Published:Updated:

`கீழடியில் அரசியலாராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்!’ - கொதிக்கும் அமைச்சர் தங்கமணி

`கீழடி விவகாரத்தில் அரசியல் செய்வது நாங்கள் இல்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான்' என்று அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.

Thangamani
Thangamani

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ``அகழ்வாராய்ச்சி பணி தமிழக முதல்வர் வேண்டுகோளுக்கிணங்க முறையாக நடைபெற்று வருகிறது. இதை அரசியலாகப் பார்க்கக் கூடாது. அகழ்வாராய்ச்சி குறித்து மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து பழைமைமாறாமல் இருக்க தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு கீழடியில் பணியாற்றிய மத்திய அரசு அலுவலர் ஒருவர், உயர் அலுவலர்களையோ மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்களையோ அழைத்து வந்து காட்டாமல், அவர் சார்ந்து இருக்கும் கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்று பொறுப்பில் இருந்த தமிழ்நாடு தலைவர் ஜி.ராமகிருஷ்ணனை அழைத்து வந்து சுற்றிக் காண்பித்தார்.

கீழடி 'வியப்பு' - தமிழர் வரலாறும் இரண்டு புதிர் முடிச்சுகளும்!

அதனால் அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டு அதற்கான போராட்டங்கள் நடந்தது. தொடர்ந்து அங்கு அகழ்வாராய்ச்சி செய்வதை விடுத்து அரசியலாராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அந்த இடத்துக்குச்  சென்றிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், அந்தத் துறை அமைச்சர் கூறியதுபோல அரசியல் செய்கிறார். நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இப்போது 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் பார் டெண்டர் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. கடை விற்பனையைப் பொறுத்து முன்தொகை மாறுபடும்.

தமிழகத்தில் 5,000 மதுகடைகள் இருந்த நிலையில், அதைக் குறைத்து 2,000 கடைகளாக உள்ளன. இதையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்குத் தக்கல் முறையில் வருடத்துக்கு 10,000 மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான ஆணை அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்படும். அவலாஞ்சியில் மழைபாதிப்பால் உயிரிழப்பு மற்றும் பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளை நேற்று நான் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி வந்தேன். நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்திலேயே மூன்று நாள்களாக மின்சார ஊழியர்கள் அங்கு தங்கி இருந்து மின்சார இணைப்பு சீரமைப்பு  மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார்கள்.

கீழடி
கீழடி

அவர்களுக்குத் தண்ணீர், உணவுகூட கிடைக்காத நிலையில் இந்திய ராணுவம் அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களைப் போட்டு சாப்பிட்டு மின்சார வாரிய ஊழியர்கள் துரிதமாக அந்தப் பணிகளை மேற்கொண்டார்கள். கொல்லிமலை அனல்மின் திட்டப்பணிகள் ஒரு வருடம் காலதாமதம் ஆகும் நிலையில் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் ஆவதால் காலதாமதமாகிறது. அதில், நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. அதைப் பார்த்துதான் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். மதுபானக் கடைகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா விரைவில் வைக்கப்பட உள்ளது" என்றார்.