Published:Updated:

``22,000 வீடுகள் பழுதடைந்து கிடக்கின்றன!'' - அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிர்ச்சித் தகவல்!

தா.மோ.அன்பரசன்

``கட்டடப் பணிகள் முடிந்த பின்னர், சுவர் கெட்டிப்படுவதற்காக தொடர்ந்து சில நாள்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம். ஆனால், இந்தப் பிரச்னைக்குரிய கட்டடங்களில் சரிவர தண்ணீர் பிடிக்கப்படவில்லை.'' - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

``22,000 வீடுகள் பழுதடைந்து கிடக்கின்றன!'' - அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிர்ச்சித் தகவல்!

``கட்டடப் பணிகள் முடிந்த பின்னர், சுவர் கெட்டிப்படுவதற்காக தொடர்ந்து சில நாள்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம். ஆனால், இந்தப் பிரச்னைக்குரிய கட்டடங்களில் சரிவர தண்ணீர் பிடிக்கப்படவில்லை.'' - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

Published:Updated:
தா.மோ.அன்பரசன்

சென்னையில் புளியந்தோப்பில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டிருப்பதாகக் கடந்த வாரம் வெளியான பரபரப்பு செய்திகள் அ.தி.மு.க-வை ஆட்டம் காணவைத்துள்ளன!

ஏற்கெனவே, வெள்ளை அறிக்கை, அமைச்சர்கள் மீதான ரெய்டு, கொடநாடு வழக்கு விசாரணை என அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு எதிராக தி.மு.க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ரத்தத்தின் ரத்தங்களை கிடுகிடுக்கவைத்துவருகின்றன. இந்தநிலையில், சென்னை புளியந்தோப்புப் பகுதியிலுள்ள கே.பி.பார்க் பகுதியில், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், 'தொட்டாலே உதிர்ந்து விழுகிற' அளவுக்கு பலமிழந்து காணப்படுகின்றன என்றொரு செய்தி தீயாகப் பரவியது.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

குடியிருப்பு வீட்டுச் சுவர்களைச் சாதாரணமாகக் கையால் தட்டினாலே சுவர் பெயர்ந்து விழுவதும், சிமென்ட் பூச்சை விரல்களால் தேய்த்தாலே மாவாகக் கொட்டுவதுமான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இதையடுத்து, குடியிருப்பு கட்டடப் பணியைச் செய்த ஒப்பந்த நிறுவனம், இது குறித்த விளக்கம் ஒன்றைப் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட்டது.

ஆனாலும் `அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு வரிசையில், ஓ.பன்னீர்செல்வம் மீது அடுத்த குறிவைத்துள்ளது தி.மு.க அரசு' என்றொரு பேச்சு அரசியல் அரங்கில் எழுந்தது. ஏனெனில், கடந்த ஆட்சியில், குடிசை மாற்று வாரியத்துறைக்குப் பொறுப்புவகித்தவர் முன்னாள் துணை முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, தி.மு.க - அ.தி.மு.க இடையிலான அரசியல் வாத பிரதிவாதங்கள் அனல்பறக்க ஆரம்பித்தன. சட்டசபையிலும் இது குறித்த விவாதங்கள் எழுந்தன. புளியந்தோப்பு குடியிருப்புப் பகுதிகளில் அரசியல் தலைவர்கள் பார்வையிட ஆரம்பித்தனர். இதற்கிடையே, தரமற்ற வகையில் கட்டப்பட்ட கட்டடப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்த குடிசை மாற்று வாரிய உதவி செயற்பொறியாளர்கள் இருவரை தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்து அறிவித்தது தமிழக அரசு.

தற்போது, கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காகத் தமிழக அரசு நியமித்துள்ள ஐ.ஐ.டி வல்லுநர்குழு, சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வுப் பணியை மேற்கொண்டுவருகிறது. இன்னும் மூன்று வாரங்களில் இந்த ஆய்வுப்பணி குறித்த அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

இந்தநிலையில், குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் இந்த விவகாரம் குறித்து நேரில் பேசினோம்.

