும் கூட்டும்” என்றார்.