Published:Updated:

`20 ஓவரில் ஒரு ஓவர்தான் முடிந்துள்ளது!' - திமுக சாதனைகள் குறித்து செந்தில் பாலாஜி

'எதிர்க்கட்சிகளைப் பற்றி நாம் இங்கு பேசவேண்டியதில்லை. நான்கு மாத காலத்தில் மேற்கொண்ட திட்டங்கள், இனி அடுத்து நாம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும். மக்கள் திமுக-வுக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர்' - செந்தில் பாலாஜி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``திமுக ஆட்சியின் நான்கு மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிவடைந்த மாதிரி. அதிலேயே எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இனி, அடுத்துவரும் ஒவ்வொரு திட்டமும் மக்களைக் கவரும் வகையில் இருக்கும்’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்திருக்கிறார்.

செந்தில் பாலாஜி பிரசாரம்
செந்தில் பாலாஜி பிரசாரம்
`திமுக அரசின் நகைக்கடன் தள்ளுபடியில் ஏகப்பட்ட நிபந்தனைகள்..!’ - குற்றம்சாட்டும்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், வெள்ளியணைப் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு 8-வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் கண்ணையன் என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார். அதோடு, தேர்தல் பணிமனையையும் திறந்துவைத்தார். அதில், கலந்துகொண்ட திமுக-வினர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கலந்துகொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில வர்த்தகப் பிரிவுச் செயலாளர் விசா.ம.சண்முகம், கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சின்னசாமி, தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் எனப் பல நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். தொடர்ந்து, வெள்ளியணை கடைவீதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கி, வாக்கு சேகரித்தார். பின்னர், தேர்தல் பிரசாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி,

செந்தில் பாலாஜி பிரசாரம்
செந்தில் பாலாஜி பிரசாரம்

``தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் எண்ணற்ற பல திட்டங்களை புதிதாக ஏற்றுள்ள அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திவருகிறது. அவற்றில், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, ஆவின் பால் விற்பனை விலையைக் குறைத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொண்டது. ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் ஜூன் மாதம் 3-ம் தேதி குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் 4,000 உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றதும் முதல் தவணையாக ரூ. 2,000, ஜூன் 3 -ம் தேதி இரண்டாம் தவணையாக ரூ. 2,000 என முன்னதாகவே வழங்கி, பொதுமக்களின் பொருளாதாரநிலையை மேம்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியின் நான்கு மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட் மேட் போல. ஆனால், ஒரு ஓவர் முடிவடைந்த நிலையிலேயே எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மு.க.ஸ்டாலின்: `மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்!’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

இனி, அடுதது வரும் ஒவ்வொரு திட்டமும் மக்களைக் கவரும் வகையில் இருக்கும். ஆட்சியில் பொறுப்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களின் நலனில் அக்கறையோடு தி.மு.க செயலாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்கு கிலோ அரிசி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் உதவித்தொகை வழங்குகிறோம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தி, அதில் பாதித் தொகையை மட்டுமே செலவிட்டு, மக்களிடம் நல்ல பெயர் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், அவர்களின் ஆசை பகல்கனவாகிப் போனது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற நேரத்தில், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இன்று படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரை அதிமுக-வினரால் பொதுமக்களுக்கு எவ்விதமான உதவியும் வழங்கப்படவில்லை.

செந்தில் பாலாஜி பிரசாரம்
செந்தில் பாலாஜி பிரசாரம்

ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் தற்போது தேர்தல் நடைபெறும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள எட்டு ஊராட்சிகளில் சுமார் ரூ. 10.7 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் குடிநீர் வசதி வடிகால் வசதி ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கரூர் மாவட்டத்துக்கு இரண்டு தடுப்பணைகள் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். கூட்டணிக் கட்சியினரும், தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிக்கும் போது, நான்கு மாத கால ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி, வாக்குச் சேகரிக்க வேண்டும். அதன் மூலம், உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளில், 80 சதவிகித வாக்குகளை தி.மு.க பெற்றது என்ற வரலாற்றுச் சாதனையை உருவாக்குவோம். எதிர்க்கட்சிகளைப் பற்றி நாம் இங்கு பேச வேண்டியதில்லை. நான்கு மாத காலத்தில் மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் இனி அடுத்து நாம் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு