Published:Updated:

`நடிகர்கள் பாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரேநாளில் முதல்வராக நினைக்கிறார்கள்!' - அமைச்சர் செல்லூர் ராஜு

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க நெல்லிக்காய் முட்டையை அவிழ்த்து விட்டது போல ஆகிவிடும் என தி.மு.க நினைத்தது. அவர்கள் நினைத்தது நிறைவேறவில்லை.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

``தாய்ப்பறவையிடமிருந்து பிரிந்து சென்ற குஞ்சுகள் மீண்டும் திரும்பி வருவது போல் அ.ம.மு.கவுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்துக்கு வருகிறர்கள்'' என்று மதுரையில் நடந்த விழாவில் உற்சாகமாகப் பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜு.

அ.தி.மு.க நிகழ்ச்சி
அ.தி.மு.க நிகழ்ச்சி

அ.ம.மு.கவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.கவில் நேற்று இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ``அ.ம.மு.கவிலிருந்து அ.தி.மு.கவுக்கு வருகின்றவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்" என்றார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது,`` `நீர் அடித்து நீர் விலகாது' என்பார்கள். உணர்ச்சி வசப்பட்டு அ.தி.மு.கவிலிருந்து அ.ம.மு.கவுக்குச் சென்றனர். அ.தி.மு.கவின் ஒரே எதிரி தி.மு.கவும் ஸ்டாலினும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் இங்கு வந்துள்ளனர்.

இப்போதுள்ள நடிகர்கள் பாஸ்ட் ஃபுட் மாதிரி, ஒரே நாளில் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு நடிகர் கட்சி தொடங்கி அவராகப் பேசிக்கொண்டுள்ளார். இன்னொரு நடிகர் 2021-ல் கட்சி தொடங்குவேன் என்று கூறி வருகிறார். எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருக்கும்போது முதல்வராக ஆசைப்படவில்லை. கருணாநிதியிடமிருந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தார்.

அ.தி.மு.க நிகழ்ச்சி
அ.தி.மு.க நிகழ்ச்சி
ஈ.ஜெ.நந்தகுமார்

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க நெல்லிக்காய் முட்டையை அவிழ்த்து விட்டது போல ஆகிவிடும் என தி.மு.க நினைத்தது. அவர்கள் நினைத்தது நிறைவேறவில்லை. இன்று தாய்ப் பறவையிடமிருந்து பிரிந்து சென்ற குஞ்சுகள் மீண்டும் வந்துள்ளன. இப்போதைய ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை. முதல்வர் இரவு, பகலாக உழைத்து வருகிறார்''என்றார்.