Published:Updated:

`ஹெச்.ராஜா, கோயில் நில ஆக்கிரமிப்பு விவரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுப்போம்!' - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

``கொரோனா தாக்கம் முழுவதும் குறைந்தவுடன், கோயில் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்" என்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

"முன்னாள் அமைச்சரோ, இன்னாள் அமைச்சரோ, சொந்தக் கட்சிக்காரர்கள், முன்னாள், இன்னாள் அதிகாரிகள் யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிவகங்கையில் தெரிவித்தார்.

சீல் வைக்கப்பட்ட இடம்
சீல் வைக்கப்பட்ட இடம்

சிவகங்கையில் கௌரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தரப்பினர் ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிலத்தை கடந்த 19-ம் தேதி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ள நிலையில், மீட்கப்பட்ட கோயில் நிலத்தை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை கலெக்டர், அதிகாரிகளுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "சரவணன் என்பவர் ஆக்கிரமித்த கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் சிலரின் ஒத்துழைப்புடன் சரவணன் என்பவரின் பெயரில் ஆவணங்களை மாற்றி இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சேகர் பாபு
சேகர் பாபு

முன்னாள் அமைச்சரோ, இன்னாள் அமைச்சரோ, சொந்தக் கட்சிக்காரர்கள், முன்னாள், இன்னாள் அதிகாரிகள் யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புக்குள்ளான கௌரி விநாயகர் கோயிலின் அனைத்து நிலங்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தவறு செய்தவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை ஆண்டவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். தண்டனை வழங்குவான். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் யார் யாரிடம் பேசினார் என்பற்கான அத்தனை ஆதாரங்களும் அரசிடம் உள்ளன. அவர் தவறு செய்யவில்லையென்றால், கோயில் நிலத்தை மீட்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட இடம்
ஆக்கிரமிக்கப்பட்ட இடம்

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் அளவுக்குக் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். அதற்கான விவரங்களை வழங்கினால் அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்போம். கொரோனா தாக்கம் முழுவதும் குறைந்தவுடன், கோயில் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு