Published:Updated:

கரூர்: ``ஆளில்லாத ஊரில் ஏன் டீ ஆத்துறாங்க?'' - பாஜகவை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசும் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில், பா.ஜ.கவையும், அண்ணாமலையையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்து பேசியிருக்கிறார்.

கரூர்: ``ஆளில்லாத ஊரில் ஏன் டீ ஆத்துறாங்க?'' - பாஜகவை விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில், பா.ஜ.கவையும், அண்ணாமலையையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்து பேசியிருக்கிறார்.

Published:Updated:
தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசும் செந்தில் பாலாஜி

தி.மு.க கரூர் வடக்கு நகர கழகத்தின் சார்பில், பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "கரூர் தொகுதியில் உள்ள 83,000 குடும்பங்களும், என்னை அவர்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக பாவித்து, ஆதரவு கொடுத்திருக்கின்றனர். சட்டமன்றத்துக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்ததுக்கு, உங்களுக்கு நன்றியுணர்வோடு செயல்படுவேன். இந்த தொகுதி மற்றும் கரூர் மாவட்டத்துக்கு தேவையான அத்தனை கோரிக்கைகளையும் முதல்வரிடம் வைத்து, பல திட்டங்களையும் கரூர்-க்கு கொண்டுவந்திருக்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சியின் ஓர் எடுத்துக்காட்டாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி. பெரியார், அண்ணா, கருணாநிதி, இனமானத் தலைவர் அன்பழகன் ஆகியோரின் நான்கு முகமாக இருந்து முதல்வர் சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறார்.

தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

கொரோனா கால ஊரடங்கின்போது, மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தபோது, அவர்களுக்கு அப்போதைய அ.தி.மு.க எந்த உதவிகளையும் வழங்காதபோது, ஸ்டாலின் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தார். தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 4,000 கொரோனா நிவாரணத் தொகை வழங்கினார். இதனால், இந்திய அளவில் நம் மாநிலம் முதன்மையாக உள்ளது என்பதே, ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதிநிலைமையை படிப்படியாக சரிசெய்து, பல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி வருகிறார். கரூரில் அரசு வேளாண்மை கல்லூரி கொண்டுவரப்பட்டிருக்கிறது. புதிய பேருந்து நிலையம் நம் ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கரூருக்கு ரூ.3,500 கோடி அளவுக்கான திட்டங்களை முதல்வர் கொடுத்திருக்கிறார்.

இன்னொரு கட்சியைப் பத்தி, இல்லாத கட்சியைப் பத்தி பேசுறாங்க. நான் சிலநேரம் பத்திரிகையாளர்கள்கிட்ட கேட்பேன், ஆளில்லாத ஊரில் ஏன் டீ ஆத்துறாங்கனு. ஏன் இன்னும்கூட கொஞ்சம் மேலேயே கேட்பேன், அவங்களுக்கு எத்தனைப் பூத்கள் இருக்கு என்று. அந்த கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருப்பவர் சொல்றார், 66,000 பூத்கள் இருக்கு என்று. எவ்வளவு பூத் இருக்குனே தெரியலை, அவர் எப்படி தேர்தல் களத்தை சந்திக்கப் போறார்?. இல்லாத ஓர் ஆளைப் பத்தி, இல்லாத ஓர் கட்சியைப் பத்தி நாம் ஏன் பேசி, விளம்பரப்படுத்தணும்?.

எதுக்கு நம்ம அந்த விளம்பரத்தை தேடி தரணும்?. நிறைய வேலையிருக்கு. அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலுகளுக்கான பணிகளை ஆரம்பிக்கணும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, மக்கள் பணியாற்றிட வேண்டும். இப்படி, நம் கண்முன்னே இருப்பது மக்கள் பணியாற்றக் கூடிய மகத்தான பணி.

அண்ணாமலை - செந்தில் பாலாஜி
அண்ணாமலை - செந்தில் பாலாஜி

அதை கடமையாக செய்வோம். ஆனால், சிலிண்டருக்கு மானியம் தருவதாக பா.ஜ.க அரசு சொன்னது. ஆனா, அக்கவுண்டுல ஒருபைசாகூட வரலை. மிகமோசமான நிலைமைக்கு பா.ஜ.க அரசு மக்களை தள்ளியிருக்கு. பெட்ரோல், டீசல் விலை இன்னைக்கு என்ன விலைக்கு விக்குது?. அதுபத்தியெல்லாம் பா.ஜ.க அரசுக்கு அக்கறையில்லை. அவங்களுக்கு அந்த சிந்தனை இல்லை. மக்கள் படும் வேதனைகளை புரிந்துகொள்ளும் அரசாக பா.ஜ.க அரசு இல்லை. ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கலுக்கு ரூ.1,000 , கரும்பு உள்ளிட்ட பொருள்களை முதல்வர் வழங்க இருக்கிறார்.

எந்த கட்சி, எந்த அமைப்பு என்று பார்க்காமல், யார் கோரிக்கை வைத்தாலும் அதை ஏற்று, கட்சி, சாதி, மதம் உள்ளிட்ட பாகுபாடுகளை பார்க்காமல், செயல்படுத்தும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். அவருடைய திட்டங்கள் அனைத்தையும் தமிழகம் முழுக்க கொண்டு சென்று, சுற்றி சுழன்று கொண்டு சேர்க்குற துடிப்புமிக்க இளைஞராக அண்ணன் உதயநிதி இருக்கிறார். விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.

உதயநிதி - ஸ்டாலின்
உதயநிதி - ஸ்டாலின்

லட்சோப லட்ச இளைஞர்களை வழிநடத்தக்கூடியவராக இருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசில் யார் அமர வேண்டும் என்று தீர்மானிக்ககூடிய சக்தியாக இருக்ககூடிய முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும்விதமாக, நீங்கள் தி.மு.க கூட்டணி கட்சிகள் 39 க்கு 39 தொகுதிகளை கைப்பற்ற உதவிட வேண்டும். அதுவும், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும்" என்றார்.