``கடந்தகால அ.தி.மு.க ஆட்சியாளர்களால் 'குடிசை மாற்று வாரிய குடியிருப்புத் திட்டம் 1, திட்டம் 2' என இரண்டு வகையான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில், திட்டம் 1-ல், 864 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. திட்டம் 2-ல், புதிதாக 1,056 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரை ஓரங்களில் ஆக்கிரமித்துக் குடியிருப்பவர்களைக் கொண்டுவந்து இந்த வீடுகளில் குடியேற்றியிருக்கிறார்கள். இது, 'கூவம் நதி சீரமைப்பு அறக்கட்டளை' நிதியில் கட்டப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திட்டம் 1-ல் கட்டப்பட்டுள்ள வீடுகளில்தான் சிமென்ட் பூச்சுகள் உதிர்வதாகப் புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகாரையடுத்து, நான், அமைச்சர் சேகர் பாபு, தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் புளியந்தோப்பு கே.பி.பார்க்குக்குச் சென்று ஆய்வு நடத்தினோம். ஹாலோ பிளாக் செங்கற்களால் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதன் மேல் பூசியுள்ள சிமென்ட் நன்றாக ஒட்டிப்பிடிக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. மேலும், கட்டடப் பணிகள் முடிந்த பின்னர், சுவர் கெட்டிப்படுவதற்காகத் தொடர்ந்து சில நாள்கள் தண்ணீர் பிடிப்பது வழக்கம். ஆனால், இந்தப் பிரச்னைக்குரிய கட்டடங்களில் சரிவர தண்ணீர் பிடிக்கப்படவில்லை. எனவேதான் சிமென்ட் சரிவர ஒட்டாமல், தொட்டாலே உதிர்ந்து விழுகிறது. அவற்றையெல்லாம் சரிசெய்வதற்கானப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

இது தவிர, தண்ணீர் செல்லும் குழாய்கள், லிஃப்ட், வீட்டின் சுவர்கள் ஆகியவற்றை சமூக விரோதிகள் சேதமாக்கியிருக்கின்றனர். அவற்றையும் பழுதுபார்க்கும் பணிகள் நடந்துவருகின்றன. இனிவரும் காலத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகளில் எந்தவிதப் புகார்களும் வரக் கூடாது என்பதற்காகப் புதிதாக சில விதிமுறைகளைக் கொண்டுவரவிருக்கிறோம்.

அதாவது, குடிசை மாற்று வாரிய கட்டடப் பணிகளின் தரத்தை வாரியத்திலுள்ள பொறியாளர்கள் கண்காணிப்பதோடு ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக தரக்கட்டுப்பாடுக் குழுவினரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கான ஒப்பந்தமும் போடப்போகிறோம்'' என்றவரிடம், 'கட்டடப் பணியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்றொரு கேள்வியை முன்வைத்தோம்.

''சில நாள்களுக்கு முன்புகூட, 'கட்டடம் ஆடுது...' என்றெல்லாம் புரளி கிளம்பியது. அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை. ஐ.ஐ.டி நிபுணர்கள் குழு இப்போது ஆய்வுப் பணியை மேற்கொண்டுவருகிறது. அவர்கள் கொடுக்கவிருக்கும் அறிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்போம்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுப்போம். இப்போது என் துறையில் ஒரு பிரச்னை என்றால், அதற்கு நானும்தானே ஒரு காரணம்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மதுரை அருகே, ராஜாக்கூரில் கு.மா.வாரியம் சார்பில் இரண்டாயிரம் வீடுகள் கட்டப்பட்டு, ஏழெட்டு வருடங்களாக மக்கள் யாரும் குடியமர்த்தப்படாமல், வீடுகளெல்லாம் புதர்மண்டி, சுவர்களில் அரச மரமும் ஆல மரமும் முளைத்துக் கிடக்கின்றன. பயனாளிகளைத் தேர்வு செய்துவிட்டுத்தான் இது போன்ற குடியிருப்புகளையே கட்ட வேண்டும். ஆனால், இங்கே குடியிருப்புகளைக் கட்டி முடித்துவிட்டு, இத்தனை வருடங்களாக பயனாளிகளைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இதுமட்டுமல்ல... காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வேகவதி ஆற்றங்கரையில் குடியிருப்பவர்களுக்காகக் கீழ்கதிர்பூரிலும் வாரியத்தால் 2,000 வீடுகள் கட்டப்பட்டு கடந்த மூன்றரை வருடங்களாகக் குடியேற்றம் செய்யப்படாமல் பாழடைந்து கிடக்கின்றன. ஆற்றங்கரையில் இருந்த குடியிருப்புகளும் அப்புறப்படுத்தப்படவில்லை. இப்படி தமிழ்நாடு முழுக்க குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 22,000 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளைக் குடியேற்றம் செய்யாமல் விட்டுவைத்திருக்கிறார்கள். ஆக, யாரோ சிலர் சுயலாபம் அடைவதற்காக இது போன்ற திட்டங்களில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது'' என்கிறார் அழுத்தமாக.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

``22,000 வீடுகள் பழுதடைந்து கிடக்கின்றன!'' - அமைச்சர் தா.மோ.அன்பரசன் அதிர்ச்சித் தகவல்!

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism