Published:Updated:

அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி - தொடரும் வார்த்தைப் போரில் எல்லை மீறுகிறார்களா?!

செந்தில் பாலாஜி - அண்ணாமலை

அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரின் பேச்சுகளும் அரசியல் களத்தில் வார்த்தைப் போராக உருவெடுத்திருக்கிறது. இருவரின் பேச்சும் அரசியல் களத்தை என்னவாக மாற்றியிருக்கிறது?

அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி - தொடரும் வார்த்தைப் போரில் எல்லை மீறுகிறார்களா?!

அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரின் பேச்சுகளும் அரசியல் களத்தில் வார்த்தைப் போராக உருவெடுத்திருக்கிறது. இருவரின் பேச்சும் அரசியல் களத்தை என்னவாக மாற்றியிருக்கிறது?

Published:Updated:
செந்தில் பாலாஜி - அண்ணாமலை

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குமான மோதல் சமீபத்திய கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடக்கம் முதலே தமிழ்நாடு அமைச்சர்கள் குறித்து கருத்துச் சொல்வதும், அது குறித்து கேள்வியோ, சட்ட நடவடிக்கையோ எடுக்கப்படும் என ஆளும் தரப்பிலிருந்து எதிர்வினை வந்தால், அதைவிட்டுவிட்டு அடுத்த சம்பவத்துக்குத் தாவுவது எனவும் தொடர்ச்சியாகச் செய்துவருகிறார். அதேபோல அண்ணாமலைக்கு நிகராக அமைச்சர்களும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்குகிறார்கள். மற்ற அமைச்சர்களைவிடவும் அண்ணாமலைக்கும் செந்தில் பாலாஜிக்குமான மோதல்தான் தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் ஹாட் டாப்பிக்காக இருந்துவருகிறது.

அண்ணாமலை - செந்தில் பாலாஜி
அண்ணாமலை - செந்தில் பாலாஜி

கோவை கார் வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலைக்கு இடையேயான வார்த்தைப் போர் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது வரை நீண்டிருக்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் நடந்த இந்த வார்த்தைப் போர் குறித்த ஒரு தொகுப்பு...

“அரசியல் கோமாளி - சாராய அமைச்சர்!”

கோவை கார் வெடிப்புச் சம்பவம் நடந்ததும் பல்வேறு ஆதாரங்களைக் காட்டிய அண்ணாமலை, “கோவைச் சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழக முதலமைச்சர் மௌனம் காப்பது அனைவரும் அறிந்ததே. இந்தத் துறைக்குச் சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார், ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்பந்தம்?” என்று சொல்லி `சாராய அமைச்சர்’ எனச் சர்ச்சையைத் தொடங்கிவைத்தார் அண்ணாமலை. அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “எனக்கும் கோவைச் சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்படி அமைச்சராகப் பொறுப்பேற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்துக்குப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆராய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக்கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்துகொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை” என்றவர்... “கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைத்தான் என்.ஐ.ஏ முதலில் விசாரிக்க வேண்டும்” என பதிலளித்தார்.

“கரகாட்ட கோஷ்டி - காதில் கோளாறு!”

கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக பந்த் நடத்தப்போவதாக பாஜக கோவை நிர்வாகிகள் அறிவிக்க, நீதிமன்றத்துக்கு வழக்கு செல்ல, ``தமிழக பாஜக பந்த் அறிவிக்கவில்லை’’ என்றார் அண்ணாமலை. இதற்கு, ``கட்சியைச் சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் எனக் கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்குத் தொடர்பில்லை எனக் கூறுவது என்பது முறையானது அல்ல. அந்தக் கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் ஓர் அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்” எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தச் சர்ச்சைக்கு மேலும் தூபம் போட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மேலும், அக்டோபர் 30-ம் தேதி, ``கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த கஷ்டி கவசம் படித்ததை உலகத்தில் இங்கேதான் பார்த்திருப்பீர்கள். இது போன்ற கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்காது. அரசியல் கோமாளியின் செய்திகளை என்னிடம் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார். ``உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி அவர். தொலைக்காட்சிகளில் முதலமைச்சர் செய்திக்கு முன்பாக கோமாளியின் செய்திகள்தான் முதலில் வருகின்றன” என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

“சாராய அமைச்சருக்குக் காதில் கோளாறு இருப்பதாக அறிகிறேன். ‘எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாமல் அறிவித்துவிட்டார்கள்" என்று நான் சொன்னதாகப் பொய்களைக் கட்டவிழ்த்துவிடும் சாராய அமைச்சர், அதை உடனடியாக நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியவில்லையென்றால் அதற்கு தண்டனையாகக் குறைந்தபட்சம் 100 மதுக் கடைகளையாவது மூட வேண்டும். அதுவும் முடியவில்லையென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும்” என அண்ணாமலை பதிலடி கொடுத்தார்.

“அரசியல் களத்தின் மாண்பைக் குலைக்கிறார்கள்!”

அண்ணாமலை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி எப்போது பேசினாலும் அவரின் பெயரைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, “நீங்கள் சொல்லும் கட்சியின் தலைவர்”, “நீங்கள் சொல்லும் நபர்”, “அவர்” என்று மட்டுமே செந்தில் பாலாஜி குறிப்பிடுகிறார். மேலும், “அவருக்கு அடிப்படைப் புரிதல் இல்லை. அவருக்கு அடிப்படை அரசியல் தெரியவில்லை. அரசியல் பக்குவமில்லை. அரசியலில் எந்தவிதமான புரிதலும் இல்லாமல் செயல்படுகிறார். அந்தக் கட்சியின் தலைவரிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும். கோவைச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு முன்பே சில தகவல்களை `அவர்’ வெளியிட்டது ஏன்?” எனத் தொடர்ச்சியாக அவர், அந்தக் கட்சி என்றே பயன்படுத்துகிறார். அண்ணாமலையும் பதிலுக்கு, `சாராய அமைச்சர்’, `ஊழல் அமைச்சர்’ எனப் பேசியிருக்கிறார். இருவருக்குமிடையேயான வார்த்தைப் போரால் அரசியல் களமே கலவரமாகிக் கிடக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

இருவரின் பேச்சுகள் குறித்தும், “தமிழ்நாட்டில் நாகரிக அரசியல் சூழல் என்ற நிலை மாறி, தனிமனிதத் தாக்குதலுக்கு வித்திடும்விதமாக, அரசியல் களத்தின் மாண்பைக் குலைக்கும்விதமாக இருவரின் பேச்சும் செயலும் இருக்கின்றன. முதல்வர் தொடங்கி பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தபோதும் இந்தப் போக்கு மாறியதாகத் தெரியவில்லை. தற்போதைக்குச் சற்றுக் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.