“ரெய்டுகளில் என் தலையீடு இருப்பதாகச் சொல்வது ஆதாரமற்ற புகார்!” - மறுக்கும் செந்தில் பாலாஜி

மின்வாரியத்தில், 50 விழுக்காடு மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மாதந்தோறும் மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்ய, இரட்டிப்புப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்
அரசியல் ரீதியாகவும் துறை ரீதியாகவும் தொடர்ந்து சர்ச்சைகளின் நாயகனாகவே வலம்வருகிறார், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. மின்வாரியம் தொடர்பான பிரச்னைகள், டாஸ்மாக் சர்ச்சைகள், அ.தி.மு.க அமைச்சர்கள்மீதான ரெய்டுகள், அவர்மீதான வழக்குகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்...
“மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வசூல் செய்யப்படுவதாகவும், இலவச மின்சாரத்துக்கு மீட்டர் பொருத்துவதாகவும் புகார்கள் எழுந்திருக்கிறதே?”
``2017-ம் ஆண்டிலிருந்தே மின்வாரியத்தின் இதர சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது. ஏதோ தி.மு.க பொறுப்பேற்ற பின்னர்தான் இப்படி வசூல் செய்வதாக ஒரு பிம்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பி.எஸ் கிளப்பியிருக்கிறார். அவருக்குக் கூடுதலாக ஒரு தகவல் சொல்கிறேன். ‘2017-18-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையான 34 கோடி ரூபாயை முன் தேதியிட்டு வசூலிக்க வேண்டும்’ என ஒன்றிய அரசு சொன்னபோது, ‘அதை வசூலிக்க வேண்டாம்’ என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். 2018 முதலே விவசாயிகளுக்கு வழங்கும் மின் இணைப்புக்கும் மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. இதுவும் ஓ.பி.எஸ்-ஸுக்குத் தெரியவில்லை. தெரியாத ஒரு சம்பவத்தில், தெரியாத கருத்தை, ஓ.பி.எஸ் தெரியாமல் பேசிவிட்டார். வேண்டுமானால் ‘கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல தவறுகளைச் செய்துவிட்டோம். மாண்புமிகு முதல்வர் இந்த தி.மு.க ஆட்சியில் அதையெல்லாம் கவனத்தில்கொண்டு சீர்செய்ய வேண்டும்’ என ஓ.பி.எஸ் ஓர் அறிக்கை கொடுக்கலாம். முதல்வர் நிச்சயம் செய்துகொடுப்பார்.”

“மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?”
“மின்வாரியத்தில், 50 விழுக்காடு மின் கணக்கீட்டாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மாதந்தோறும் மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்ய, இரட்டிப்புப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் அந்த அளவு பணியாளர்கள் தேவையில்லை. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர்விடவும் கால அவகாசம் வேண்டும். இவற்றைச் சரியாகச் செய்யவில்லையென்றால் மீண்டும் நீங்களே கேள்வி கேட்பீர்கள். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.”
“தொடர்ந்து சர்ச்சையிலேயே இருந்துவரும் மின்சார வாரியத்தில், அப்படி என்னதான் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்?”
“ஒரே ஆண்டில் 216 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8,095 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியிருக்கிறோம். புகார்கள் தெரிவிக்க இதுவரை 107 தொலைபேசி எண்கள் இருந்தன. இப்போது, மின்னகம் மூலம் ஒரே ஓர் எண்ணில் புகாரளிக்கும் நடைமுறையைக் கொண்டுவந்திருக்கிறோம். செலவினங்களைக் குறைத்து, ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வரை சேமிக்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.”
“ஆனால், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு சர்ச்சைகள் நீங்கள் பொறுப்பேற்ற பிறகுதானே எழுந்தன?”
“அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வருவதற்கு ஒன்பது மாதங்கள் முன்புவரை பராமரிப்புப் பணிகள் ஏதும் செய்யப்படவில்லை. அதைச் சரிசெய்திருக்கிறோம். கடந்த காலத்தில் இருந்ததுபோல இப்போது மின்தடைகள் ஏற்படுவதில்லை. மின்சாரத்தின் பயன் அதிகரித்திருக்கிறது; அதற்கேற்ப கட்டணம் வரத்தானே செய்யும்... அதையும் தாண்டி, மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகச் சந்தேகம் எழுந்தால், மின்னகத்தில் புகாரைப் பதிவுசெய்யுங்கள். மின்னகத்துக்கு வரும் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தப் பேட்டி மூலம் உறுதியளிக்கிறேன்.”
“டாஸ்மாக்கில் கூடுதல் நேரம் மது விற்பனை செய்வதும், மதுபாட்டிலுக்குக் கூடுதலாகப் பணம் வசூல் செய்வதும் எப்போதுதான் முடிவுக்கு வரும்?”
“எங்களுக்கு அப்படி ஏதும் புகார்கள் வரவில்லை. கவனத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையில் 134 இடங்களில் ஆய்வுசெய்து விற்பனையாளர்களை, மேற்பார்வையாளர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளோம். புகார் வரும் பட்சத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்.”
“அ.தி.மு.க அமைச்சர்கள்மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு நீங்கள்தான் காரணம் எனச் சொல்லப்படுகிறதே?”
“தங்கமணி மட்டும்தான் என்னுடைய பெயரை நேரடியாகச் சொல்லியிருக்கிறார். மற்றவர்கள் சொன்னதாகத் தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பே ‘நான் இந்தத் துறைக்கு வருவேன்’ என நான் சொன்னதாக அவர் சொன்னது வியப்பாக இருந்தது. அவருடைய காலத்தில் 3 லட்சம் டன் நிலக்கரி காணாமல்போனது. அதைக் கண்டறியக் குழு அமைத்தேன் என்றார். ஆனால், அந்தக் குழு அமைத்தற்கான ஆவணங்களைக் காணோம். அதைக் கேட்டால், வேறொருவர்மீது பழிபோடு கிறார். 2006, 2011, 2016, 2021 தேர்தல்களில், தங்கமணி தாக்கல் செய்த அவரது குடும்பத்தாரின் சொத்து மதிப்பை, பெயரோடு அட்டவணை போட்டு வெளியிட்டால் உண்மை தெரிந்துவிடும். தங்கமணி மீது மட்டுமல்ல, ‘கடந்த அ.தி.மு.க ஆட்சியில் யாரெல்லாம் தவறு செய்தார்களோ அனைவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தி.மு.க தேர்தல் வாக்குறுதி தந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்பது மக்களின் விருப்பம். அதைத்தான் முதல்வர் நிறைவேற்றிவருகிறார்.”
“பரபரப்பாக ரெய்டுகள் நடக்கின்றனவே தவிர, அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையே... ஏன்?”
“ரெய்டுகள் முடிந்திருக்கின்றன. ஆவணங்கள் மூலம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையில் அவர்களுக்குச் சம்மன் வழங்கப்படும். அதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மையான விசாரணையும் நடவடிக்கையும் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.”

“கோவையில் நீங்கள் அரசியல் செய்வதற்குத் தடையாக இருப்பதால்தான் வேலுமணி, தங்கமணி மீது ரெய்டுகள் நடந்தனவா?”
“கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் எல்லாம் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? யார் யார், என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்ற அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரெய்டுகளில் என் தலையீடு இருப்பதாகச் சொல்வது ஆதாரமற்ற புகார்.”
“ராஜேந்திர பாலாஜிமீதும், உங்கள்மீதும் ஒரே புகாரின் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், அவர்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதே?”
‘‘என்மீது தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் சொன்ன முன்னாள் அமைச்சர், வழக்கை எதிர்கொள்ள பயந்து ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார். ஆனால், நான் அதைச் சட்டப்படி எதிர்கொண்டு வருகிறேன். அரசியல்வாதிக்கு வழக்கை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில்தான் என்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. உண்மையில் தவறு இருந்தி ருந்தால், துறைரீதியிலான நடவடிக்கையை அந்த அரசு எடுத்திருக்க வேண்டும். பூதக்கண்ணாடி போட்டுத் தேடினார்கள். ஆனால், எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.”
“ `அமைச்சர் பதவிமீது எனக்கு ஆசையில்லை’ என்று கூறியிருக்கிறாரே உதயநிதி?”
‘‘நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார், சட்டப்பேரவைத் தேர்தலில், தனது தொகுதியையும் சேர்த்து 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதன் பலனாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது தி.மு.க. கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் அண்ணன் உதயநிதி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் அமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்பதுதான் கழகத் தொண்டர்களின் எண்ணம், மக்களின் விருப்பம். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்று, முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இது எங்கள் விருப்பம். உதயநிதி இதை நிறைவேற்ற வேண்டும்!”