சேலம், மாசிநாயக்கன்பட்டியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 26,649 பேருக்கு 221.42 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், " சேலத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து வந்திருக்கிறேன். ஆனால், அமைச்சரான பிறகு, முதன்முறையாக சேலம் வந்து உதவிகள் வழங்குவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சேலத்தில் 17 துறைகளில் முடிவுற்ற 222 கோடி ரூபாய் மதிப்பிலான 300 பணிகளைத் தொடங்கிவைத்திருக்கிறோம். மேலும், 216 கோடி ரூபாய் மகளிர் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கியிருக்கிறோம். அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் 140 கோடி ரூபாய் கடன் பெற்று தள்ளுபடி செய்யப்பட்ட 1,724 மகளிர் குழுக்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 1.16 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுவருகின்றனர். 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இன்று நமது மாநிலம் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக, நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது என்றால் அதற்கு தமிழக முதல்வரும், அதிகாரிகளும்தான் காரணம். மிகச் சிறந்த ஆட்சி நடைபெற்றுவருவதால், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய வழியில்லாமல் போய்விட்டது. அதனால் வெற்று விளம்பரத்துக்காக, பொய்யான அவதூறுகளைப் பரப்புகின்றனர். இது போன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால், ஒருசிலர் தங்களைப் பற்றிய உண்மையான ஆவணப்படம் வெளிவந்ததற்கே பயந்துபோய் அதைத் தடை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதேபோல் சமரசமும் செய்யாமல், அடிமைத்தனமும் இல்லாமல் சிறப்பான சுயமரியாதை உள்ள அனைவருக்கும், அனைத்தும் என்ற கொள்கையுடன் இயங்குவதுதான் நம்முடைய ஆட்சி. சிறப்பான திராவிட மாடல் அரசு என்றும் உங்களுக்குத் துணை நிற்கும். எனவே, போலிகளையும், பொய்யர்களையும், துரோகிகளையும் நம்பி ஏமாறாமல் என்றும் இந்த அரசுக்குத் துணை நிற்க வேண்டும்" என்றார்.