Published:Updated:

`ப.சிதம்பரத்துக்கு நடந்ததுதான் ஸ்டாலினுக்கும் நடக்கும்!' - அமைச்சர் செல்லூர் ராஜு

Sellur Raju
Sellur Raju

``சிதம்பரத்துக்கு நடந்ததுதான் ஸ்டாலினுக்கும் நடக்கும் என்று ஆளுநரால் எச்சரிக்கப்பட்டதால்தான் போராட்டத்தை வாபஸ் பெற்றார்'' என்று செல்லூர் ராஜு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஓபுளா படித்துறையில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADMK meeting
ADMK meeting

பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, ``அ.தி.மு.க தொடங்கப்படவில்லையென்றால் தி.மு.கவினர் அண்ணாவின் புகழை மறைத்திருப்பார்கள். முப்பெரும் விழா என்று சொல்லிவிட்டு ஒரு ஊரில் மட்டும் விழா நடத்திவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

அ.தி.மு.கவைப்போல அண்ணா பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஊரிலும் நடத்துவதில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் எம்.எல்.ஏக்களாக, எம்.பிக்களாக இருக்க காரணம் அறிஞர் அண்ணாதான்.

ADMK meeting
ADMK meeting

இந்தி மொழி விழாவில், இந்தி மொழியைப் பேச வேண்டும் என்று அமித் ஷா சொன்னார். இதைப்போல் ப.சிதம்பரமும் ஏற்கெனவே பேசியுள்ளார். ஆனால், இதை மட்டும் எதிர்க்கிறார்கள். அமித் ஷாவுக்கு எதிராக ஸ்டாலின் போராட்டம் அறிவித்தார். ஆனால், ஆளுநர் மாளிகைக்குச் சென்றதும் போராட்டம் வாபஸ் என்று கூறுகிறார்.

ஆளுநரைப் பார்த்த பின்புதான், `அமித் ஷாவின் முழுமையான பேச்சை தெரிந்து கொள்ளமுடிந்தது' என்கிறார் ஸ்டாலின். இதே ஆளுநர் மக்களிடம் மனு வாங்குவதை எதிர்த்துப் பேசிய ஸ்டாலின், இப்போது ஆளுநர் சொன்னதால் போராட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டதாகச் சொல்கிறார். உங்களுடைய வண்டவாளங்கள் தூசி தட்டப்பட்டு மத்திய அரசு மிரட்டியதால் போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டீர்களா ஸ்டாலின்?

ADMK meeting
ADMK meeting

ஆளுநருக்கு அதிகாரம் தேவையில்லை என்று அன்று வீராதி வீரர் போல வசனம் பேசிய ஸ்டாலின், இப்போது ஆளுநர் சொல்லிவிட்டார் என்பதற்காக போராட்டத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார். காரணம், போராட்டம் நடத்தினால் சிதம்பரத்துக்கு நடந்ததுதான் ஸ்டாலினுக்கும் நடக்கும் என்று மிரட்டப்பட்டிருக்கிறார்'' என்றார். செல்லூர் ராஜுவின் இப்பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு