Published:Updated:

“ஸ்டாலின் முதலில் அழகிரியை ‘ஒன்றிணைய’ அழைக்கட்டும்!”

செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ கிண்டல்

“ஸ்டாலின் முதலில் அழகிரியை ‘ஒன்றிணைய’ அழைக்கட்டும்!”

செல்லூர் ராஜூ கிண்டல்

Published:Updated:
செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ
‘அ.தி.மு.க-வில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இடையே பனிப்போர் நிலவுகிறது. விரைவில் கட்சி உடையப்போகிறது’ என்கின்றன எதிர்க்கட்சிகள். முதல்வரும் துணை முதல்வரும் போட்டிபோட்டுக்கொண்டு தனித்தனியே தங்களை முன்னிலைப்படுத்தி விளம்பரங்கள் செய்கின்றனர். பரபரப்பான இந்த அரசியல் சூழலில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பேசினேன்...

“ `அ.தி.மு.க உடையப்போகிறது’ என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தை வலுப்படுத்துவதுபோல், ஓ.பி.எஸ் இன்னும் தேர்தல் பரப்புரையை ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்துகிறாரே..?’’

“முதல்வர் என்ற அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி இப்போது மாவட்டம்தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளைக் கேட்டறிகிறார். விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் மத குருமார்களைச் சந்திக்கிறார்... மக்களிடையே பரப்புரையும் செய்கிறார். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. எனவே, துணை முதல்வரும் உரிய நேரத்தில் தேர்தல் களத்துக்கு வருவார்... பிரசாரம் செய்வார். ஆனால், இதைவைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கிறார்களென்றால், அவர்கள் பக்கம் ஏதோ ‘பலவீனம்’ இருக்கிறது என்றுதான் அர்த்தம்!’’

“முதல்வரும் துணை முதல்வரும் தனித்தனியே தங்களை முதன்மைப்படுத்தி விளம்பரங்கள் வெளியிட்டுவருவது அவர்களிடையேயான மோதலை அம்பலமாக்குகிறதுதானே?’’

“தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்துகொள்கிறார்கள்... யாரையும் சாடவில்லை. துணை முதல்வரும் தான் யார், தான் கடந்துவந்த பாதை என்ன என்பதையெல்லாம் தெளிவுபடுத்தும்விதமாக விளம்பரம் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார்... இது ஒன்றும் தவறு இல்லையே? இதற்காகத் தலைவர்களிடையே பிரச்னை என்றெல்லாம் கருத வேண்டியதில்லை. நேற்றுகூட முதல்வரும் துணை முதல்வரும் ஒரே ஜீப்பில்தான் பவனி வந்து மக்களைச் சந்தித்தார்கள். அ.தி.மு.க தொண்டர்களும் ஒருமுகமாகத்தான் இருந்துவருகிறோம்!’’

“அதனால்தான் ‘தலைவர்கள் துரோகமிழைத்தாலும் தொண்டர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள்’ என்கிறாரோ அமைச்சர் சி.வி.சண்முகம்?’’

“அ.தி.மு.க வரலாற்றில், எம்.ஜி.ஆருக்கு அடுத்த தலைவராக இருந்த நாஞ்சில் மனோகரன் கட்சியைவிட்டுப் போனார். ஆனாலும், கட்சிக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. இதேபோல், ஜெயலலிதாவை எதிர்த்துக்கொண்டு, நெடுஞ்செழியன் மற்றும் நால்வர் அணித் தலைவர்கள் வெளியே சென்றார்கள். அப்போதும் ஒன்றும் ஆகவில்லை. ஆக, அ.தி.மு.க தொண்டர்கள் எம்.ஜி.ஆரையும் இரட்டை இலையையும்தான் பார்ப்பார்களே தவிர, வேறு எந்தத் தலைவரின் பின்னாலும் போக மாட்டார்கள். அதனால்தான் ‘இந்தத் தலைவர்’ என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை சி.வி.சண்முகம்... அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் துணை முதல்வர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளரைக் குறிப்பிட்டுச் சொன்னதாகச் சந்தேகப்படுகிறீர்கள்?’’

