Published:Updated:

வேலுமணிக்கு 47... தங்கமணிக்கு 26 - அ.தி.மு.க வேட்பாளர் தேர்வில் ஓங்கிய அமைச்சர்களின் கைகள்!

வேலுமணி, தங்கமணி

``வேட்பாளர் தேர்வில் குறிப்பிட்ட இருவரின் கைதான் ஓங்கியிருக்கிறது'' என்கிற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர் அ.தி.மு.க-வினர்.

வேலுமணிக்கு 47... தங்கமணிக்கு 26 - அ.தி.மு.க வேட்பாளர் தேர்வில் ஓங்கிய அமைச்சர்களின் கைகள்!

``வேட்பாளர் தேர்வில் குறிப்பிட்ட இருவரின் கைதான் ஓங்கியிருக்கிறது'' என்கிற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர் அ.தி.மு.க-வினர்.

Published:Updated:
வேலுமணி, தங்கமணி

அ.தி.மு.க-வின் இரண்டாம்கட்ட வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு அந்தக் கட்சியில் மிகப்பெரிய அளவில் சலசலப்பு உண்டாகியிருக்கிறது. சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் இன்று காலை டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க-வில் இணைந்துவிட்டார். கதர் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் வழங்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் சிவகங்கை அரண்மனை முன்பாக தீக்குளிக்க முயன்று கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதேபோல, கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதிருப்தியடைந்த அ.தி.மு.க-வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இப்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர்
அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர்

முதற்கட்டமாக கடந்த 5-ம் தேதி ஆறு வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க. அதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், எம்.எல்.ஏ தேன்மொழி - நிலக்கோட்டை (தனி) தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று 171 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், `வேட்பாளர் தேர்வில் கட்சியில் உண்மையாக உழைத்தவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. அம்மா யாரையெல்லாம் ஒதுக்கிவைத்திருந்தாரோ அவர்களுக்கெல்லாம் சீட் வழங்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. தவிர, குறிப்பிட்ட இருவர் கைகாட்டிய 70 பேருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்கிற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் அ.தி.மு.க-வினர்.

போராடும் அ.தி.மு.க தொண்டர்கள்
போராடும் அ.தி.மு.க தொண்டர்கள்

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``அம்மா யாரையெல்லாம் ஒதுக்கிவைத்திருந்தார்களோ அவர்களுக்குத்தான் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சின்னையா, மூர்த்தி போன்றவர்களை அம்மா எந்த இடத்தில் வைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும். கட்சிக்காக வேலை செய்யும் இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், ஐடி விங் நிர்வாகிகள் என இளைய தலைமுறையினர் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதிலிருந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எடப்பாடியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மீண்டும் ஜெயித்தால், தான் முதல்வராவதற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் போக்குக்கு எடப்பாடி சென்றிருக்கிறார். அமைச்சர்களிடம் இருக்கின்ற பணத்தை வைத்து எப்படியும் ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என தப்புக் கணக்கு போட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தவகையில், கோவை மாவட்டத்தில் ஒன்பது பேர், திருப்பூர், நீலகிரி, கடலூர், சென்னை, மதுரை, சிவகங்கை என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வேலுமணி கைகாட்டிய 47 பேருக்கும், அமைச்சர் தங்கமணி கைகாட்டிய 26 பேருக்கும் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவு வேட்பாளர்களே வெறும் ஒன்பது பேர்தான். தவிர, முதல்வரின் விருப்பமாகவும் ஒரு பத்து பேருக்குத்தான் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலுமணி, தங்கமணி இருவரின் கை மட்டுமல்ல, காமராஜ், சி.வி.சண்முகம் என அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் கைகாட்டியவர்களுக்கும்தான் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து போன மாதம் கட்சியில் சேர்ந்த ஒருவருக்கு, ஆலங்குடி தொகுதியில் அமைச்சர் காமராஜ் சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதுநாள் வரை அந்தப் பகுதியில் கட்சிக்காக உழைத்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி - இரட்டை இலை
அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி - இரட்டை இலை

ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் என யாருக்கும் இந்தமுறை சீட் வழங்கப்படவில்லை. தி.மு.க-வில் முன்பு எப்படி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்குமோ அதேநிலைதான் தற்போது அ.தி.மு.க-விலும் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. அமைச்சர்களின் கட்டுப்பாட்டுக்குள் முதல்வர் போய்விட்டார். இதனால், பதவியில் இல்லாமல் கட்சிக்காக உழைத்த பலரும் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர். களப்பணி செய்யக்கூடிய தொண்டர்களின் மனநிலையை முதல்வர் புரிந்துகொள்ளவே இல்லை'' என்றவர்களிடம் வேட்பாளர் தேர்வு குறித்து ஓ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லையா எனக் கேட்க,

``ஆரம்பத்தில் கொஞ்சம் கடுமை காட்டினார். ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடிதான். அவர் சௌகரியத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என ஒதுங்கிவிட்டார். வேட்பாளர் பட்டியலையும் வீட்டுக்கு கொடுத்தனுப்பச் சொல்லி கையெழுத்து போட்டு அனுப்பிவிட்டார். கட்சி அலுவலகத்துக்கே அவர் வரவில்லை'' என்கிறார்கள்.

அ.தி.மு.க-வில் தற்போது பற்றியிருக்கும் இந்த அதிருப்தி தீ நிச்சயமாகத் தேர்தல் களத்திலும் பரவுமா அல்லது ஊதி அணைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism