Published:Updated:

`எஸ்.ஆர்.பியிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்!' - அமைச்சர் செல்லூர் ராஜு #CAA

``எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், எந்த அடிப்படையில் மசோதா குறித்து பேசினார் என்பது பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க பற்றி குறைகூற ஸ்டாலினுக்கோ, துரைமுருகனுக்கு எந்தத் தகுதியும் இல்லை''.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

குடியுரிமை மசோதாவிற்கு எதிராக தி.மு.க சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் செல்லூர்ராஜு விமர்சித்துப் பேசினார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``குடியுரிமை மசோதாவைப் பற்றிப் பேசியுள்ள நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசவிரும்பவில்லை. எதையாவது பேசிவிட்டு அவர் மீண்டும் நடிக்கச் சென்றுவிடுவார். அதனால், கமல் பேச்சைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

குடியுரிமை மசோதாவை எதிர்க்கும் ஸ்டாலின்தான் தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் செய்தவர். தி.மு.க போராட்டம் நடத்துவது பச்சோந்தித்தனமாகும். ஸ்டாலின் நடத்துகிற போராட்டத்தால் தி.மு.கவினரே சோர்ந்து விட்டனர்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

ஸ்டாலினின் கோரிக்கை ஏற்று உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிட்டும், தற்போது தேர்தலுக்குத் தடை கேட்டுச் சென்றவரை, நீதிமன்றம் விரட்டியடித்துள்ளது'' என்றார்.

`எஸ்.ஆர்.பி-க்கு அழுத்தம் கொடுத்த அரசு துணைச் செயலர் யார்?!'- துரைமுருகன் அறிக்கையின் அதிர்ச்சிப் பின்னணி

அவரிடம்,`குடியுரிமை மசோதாவை ஆதரித்து வாக்களிக்க, அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி.பாலசுப்பிரமணியனுக்குத் தலைமைச் செயலகத்திலிருந்து உத்தரவு போனதாக துரைமுருகன் கூறியுள்ளாரே?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த செல்லூர் ராஜு, ``எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், எந்த அடிப்படையில் மசோதா குறித்துப் பேசினார் என்பதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க பற்றி குறைகூற ஸ்டாலினுக்கோ, துரைமுருகனுக்கோ எந்தத் தகுதியும் இல்லை.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச் செல்கின்றனர். தமிழக நலனுக்காக அவர்கள் எந்தக் கோரிக்கையும் வைப்பதில்லை. நகராட்சி, மாநகராட்சிற்கு விரைவில் தேர்தல் நடைபெறும். அதிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும்'' என்றார்.