Published:Updated:

``எடப்பாடியாரின் ராசி அப்படி!’’ - பவானிசாகர் அணைத் திறப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்
பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்

முதல்வர் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது பவானிசாகர் அணை. இந்த அணை மூலமாக, ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாகியிருக்கிறது. 105 அடி உயரமுள்ள அணையில் 100 அடிக்கு மேலாக கடல்போலத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், தொடர்ந்து அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துவருகிறது. `அணை நிரம்பியதும் அந்த நீரை உபரிநீராக வெளியேற்றி வீணாக்காமல், பாசனத்துக்காகத் திறந்துவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்’ என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அணையிலிருந்து நீர் திறப்பின்போது
அணையிலிருந்து நீர் திறப்பின்போது

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்காலில் 120 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கலெக்டர், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் கலந்துகொண்டு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசனத்துக்கு முதல்போக பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட்டனர்.

ஈரோடு: `7 நாள்களில் 14 அடி உயர்வு!’ - 100 அடியைக் கடந்த பவானி சாகர் அணை

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,``விவசாயிகள் தமிழக முதல்வரிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, இன்று பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனால், 1.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் அனைத்துப் பொருள்களும் தயார்நிலையில் தேவையான அளவுக்கு உள்ளன. முதல்வர் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மூன்றாவது முறையாக பவானிசாகர் அணை நிரம்பியுள்ளது. அந்த அளவுக்கு நம்முடைய முதல்வர் ராசியானவர்” என்றார்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, ``10-ம் வகுப்பு மதிப்பெண் வெளியீட்டில் எந்த ஒரு குளறுபடியும் இல்லை. மதிப்பீடு சம்பந்தமாக தேவையற்ற விமர்சனங்கள் தேவையில்லை. தற்போது 11 தொலைகாட்சி சேனல்களில் மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகின்றன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு