Published:Updated:

ஓ.பி.எஸ்-தான் பதில் சொல்ல வேண்டும்!

தா.மோ.அன்பரசன்
பிரீமியம் ஸ்டோரி
தா.மோ.அன்பரசன்

- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிரடி

ஓ.பி.எஸ்-தான் பதில் சொல்ல வேண்டும்!

- அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிரடி

Published:Updated:
தா.மோ.அன்பரசன்
பிரீமியம் ஸ்டோரி
தா.மோ.அன்பரசன்

சென்னை, புளியந்தோப்பில் ‘தொட்டாலே உதிர்ந்துவிடும்’ அளவுக்குத் தரமற்ற வகையில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளைக் கட்டியிருப்பதாகக் கடந்தகால அ.தி.மு.க அரசுமீது புகார்கள் குவிந்துவருகின்றன. இந்த விவகாரத்தில், தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள், முன்னாள் துணை முதல்வரான அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிவைத்து நகர்ந்துவருகிறது. இந்தநிலையில், குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை நேரில் சந்தித்துப் பேசினோம்...

“புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் பலவீனமாக இருப்பது ஒரு பிரச்னை என்றால், அந்தக் குடியிருப்புகளில் மக்களைக் குடியேற்ற வீட்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் அதிகாரிகள் கேட்பதாகப் புதிதாகப் புகார் எழுந்திருக்கிறதே?’’

“40 வருடங்களுக்கு முன்பாக குடிசை மாற்று வாரியத்தால், புளியந்தோப்பில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் பலவீனமடைந்தன. கடந்தகால அ.தி.மு.க அரசு அந்த வீடுகளை மொத்தமாக இடித்துவிட்டு, புதிதாக ஒன்பது தளம்வரை அடுக்குமாடிக் குடியிருப்புகளாக ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின்கீழ் (திட்டம் - 1) கட்டினார்கள். இதில், மொத்தம் 864 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டின் மதிப்பு 13,03,000 ரூபாய். இதில் 10,03,000 ரூபாயை மாநில அரசு வழங்குகிறது. 1.5 லட்சம் ரூபாயை ஒன்றிய அரசு கொடுக்கிறது. மீதமுள்ள 1.5 லட்சம் ரூபாயைப் பயனாளி கொடுக்க வேண்டும். இதுதான் திட்டத்தின் அடிப்படை. இந்த விவரம் புரியாமல், ‘நாங்கள் ஏன் 1.5 லட்சம் ரூபாய் தர வேண்டும்’ என மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஏழை மக்களின் இயலாமையைப் புரிந்துகொண்டு, அந்த 1.5 லட்சம் ரூபாயையும் மக்கள் மாதத் தவணையாகக் கட்டுவதற்கு வசதியாக வங்கிக் கடன் ஏற்பாடுகளையும் செய்துதர தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.’’

“ `அ.தி.மு.க அரசு தரமற்ற வகையில் கட்டடத்தைக் கட்டியது என்றால், அதைப் பரிசோதிக்காமல், மக்களைக் குடியேற்றியது தி.மு.க அரசின் அலட்சியம்’ என சீமான் கண்டித்திருக்கிறாரே?’’

“மக்களை நாங்கள் குடியேற்றம் செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க-வினரே யார், யாருக்கு எந்த வீட்டை ஒதுக்குவது என்று குலுக்கல் முறையில் தேர்வுசெய்துவிட்டனர். தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும்கூட, சம்பந்தப்பட்ட குடியிருப்புக்கு ஆய்வுப்பணிக்குச் சென்ற நான், ‘பணிகள் அனைத்தும் அரைகுறையாகக் கிடக்கின்றன. முழுவதுமாகச் செய்து முடித்த பிறகு மக்கள் குடியேறலாம்’ என்றுதான் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால், கடந்த மாதம் மழை பெய்தபோது, தற்காலிகக் குடியிருப்புகளில் இருந்துவந்த மக்கள், தாங்களாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீடுகளுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்!’’

“தி.மு.க அமைச்சரான நீங்களே, ‘ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் மக்களைக் குடியமர்த்துங்கள்’ என ‘நல்ல நேரம்’ பார்த்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறதே?’’

“நல்ல நேரம், கெட்ட நேரமெல்லாம் எங்களுக்கு ஏது? குடியிருப்புகளில் குழாய், மின்சாரம், லிஃப்ட் வசதிகளைக் கடந்த அ.தி.மு.க ஆட்சியாளர்கள் முழுமையாகச் செய்து முடிக்கவில்லை. அந்தப் பணிகளையெல்லாம் செய்து முடிக்கக் கால அவகாசம் வேண்டும். நம் மக்களும்கூட ஆடி மாதத்தில், புது வீட்டுக்குக் குடியேற யோசிப்பார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், ‘ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்துக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும். மக்களும் குடியேறிவிடலாம்’ என யதார்த்தமாகத் தெரிவித்திருந்தேன். அதையும் சர்ச்சையாக்கிவிட்டார்கள்!’’

“ ‘வெள்ளை அறிக்கை, கொடநாடு விவகாரம், குடிசை மாற்றுக் குடியிருப்பு...’ எனத் தமிழக அரசின் தொடர்ச்சியான செயல்பாடுகள் ‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என்ற அ.தி.மு.க-வின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறதே?’’

“இதையெல்லாம் நாங்களாக பிளான் பண்ணி எதுவும் செய்யவில்லையே... ஒவ்வொரு விவகாரத்திலும் புகார்கள் வரும்போது ஆளுங்கட்சியாக நாங்கள் நடவடிக்கை எடுத்துத்தானே ஆக வேண்டும்... குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக மக்கள் புகாரளிக்கிறார்கள். அதன்பேரில் ஆய்வுசெய்து, நடவடிக்கை எடுக்கிறோம். இதில் பழிவாங்கும் நடவடிக்கை எங்கிருந்து வந்தது?’’

“குடியிருப்புகளை கொரோனா வார்டாக அரசு பயன்படுத்தியதும், மக்களே கட்டடத்துக்குச் சேதம் விளைவித்ததும்தான் பிரச்னைக்குக் காரணம் என பில்டிங்கைக் கட்டிய பி.எஸ்.டி நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறதே..?’’

“குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் குறைந்தபட்சம் 40 வருடங்களாவது நீடித்து நிலைத்து நிற்க வேண்டும். இப்படி இரண்டு வருடத்துக்குள்ளேயே பொலபொலவென்று உதிர்ந்து விழுகிறதென்றால், அதற்கான பதிலைக் கட்டட ஒப்பந்ததாரர், அதைக் கட்டியபோது பதவியிலிருந்த வாரிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தான் சொல்ல வேண்டும். அந்தக் குடியிருப்புகளிலுள்ள மக்கள், தங்கள் வீட்டுக்குத் தேவையான டி.வி., கட்டில் போன்றவற்றைத்தான் குடியிருப்பின் படிக்கட்டு வழியாக எடுத்துச் சென்றிருப்பார்கள். இது எப்படி கட்டடச் சுவர்களைப் பலவீனமாக்கும்? எனவே, செய்த தவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இப்படியெல்லாம் சொல்வது ரொம்ப தப்பு!’’

ஓ.பி.எஸ்-தான் பதில் சொல்ல வேண்டும்!

“புளியந்தோப்பு கட்டடத்தின் உறுதித்தன்மையே கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், எந்த நம்பிக்கையில் தற்காலிகச் சீரமைப்புப் பணிகள் என்று பூச்சு வேலைகளையெல்லாம் ஆரம்பித்திருக்கிறீர்கள்?’’

“ஒன்பது மாடி கட்டடத்துக்கு பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காகப் போடவில்லையென்றால், கட்டடம் கட்டும்போதே சரிந்துவிழுந்துவிடும். சில வீடுகளில் மேற்பூச்சுகள் பலவீனமாக இருக்கின்றன. எனவே, சுவர்களில் லேசாகத் தட்டினாலே பெயர்ந்து விழுகிறது. மேலும், குடிநீர்க் குழாய்கள் உடைந்துள்ளன, லிஃப்ட் பழுதாகியிருக்கிறது. இதையெல்லாம்தான் தற்போது சீரமைத்து வருகிறோம். கடந்த ஆட்சியின்போது, இந்தக் குறைகளையெல்லாம் சரிவர ஆய்வு செய்யாமல் ஒப்புதல் அளித்துவிட்ட குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளர்கள் இருவரை தற்காலிகப் பணிநீக்கமும் செய்துவிட்டோம்!’’

“பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காக இருப்பதால்தான், வாரியத்தின் முன்னாள் அமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?’’

“பேஸ்மென்ட் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்று நான் சொல்ல முடியாது. அதை, ஆய்வு செய்துகொண்டிருக்கிற ஐ.ஐ.டி தரக்கட்டுப்பாட்டுக் குழுதான் சொல்ல வேண்டும். ஒருவேளை கட்டடத்தின் அஸ்திவாரத்திலேயே பிரச்னை என்றால், அதை நாம் ஒன்றும் பண்ண முடியாது. பில்டிங்கையே இடித்துவிட்டு மீண்டும் புதிதாகத்தான் கட்ட வேண்டும். இந்தத் தவற்றைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்!’’