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

“ `இரட்டை இலைச் சின்னத்தை முடக்கச் சதி நடக்கிறது’ என்றும் சி.வி.சண்முகம் சொல்கிறார். சதி செய்வது கூட்டணியிலுள்ள பா.ஜ.க-வா அல்லது அ.தி.மு.க தலைவர்களேவா?’’

“பா.ஜ.க சதி செய்கிறது என்று ஏன் சந்தேகிக்கிறீர்கள்... அரசியலில் எந்தக் கட்சியும் சதி செய்யலாம். சி.வி.சண்முகம், அவருக்குத் தெரிந்த கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். இது குறித்து அவரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இழந்த சின்னத்தைத் திரும்பப் பெற்ற ஒரே கட்சி இந்தியாவிலேயே அ.தி.மு.க மட்டும்தான். எங்கள் கட்சிச் சின்னத்தை யாரும் பறிக்க முடியாது. அப்படிப் பறித்தாலும் நாங்கள் திரும்பப் பெற்றுவிடுவோம்!’’

“ `அ.தி.மு.க-விலிருந்து எந்த நேரத்திலும் ஓ.பி.எஸ் கழன்று போகலாம்’ என்று மு.க.ஸ்டாலின் சொல்வதை உறுதிப்படுத்துவதாகத்தானே அண்மைக்கால நிகழ்வுகள் அமைகின்றன..?’’

“எங்களைப் பற்றி ஸ்டாலினுக்கு என்ன கவலை? ‘ஒன்றிணைவோம் வா’ என்று எல்லோரையும் அழைப்பவர், முதலில் அவருடைய அண்ணன் மு.க.அழகிரியை அழைக்கலாமே... ‘என்ன தவறு செய்தேன் தோழா... சொல்லு தம்பி...’ என்றெல்லாம் கூப்பாடு போடுகிறாரே அழகிரி.’’

“முதல்வர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க - அ.தி.மு.க இடையே இன்னமும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையே..?”

“எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அறிவித்துவிட்டோம். மற்றபடி யார் அறிவிக்கிறார்கள் அல்லது அறிவிக்கவில்லை என்பது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. ‘அ.தி.மு.க அரசு மீண்டும் அமைவதற்குப் பாறைபோல் உறுதியாகத் துணை நிற்போம்’ என்று பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமையிலுள்ள அமித் ஷாவும் சொல்லிவிட்டார். எனவே, அசுவமேத யாகம் மாதிரி எங்கள் குதிரை புறப்பட்டுவிட்டது. இனி இந்தக் குதிரையை ஆதரிக்கிறவர்கள் ஆதரிக்கலாம்... எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம்.’’

“ஆனால், ‘பா.ஜ.க-தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்’ என்று நீங்களே ‘சேம் சைடு கோல்’ போட்டிருக்கிறீர்களே?’’

“கேள்வியைப் பொறுத்துத்தான் ஆத்மார்த்தமான பதில் வரும். ‘முதல்வர் வேட்பாளர் குறித்து இங்குள்ள மாநில பா.ஜ.க தலைவர்கள் யாரும் அறிவிக்கவில்லையே?’ என்று என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. நானும் ‘மாநிலக் கட்சிகளில்தான் இங்குள்ள தலைவர்கள் அறிவிப்பார்கள். தேசியக் கட்சிகளில் அகில இந்தியத் தலைமைதான் அறிவிக்கும். காரணம்... அவர்களுக்கென்று தனிக் கோட்பாடு, கொள்கை, வழிமுறைகள் இருக்கின்றன’ என்று சொல்லியிருந்தேன். ஆனால், ‘பா.ஜ.க-தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்’ என்று நான் சொன்னதாகத் தவறான முறையில் செய்தி வெளியிட்டுவிட்டார்கள்.’’

“நீங்களும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அடிக்கடி கன்டென்ட் கொடுக்கிறீர்களே... முதல்வர் கண்டிக்க மாட்டாரா?’’

(சிரிக்கிறார்) “ `கொஞ்சம் யோசனை பண்ணிப் பதறாமல் பேசுங்கள்... அவசரப்படாதீர்கள்’ என்று என்னிடம் முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். அதேபோல், திண்டுக்கல் சீனிவாசனிடமும் ‘என்னண்ணே பார்த்துப் பேசுங்கண்ணே...’ என்று சொல்வார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism