Published:Updated:

''அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏன் என்மீது வழக்கு தொடுக்கவில்லை?'' - அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை

''நீதிமன்றம் வழியே வழக்கு தொடுப்பதைவிடவும் அரசே, ஆழமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால்தான் எங்கள் கைவசம் உள்ள ஆதாரங்களை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்'' என்கிறார் அண்ணாமலை.

''அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏன் என்மீது வழக்கு தொடுக்கவில்லை?'' - அண்ணாமலை கேள்வி

''நீதிமன்றம் வழியே வழக்கு தொடுப்பதைவிடவும் அரசே, ஆழமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால்தான் எங்கள் கைவசம் உள்ள ஆதாரங்களை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்'' என்கிறார் அண்ணாமலை.

Published:Updated:
அண்ணாமலை

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்துக்கு விளம்பரம், அமைச்சர் செந்தில் பாலாஜியோடு அறிக்கைப் போர், தமிழக பட்ஜெட் குறித்து விமர்சனம் என நாலாபக்கமும் சுற்றிச் சுழன்றாடிவருகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

பரபரப்பான இந்த அரசியல் சூழலில், அவரிடம் பேசினேன்...

''தமிழக பட்ஜெட்டில், பாராட்டுகிற அம்சம் ஒன்றுகூடவா இல்லை?''

''ப்ளஸ் டூ முடித்துவிட்டு மேற்படிப்பு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால், 'தாலிக்குத் தங்கம்' திட்டத்தை கேன்சல் செய்துவிட்டு, அந்தப் பணத்தை இந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்தவிருப்பதாக தமிழக அரசு சொல்லியிருப்பதுதான் வேதனையான அம்சம்!''

முதல்வர் ஸ்டாலின்...
முதல்வர் ஸ்டாலின்...

''தாலிக்குத் தங்கம் திட்டம் சரிவரச் செயல்படுத்தப்படவில்லை என்ற காரணத்தையும் தமிழக அரசு விளக்கியிருக்கிறதுதானே?''

''அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் உங்களுக்கு... என்னுடைய விளக்கம் என்பது, 'தாலிக்குத் தங்கம்' திட்டமும் தொடர வேண்டும். எனவே, மாணவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகைக்குத் தேவையான நிதி ஆதாரத்தை தமிழக அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியல்லாமல், 'குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்' என்று ஏற்கெனவே அறிவிப்பாக மட்டும் இருந்துவருவதுபோல், இந்தத் திட்டமும் ஆகிவிடக் கூடாது.

ஏனெனில், 'மத்திய அரசு நிதி கொடுக்கும், அங்கேயிருந்து நிதி கிடைக்கும், இங்கேயிருந்து நிதி வரும்' என்றெல்லாம் சொல்லித்தான் பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்கள். மாநில அரசு சார்பில், புதிய வருமானத்துக்கான வழிகளைக் கண்டுபிடிக்காமலேயே இப்படியெல்லாம் திட்டங்களை அறிவித்தால் எப்படி செயல்படுத்தப்போகிறார்கள்? அதனால்தான் இதைத் 'தொலைநோக்குத் திட்டம் இல்லாத பகல் கனவு பட்ஜெட்' என்று விமர்சித்திருக்கிறேன்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'' 'மத்திய அரசுபோல், பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் நாங்கள் விற்கவில்லை, ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்' என்றெல்லாம் தமிழக நிதியமைச்சர் கூறியிருக்கிறார்தானே?''

''லாபம் தரும் பொதுத்துறை நிறுவனம் எதையும் மத்திய அரசு விற்கவில்லை. தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்துவந்த 'ஏர் இந்தியா' போன்ற நிறுவனங்களைத்தான் தனியாருக்கு விற்பனை செய்துள்ளது மத்திய அரசு.

நமது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் ஜி.எஸ்.டி கவுன்சிலின் ஓர் அங்கம்தான். எனவே, '2022-க்குப் பிறகும் ஜி.எஸ்.டி இழப்பீடு வேண்டும்' என்ற அவரது வாதத்தை கவுன்சிலில் போய் தாராளமாகப் பேசலாம். ஆனால், மத்திய அரசைப் பொறுத்தவரையில், ஜி.எஸ்.டி சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் 2022 வரையில் பின்பற்றுவார்கள்.''

எல்.ஐ.சி
எல்.ஐ.சி
LIC

''லாபம் தரும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி பங்குகளை மத்திய அரசு, தனியாருக்குத் தாரை வார்த்திருக்கிறதுதானே?''

''எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது, நடுத்தர மக்கள் பயன்பாட்டுக்கானது. மற்றபடி எல்.ஐ.சி-யை யாரும் விற்பனை செய்யவில்லை. ஏற்கெனவே எல்.ஐ.சி பங்குதாரர்களாக நீங்கள், நான் உட்பட பொதுமக்கள் அனைவரும் உள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும்கூட பங்குதாரர்களாக இருந்துவருகின்றனர். இந்த நிலையில், குறிப்பிட்ட சதவிகித பங்குகளை நாட்டு மக்களிடம் விற்பனை செய்யும் திட்டத்தைத்தான் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் எல்.ஐ.சி-யின் பெரும்பான்மையான பங்குகள் அரசின் கைகளில்தான் இருக்கப்போகின்றன. நிர்வாகரீதியிலான முடிவுகளை அரசு அதிகாரிகள்தான் எடுக்கப்போகிறார்கள். எனவே, இதை நீங்கள் விற்பனையாகப் பார்க்கக் கூடாது.''

''தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த விதிகளை மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு மின் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டுகிறீர்கள்?''

''இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எவ்வளவோ ஆதாரங்களைக் கொடுத்துவிட்டோம். 'பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தப் பணிகள் எப்போது கொடுக்கப்பட்டன, ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் சம்பந்தப்பட்ட நிறுவனம் 'செயல்திறன் உத்தரவாதம்' (Performance Guarantee) அளிக்காதது ஏன்...' என்பது போன்ற கேள்விகள் முக்கியமானவை.''

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

''குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் கொடுக்கவில்லையென்றால், உங்கள்மீது வழக்கு தொடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தாரே?''

''எனக்கு அவர் விதித்திருந்த 24 மணி நேரக் கெடு முடிந்து பல 24 மணி நேரங்கள் ஆகிவிட்டன. ஏன் இன்னும் என்மீது அவர் வழக்கு தொடுக்கவில்லை? விஷயம் அதுவல்ல. நம் நாட்டில் குறிப்பிட்ட நடைமுறைகள் இருக்கின்றன. எனவே, நீதிமன்றம் வழியே வழக்கு தொடுப்பதைவிடவும் அரசே, ஆழமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால்தான் எங்கள் கைவசம் உள்ள ஆதாரங்களை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்.

இந்த விஷயத்தில், எந்தவொரு கருத்தும் சொல்லாமல், தமிழக முதல்வர் ஏன் அமைதி காக்கிறார்? தமிழக அரசு எந்தத் தவறும் செய்யவில்லையென்றால், ஓய்வுபெற்ற நீதியரசரை நியமித்து, இது குறித்து முழுமையான விசாரணையை நடத்த வேண்டியதுதானே!''

''1990-காலகட்டங்களில் காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் அகதிகளாக வெளியேறிய சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என பா.ஜ.க விளம்பரப்படுத்துவதன் நோக்கம் என்ன?''

''முதலில், இது மதத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. பா.ஜ.க-வும் 'மதத்தைவைத்து இந்தப் படத்தைப் பாருங்கள்' என யாரிடமும் சொல்லவில்லை. இந்தியாவில் முக்கியமான இடமாக இருந்துவரக்கூடிய காஷ்மீரில், சிறுபான்மையாக இருந்துவரக்கூடிய பண்டிட், சீக்கியர், தலித், தோக்ரா உள்ளிட்ட இந்து சமுதாயத்தினர் 1989-90-களில் இஸ்லாமியப் போராளிகளால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், அதன் தொடர்ச்சியாக எப்படி அவர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பதையெல்லாம் சொல்கிற படம்தான் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’

ஆக, வரலாற்றில் இதை நிகழ்த்தியவர்கள் இஸ்லாமியர்கள் கிடையாது. மாறாக, இஸ்லாமியப் போராளிகள் என்ற பெயரில், குர்ஆனைத் தவறாகப் புரிந்துகொண்டு, தங்கள் அரசியல் லாபத்துக்காக நிறைய பேரைக் கொன்று குவித்தவர்கள் இவர்கள். இந்த இந்திய வரலாற்றை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படத்தைப் பார்க்கச்சொல்லி நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம்.''

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

''இந்தச் சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில், மத்திய அரசில் அங்கம் வகித்து அமைதியாக இருந்துவந்த பா.ஜ.க., 30 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பிரச்னையை பிரபலப்படுத்துவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதுதானே?''

''காஷ்மீர் பண்டிட்டுகளின் நலன் குறித்து பா.ஜ.க எப்போதுமே பேசிவருகிறது. பா.ஜ.க ஆதரவுடன் மத்தியில் ஆட்சி நடைபெற்றுவந்த காலகட்டங்களில், 'அகதிகளாக வெளியேறிய பண்டிட்டுகளை திரும்பவும் காஷ்மீருக்கே அழைத்துவர வேண்டும்' என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறோம். பண்டிட்டுகளுக்கு கொடுக்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்திருக்கிறோம்.

பா.ஜ.க-வே தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகு, காஷ்மீரத்துக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்திருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு காஷ்மீரில், யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம், குடியிருக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். எனவே, அகதிகளாக வெளியேறிப்போய்விட்ட பண்டிட்டுகள், தோக்ரா, தலித் உள்ளிட்ட அனைவருமே இன்றைக்கு காஷ்மீருக்கே திரும்ப வாய்ப்பு கிடைத்திருக்கிறது.''

'' `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம்போல், இந்திய வரலாற்றைப் பேசுகிற 'குஜராத் ஃபைல்ஸ்' திரைப்படம் எடுக்கப்பட்டால், பா.ஜ.க அதற்கும் இதே அளவு ஆதரவைத் தெரிவிக்குமா?''

''உண்மை சம்பவத்துக்கும், கற்பனையான கதைக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. குஜராத் கலவரத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் என்னென்ன நடந்தன என்பது குறித்தெல்லாம் உண்மையான தகவல்களுடன் படம் எடுப்பவர்களுக்காக நானுமே காத்துக்கொண்டிருக்கிறேன்.''

''அப்படியென்றால், உண்மை எது, கற்பனை எது என்பதைத் தீர்மானிக்கக்கூடிய இடத்திலும் பா.ஜ.க-தான் இருக்கிறது என்கிறீர்களா?''

'' `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் கிடையாது. மேலும், இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எழுதியவரே காஷ்மீரில் பிறந்து வளர்ந்த ஓர் இஸ்லாமியர்தான். உண்மை இப்படியிருக்கும்போது, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தோடு பா.ஜ.க-வை எந்தவிதத்தில் இணைத்துப் பார்க்கிறீர்கள்?''

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி

'' `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர், இரண்டு வருடங்களுக்கு முன்பே நமது பிரதமரைச் சந்தித்துப் பேசியதற்கான ஆதாரங்களையெல்லாம் எதிர்க்கட்சிகள் கொடுக்கின்றனவே?''

''பாலிவுட்டில் இருந்துவரக்கூடிய பெரிய இயக்குநர்கள் எல்லோருமே பிரதமரைச் சந்தித்திருக்கின்றனர். 2019-ல் பெரிய இயக்குநர்களைத் தன் வீட்டுக்கே அழைத்து விருந்தளித்திருக்கிறார் பிரதமர்.

இதுமட்டுமல்ல... உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டவர்களும்கூட நமது பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்... இவர்கள்கூட பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்வீர்களா? எனவே, திரைப் பிரபலங்கள் எல்லோருமே பிரதமரை சந்தித்திருக்கிறார்கள் என்கிறபோது, விவேக் அக்னிஹோத்ரி சந்திப்பை மட்டும் ஏன் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்?''