மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவி வழங்குதல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கழகத்தினுடைய அடிப்படை உறுப்பினராக, கழகத்தினுடைய இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக என பலமுறை நான் திருச்சி மாவட்டத்துக்கு வந்திருக்கிறேன். ஆனால், அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு நான் திருச்சிக்கு வருவது இதுதான் முதன்முறை. விமான நிலையத்திலிருந்து விழா மேடை வரை கொடுக்கப்பட்ட உற்சாக வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது” என நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் உதயநிதி. தொடர்ந்து பேசியவர், “பெண்கள் பொருளாதாரத்தால் சுய சார்பு பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்குடன், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் விதைத்த விதைதான் இன்று பல லட்சக்கணக்கான மகளிர் பயனடையும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்னும் அமைப்பாக மாறியிருக்கிறது. சுய உதவிக் குழு இயக்கம் தமிழ்நாட்டிற்கான முன்னோடித் திட்டமாக மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே முதன்மைத் திட்டமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெண்கள் நலம் நாடும் நம்முடைய அரசானது, பெண்கள் சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றமடைந்து சுய சார்பு பெற்று ஆற்றல் மிக்கவர்களாக திகழ வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் எண்ணற்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் தீட்டி வருகிறார்கள். 2021 தேர்தல் அறிக்கையிலே தலைவர் அவர்கள், ‘தி.மு.க., ஆட்சி அமைந்தால் மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து சேவைத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என வாக்குறுதி கொடுத்திருந்தார். ‘இதற்கு வாய்ப்பே இல்லை’ என அனைத்து எதிர்க்கட்சியினரும் சொன்னார்கள். ஆனால், 2021-ல் பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சலுகையை நம்முடைய முதல்வர் அறிவித்தார்கள். இதுவரை கிட்டத்தட்ட 100 கோடி கட்டணமில்லா பயணங்களை, பல லட்சம் பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர். பல கிராமங்களில் அந்த பேருந்துகளை பார்த்தால் ‘ஸ்டாலின் பஸ்’ என்றே பெண்கள் செல்லமாக அழைக்கின்றனர். அதேபோல் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ருபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி, மகளிர் முன்னேற்றத்தில் மாபெரும் புரட்சியை கல்வியின் மூலம் முதலமைச்சர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, தலைவருடைய மகனாக, முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாக என பலமுறை நான் திருச்சிக்கு வந்துள்ளேன். இப்போது அமைச்சர் என்ற பொறுப்போடு வந்திருக்கிறேன். இது எல்லாவற்றையும்விட எப்போதுமே உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய பெருமை. இப்போது அமைச்சர் என்ற பொறுப்பை தலைவர் எனக்கு வழங்கியிருக்கிறார். இனி செல்லப் பிள்ளையாக மட்டுமல்லாமல், பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பேன்” என்றார்.