Published:Updated:

சாரட் வண்டிப் பயணம்; மூத்தவர்களுக்குப் பொற்கிழி - உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் விசிட்!

உதயநிதி ஸ்டாலின்

`` `சின்னவர்' என்கிற பட்டம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சின்னவர் பட்டம் எப்போது பொருந்துகிறதோ இல்லையோ, இந்த மேடையில் எனக்குப் பொருந்துகிறது. கழகத்தின் மூத்த நிர்வாகிகளான உங்களைவிட நான் அனுபவத்திலும் வயதிலும் சின்னவர்தான்." - உதயநிதி

Published:Updated:

சாரட் வண்டிப் பயணம்; மூத்தவர்களுக்குப் பொற்கிழி - உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் விசிட்!

`` `சின்னவர்' என்கிற பட்டம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சின்னவர் பட்டம் எப்போது பொருந்துகிறதோ இல்லையோ, இந்த மேடையில் எனக்குப் பொருந்துகிறது. கழகத்தின் மூத்த நிர்வாகிகளான உங்களைவிட நான் அனுபவத்திலும் வயதிலும் சின்னவர்தான்." - உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

திருவாரூர் மாவட்ட தி.மு.க சார்பில் முப்பெரும் பொதுக்கூட்ட விழா நடத்தப்பட்டது. அதில் அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கு.தென்னனின் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி திருவாரூர் வன்மீகபுரத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளுக்கு 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருள்கள் அடங்கிய பொற்கிழியை வழங்கினார். ஒரு நாள் பயணமாக திருவாரூருக்கு வந்த அமைச்சர் உதயநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, ``தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. இந்தப் பிரச்னை தொடர்பாக நாளை நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்படும்" என்று கூறினார்.

பிறகு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கருணாநிதியின் நெருங்கிய நண்பரான கு.தென்னனின் இல்லத்துக்குச் சென்று, அவரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, அவரின் இல்லத்திலிருந்து தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறுகிற கலைஞர் அரங்கம் வரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி சாலை மார்க்கமாக அழைத்து வந்தார். அமைச்சர் உதயநிதி குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்ந்து பயணித்து வருவதைக் கண்ட தி.மு.க-வினர், உற்சாகக் கரவொலி எழுப்பி, ஆரவாரத்தில் துள்ளிக் குதித்து மகிழ்ந்தனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், தி.மு.க-வைச் சேர்ந்த சுமார் 1,000 மூத்த நிர்வாகிகளுக்கு 10,000 ரூபாய் ரொக்கம், கைக்கடிகாரம், சுவர்க் கடிகாரம், குடை, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொற்கிழியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், இந்த முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சாரட் வண்டிப் பயணம்; மூத்தவர்களுக்குப் பொற்கிழி - உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் விசிட்!

இந்த முப்பெரும் பொதுக்கூட்ட நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ``நமது கட்சியின் சார்பில் எத்தனையோ விழாக்களும், பொதுக்கூட்டங்களும் முன்னெடுக்கப்பட்டாலும், கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வை மனதுக்கு நெருக்கமான சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாக நான் கருதுகிறேன்.

அதனால்தான் என்னிடம் பூங்கொத்து, பொன்னாடை வழங்கக்கூடிய நண்பர்களிடம் இளைஞரணிக்கு அதிக அளவில் நிதியைத் தாருங்கள் அவற்றை நாங்கள் எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் மருத்துவச் செலவுக்காகப் பயன்படுத்துகிறோம் என்று சொல்லியிருக்கிறேன். உண்மையாக இந்தப் பொதுக்கூட்ட மேடைக்கு நான் சிறப்பு விருந்தினர் அல்ல. கழகத்துக்காக தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்த மூத்த நிர்வாகிகளான நீங்கள்தான், இந்த விழாவின் முக்கியமான நாயகர்கள்

சாரட் வண்டிப் பயணம்; மூத்தவர்களுக்குப் பொற்கிழி - உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் விசிட்!

நீங்கள் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. உங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு சின்ன பொறாமை ஏற்படும். நான் கலைஞரைப் பார்த்திருக்கிறேன், தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் நான் நேரில் பார்த்ததில்லை. எனக்கு முன்னால் அமர்ந்திருக்கின்ற கழகத்தின் மூத்த நிர்வாகிகளாகிய நீங்கள் அண்ணாவையும் பெரியாரையும் நேரில் பார்த்திருப்பீர்கள்.

அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஒரு பொறாமை எனக்கு அடிக்கடி ஏற்படும். நமது உடன்பிறப்புகள் எனக்கு நிறைய பட்டப் பெயர்களைச் சூட்டிவருகிறார்கள். அதில் எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை.

இறுதியாகக்கூட `சின்னவர்' என்கிற பட்டம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சின்னவர் பட்டம் எப்போது பொருந்துகிறதோ, இல்லையோ இந்த மேடையில் எனக்குப் பொருந்துகிறது. கழகத்தின் மூத்த நிர்வாகிகளான உங்களைவிட நான் அனுபவத்திலும் வயதிலும் சின்னவர்தான். தி.மு.க ஆட்சி அமைந்தபோது டெல்டா மாவட்டத்தில் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்ற ஒரு சர்ச்சை எழுந்தது.

சாரட் வண்டிப் பயணம்; மூத்தவர்களுக்குப் பொற்கிழி - உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் விசிட்!

அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ, `நானே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்' என்று பதிலளித்தார். அதைத்தான் நானும் பெருமையோடு சொல்கிறேன். நானும் இந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான். மேலும், இங்கே கலைஞர் தாத்தாவின் நெருங்கிய நண்பர் தென்னன் அவர்களின் நூற்றாண்டுவிழாவும் தொடங்கப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றி கலைஞர் தாத்தா அதிகமாக தனது `நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் எழுதியிருக்கிறார். தன்னுடைய முதல் நண்பனாக தென்னன் அவர்களைத்தான் கலைஞர் தாத்தா கூறிக்கொண்டேயிருப்பார். அந்த அளவுக்கு கலைஞர் அவர்களுக்கும், தென்னன் தாத்தா அவர்களுக்கும் இடையே மிகப்பெரிய நட்பு இருந்தது. அந்த வகையிலே, இந்தப் பொதுக்கூட்ட நிகழ்வுக்கு வந்திருக்கிற கழகத்தின் மூத்த முன்னோடி நிர்வாகிகளான உங்கள் அனைவரின் பாதமலர்களையும் தொட்டு வணங்கி, தொடர்ந்து கழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்" என்றார்.