``முதலமைச்சர் டெல்லிப் பயணத்தின் மர்மத்தை மக்களுக்கு விளக்குவாரா? பதவிக்கு வந்த 10 மாத காலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதலமைச்சர், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை டெல்லியில் சென்று சந்தித்திருப்பதாகச் செய்திகள் பரவிவருகின்றன" என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ``முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் கிடைத்துள்ள வரவேற்பாலும் மரியாதையாலும் எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றார். ஒவ்வொரு முறை டெல்லிக்குச் சென்றபோதும், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நலனையும் உரிமையையும் அடகுவைத்துள்ளார். ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கான கோரிக்கைக்காகவே பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். முதலமைச்சர் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளார். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எந்த ஒரு தேவையும் முதல்வர் ஸ்டாலினுக்குக் கிடையாது" என்றார்.