Published:Updated:

``சீமான் வீட்டு மின்வெட்டு பிரச்னை முடிவுக்கு வந்ததா?” - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

செந்தில் பாலாஜி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நேர்காணல்...

``சீமான் வீட்டு மின்வெட்டு பிரச்னை முடிவுக்கு வந்ததா?” - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நேர்காணல்...

Published:Updated:
செந்தில் பாலாஜி

மின் கட்டண உயர்வு, அதற்கான காரணம், மின் வாரியத்தின் நிலை, தி.மு.க வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் செய்த போராட்டம், மின் வாரியத்தை மீட்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு நேர்காணல்…

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

``நீங்கள் பொறுப்பேற்கும்போது தமிழ்நாடு மின்வாரியத்தின் நிலை என்னவாக இருந்தது?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் நிதி இழப்பு 1.13 லட்சம் கோடி. 16,500 கோடி கடன் கட்டவேண்டிய சூழலில் இருந்தோம். வங்கிகளில் 9.5 முதல் 13.5 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதத்தில் கடனை மின்சார வாரியம் வாங்கியிருந்தது. நமது தேவைக்கான மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குதான் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது. வங்கிகளிலோ, அமைப்புகளிலோ கடன் வாங்க முடியாத நிலையில் மின்வாரியம் தத்தளித்துக்கொண்டிருந்தது. தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை, மின் விநியோகத்துக்கான வசதிகள் வலுப்படுத்தப்படவில்லை.

துணை மின் நிலையங்கள் உருவாக்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த ஒரு மாதத்தில் 30,700 பழுதடைந்த மின் கம்பங்களைச் சரிசெய்திருக்கிறோம். மின் இணைப்புக்கு விண்ணப்பித்த ஒரே நாளில் வழங்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் நிறைய தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கின்றன. அவற்றுக்க்கெல்லாம் தமிழ்நாடு மின் வாரியம் மூலம் மின்சாரம் வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். அதை நோக்கித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``மின் கட்டண உயர்வுக்குக் காரணம் மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததுதான் எனச் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?”

``உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும்... கடிதங்கள் மூலம் மட்டுமல்ல, ஒன்றிய அரசுடன் காணொளி மூலமாக நடந்த கூட்டத்திலும் கட்டணத்தை உயர்த்தச் சொல்லி அழுத்தம் கொடுத்தார்கள். டெல்லிக்கு ஒன்றிய அமைச்சரை நேரில் சென்று பார்த்தபோதும் `மின் கட்டணத்தை உயர்த்தவில்லையென்றால், மானியத்தை நிறுத்திவிடுவோம்’ என்றார். மத்திய அரசிடமிருந்து நிலுவை மற்றும் மானியமாக சுமார் 40,000 கோடி ரூபாய் வரவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, `ஒன்றிய அரசின் திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தாமல் நிறுத்திவிடுவோம்’ எனவும் அச்சுறுத்தினார்கள். இவ்வளவு மிரட்டல்களுக்குப் பிறகும் மானியம் கொடுத்து மின்வாரியத்தை மீட்கத் திட்டமிட்டுச் செயல்பட்டோம். ஆனால், ஒன்றிய அரசு `நீங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லையென்றால் நாங்கள் உயர்த்துவோம்’ என ஒருபடி மேலே சென்றுவிட்டது. எனவே, மக்களை பாதிக்காத வகையில் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.”

மின்கட்டண உயர்வு
மின்கட்டண உயர்வு

``இந்தக் கடனிலிருந்து மீள முடியுமா, தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

“கண்டிப்பாக முடியும். 2030-ம் ஆண்டுக்குள் மீட்டெடுத்து கடனில்லாத தமிழ்நாடு மின்சார வாரியத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை முன்வைத்துத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.”

``அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்ததாகச் சொல்கிறார்களே?”

“மின் மிகை மாநிலமாக இருந்தால் ஏன் இலவச மின்சாரத்துக்காகப் பதிவுசெய்து காத்திருந்த 4.5 லட்சம் விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கவில்லை... மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குதான் சொந்த உற்பத்தி. மீதமிருக்கும் இரண்டு பங்கை வெளிச்சந்தையில்தான் விலை கொடுத்து வாங்குகிறோம். அப்படியானால் எதைவைத்து மின் மிகை மாநிலம் என்றார்கள் என்றே புரியவில்லை. முதல்வர் தளபதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியிருக்கிறோம். இந்த ஆண்டு மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் உண்மையாகவே தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றுவோம்.”

இலவச மின்சாரம்
இலவச மின்சாரம்

``மிகப்பெரிய கடன், கொடுக்கப்பட்ட அழுத்தம் எனச் சொல்வதெல்லாம் மின்கட்டண உயர்வை நியாயப்படுத்தச் சொல்லும் காரணங்கள் மாதிரி இருக்கின்றனவே?”

``யார்மேலும் பழி போடவேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை. அதேநேரத்தில், உண்மை என்ன என்பதை மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அப்படித் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் பழி போடுகிறோம் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?”

``தி.மு.க அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினார்களே?”

``தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி ஐந்து ஆண்டுகளுக்கானது. ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்வதற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆட்சியைக் கூர்ந்து கவனித்து அதில் என்னென்ன தவறுகள் நடக்கின்றன, அவற்றை எப்படியெல்லாம் சரிசெய்யலாம் எனத் திட்டமிட்டு, எந்தெந்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றலாம், அதற்கான நிதி ஆதாரங்கள் என்னென்ன என்பதைவைத்து அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் தலைவர் நிறைவேற்றுவார். அதுதான் அவரின் விருப்பமும்கூட. அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போதுதான் ‘ஏன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ எனக் கேட்க வேண்டும். `15 லட்சம் ரூபாயை ஒவ்வொருவர் அக்கவுன்ட்டிலும் போடுவோம்’ என்றார்கள். காஸ் விலை 410 ரூபாயிலிருந்து 1,100 வரை உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இதையெல்லாம் குறித்து ஏன் பேச மறுக்கிறார்கள்?”

ஸ்காட்லாந்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி
ஸ்காட்லாந்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி

``சமீபத்தில் நீங்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின் நோக்கம் என்ன?”

``கடலில் காற்றாலை அமைக்கும் திட்டங்களை ஆய்வுசெய்யச் சென்றோம். அங்கு அந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாகவே செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான முதலீட்டுச் செலவு அதிகம், உற்பத்திக்கான செலவும் அதிகம். அது குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அந்த ஆய்வின் முடிவுகளைவைத்து அதைச் செயல்படுத்துவோம். இப்போது நமக்கிருக்கும் நிதி ஆதாரத்தின்படி அதை எப்படிப் பயனுள்ளதாகச் செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறோம்.”

“ஆனால், தனியாரிடமிருந்து தி.மு.க அரசு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறதே?”

``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறார்கள். அந்த விலைக்குத்தான் இப்போதும் நாம் மின்சாரம் வாங்குகிறோம். ஆட்சி மாறியதற்காக ஒப்பந்தங்களை மீறவோ, மாற்றவோ முடியாது. அது தேவையில்லாத விமர்சனத்துக்கு வழிவகுக்கும். நாம் செயல்படுத்தும் மின் திட்டங்கள் முழுமை பெற்று, கூடுதல் உற்பத்தியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளைச் செய்துவருகிறோம். கூடுதல் உற்பத்தியை ஏற்படுத்திவிட்டால், தனியாரிடமிருந்து வாங்கவேண்டிய தேவை இருக்காது.”

“அதிக விலைக்கு விற்பனை, சட்டவிரோத பார் என டாஸ்மாக்கில் சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனவே?”

“மொத்தமுள்ள 5,300 டாஸ்மாக் கடைகளில் டெண்டர்விட்ட கடைகளைத் தவிர மீதமிருக்கும் கடைகளுக்கு டெண்டர்விட வேண்டும். இப்போது இருக்கும் அனைத்துக் கடைகளிலும் பார் அமைக்கும் வசதி இல்லை. அங்கெல்லாம் பார் அமைப்பதற்கான வசதியைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். எல்லா கடைகளுக்கும் பார் எடுக்கும் வசதி இல்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழும்போதெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அப்படி இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். 900 கடைகளுக்குச் சீல் வைத்திருக்கிறோம். இனியும் இது போன்ற புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்போம்.”

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி
நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் செந்தில் பாலாஜி

“தன் வீட்டில் தொடர் மின்வெட்டு இருப்பதாக, சீமான் ட்வீட் செய்திருந்தார். அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்ததா?”

“இணைப்பு எண் கேட்டு நானும் பதில் அனுப்பியிருந்தேன். ஆனால், சீமான் எந்தத் தகவலையும் பகிரவில்லை. புகாருக்காக மின்னகம் என்ற அமைப்பே இருக்கிறது. அதில் இதுவரை 9 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதில் 97 சதவிகித பிரச்னைகள் தீர்வு காணப்பட்டிருக்கின்றன. அதிலும் பார்த்தேன்... சீமான் புகார் அளிக்கவில்லை. மின் இணைப்பு எண் கேட்டேன். அப்படிக் கொடுத்திருந்தாலாவது நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால், அதையும் கொடுக்கவில்லை. நானாகத் தேடி அங்கு பிரச்னை இருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு பதிவிட்டேன். ஆனால், அதற்கும் பதிலில்லை. அந்தப் பிரச்னை அதோடு முடிந்துவிட்டது.”