சேலம், மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய தொகுதிகளிள்ள தி.மு.க மூத்த முன்னோடிகள் 1,040 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி எடப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம் குறும்பபட்டியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட தி.மு.க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க முடிவுசெய்திருக்கிறோம். மூத்த முன்னோடிகளின் நலனில்தான் கழகத்தின் வெற்றி, தோல்வி இருக்கிறது. கழகம் ஆறு முறை வெற்றிபெற்று அண்ணா, கலைஞர், இப்போது நமது தலைவர் என அனைவரும் முதலமைச்சராகியிருக்கிறார்கள்.
பின்னர் எடப்பாடி தொகுதியில் இது போன்ற மாபெரும் கூட்டத்தை நடத்தியிருப்பது பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்துவிட்டு எடப்பாடியாரைப் பற்றிப் பேசவில்லையென்றால் அவர் வருத்தப்படுவார். எடப்பாடி பழனிசாமி மாநில உரிமைகளைப் பறிக்கும் பாசிச பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்திருக்கிறார்.

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அது பெரியார் பிறந்த மண். மானம், சுயமரியாதையுள்ள மண். அதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி கண்டிப்பாக வெற்றிபெறும். எடப்பாடி பழனிசாமி அவர்களே... ஈரோட்டில் பெரியார் நினைவகம் ஒன்று இருந்துவருகிறது. நான் அங்கு சென்றிருக்கிறேன். நீங்களும் சென்று பாருங்கள். அப்போதுதான் தமிழ்நாட்டின் அருமை என்னவென்று உங்களுக்கும் தெரியும்.
ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ் ஆகிய மூன்று பேருக்கும் எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை. நாட்டு மக்களுக்கும் உண்மையாக இல்லை. ஆனால், அவர் உண்மையாக இருப்பது மேலே இருக்கும் மோடி, அமித் ஷா, மற்றும் தமிழக ஆளுநருக்கு மட்டும்தான்.
நான் ஆரம்பத்தில் சட்டப்பேரவையிலேயே ஒரு விஷயத்தை வெளிப்படையாகப் பேசினேன். அதில், `எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இருவரும் என் காரில் தவறுதலாக ஏறிவிட்டீர்கள். அதே போன்று நானும் உங்களது காரில் ஏறியிருக்கிறேன்.

இருப்பினும் உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, தயவுசெய்து கமலாலயத்துக்கு மட்டும் சென்றுவிடாதீர்கள்' என்று கூறினேன். ஆனால், அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ் எழுந்து, `எங்களது கார் எப்போதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அலுவலகத்தை நோக்கித்தான் செல்லும்’ என்று வீர வசனம் பேசினார். ஆனால், இன்று இரண்டு பேருமே போட்டி போட்டுக்கொண்டு கமலாலயத்தில்தான் குடியே இருந்துவருகின்றனர்" என்றார்.