Published:Updated:

`அமைச்சர் வீரமணி - தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் மோதல்!’- போர்க்களமாக மாறிய அரசு நிகழ்ச்சி

அணைக்கட்டுப் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் கே.சி.வீரமணியும் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு கட்சியினரும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மல்லுக்கட்டியதால் அரங்கமே போர்க்களமாக மாறியது.

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூரை அடுத்த அணைக்கட்டுப் பகுதியில் உள்ள டி.வி.ஆர் திருமண மண்டபத்தில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 2,153 பயனாளிகளுக்கு, ரூ.4.93 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், ஆவின் தலைவர் வேலழகன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, பேசிய தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், ‘தன் தொகுதியில் பெறப்பட்ட மனுக்களின் மீது மட்டும் அலட்சியம் காட்டுகிறீர்கள்’ என்றுகூறி ஆளுங்கட்சிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை அடுக்கத் தொடங்கினார். 

அணைக்கட்டு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்
அணைக்கட்டு தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார்

அமைச்சர் வீரமணி இடையில் குறுக்கிட்டு, ‘விளம்பரத்துக்காக தி.மு.க எம்.எல்.ஏ பேசுகிறார்; அந்த மைக்கை பிடுங்குங்கப்பா’ என்றார். இதனால், அமைச்சருக்கும் தி.மு.க எம்.எல்.ஏ-வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தி.மு.க எம்.எல்.ஏ பேசிக்கொண்டிருந்த மைக்கை அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் கீழே தள்ளினார்.

அதையடுத்து, அ.தி.மு.க-வினரும் தி.மு.க-வினரும் கரை வேட்டியை முட்டிக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு மேடை மீது பாய்ந்தனர். மாறி மாறித் திட்டி கைகலப்பில் ஈடுபட்டனர். அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினர் கரை வேட்டியை வைத்து இரு தரப்பினரையும் தனித்தனியாகப் பிரித்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். 

தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் தன் கட்சியினரை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினார். மோதல் காரணமாக அரங்கமே அதிர்ந்தது. பாதியில் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சியை மீண்டும் நடத்தினர். பயனாளிகள் அச்சத்திலேயே அமர்ந்திருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற்றுச் சென்றனர்.

மோதல் குறித்து தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமாரிடம் பேசினோம். ``உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நலத்திட்ட உதவிகளைக் கொடுக்க நிகழ்ச்சி நடத்துகிறார்கள். என்னைத் தாசில்தார் அழைத்தார். நான், ஊர் ஊருக்குப் போய் ஊராட்சி சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் 1956 மனுக்கள் பெற்று பழைய கலெக்டர் ராமனிடம் கொடுத்திருந்தேன். 

மோதிக்கொண்ட அ.தி.மு.க-தி.மு.க நிர்வாகிகள்
மோதிக்கொண்ட அ.தி.மு.க-தி.மு.க நிர்வாகிகள்

அதில், எத்தனை பயனாளிகளைத் தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளைக் கொடுக்கிறீர்கள் என்று தாசில்தாரிடம் கேட்டேன். நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், கணவரை இழந்த சேர்ப்பாடி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்ற விதவைப் பெண் இரண்டு குழந்தைகளுடன் வந்து கண்ணீர்விட்டு அழுதார்.

அந்தப் பெண்ணுக்கு 25,000 ரூபாயை நலத்திட்ட உதவியாகக் கொடுக்க சொன்னேன். இதுநாள் வரை அந்தத் தொகையைக் கொடுக்கவில்லை. இதுபற்றி தாசில்தாரிடம் நேற்றே சொன்னேன். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த விதவைப் பெண்ணை வரவழைத்து, அமைச்சரிடம் நியாயம் கேட்டேன்.

நலத்திட்டப் பட்டியலில் விதவைப் பெண்ணின் பெயர் இல்லை. நான் ஏற்கெனவே கொடுத்த மனுக்களில் 700 பேருக்கு முதியோர் உதவித்தொகை தர வேண்டும். ஆனால், 100 பேருக்கு மட்டுமே தருவதாகக் கூறினர். மேலும் 350 பேரின் மனுக்களைப் பரிசீலனையில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். பரிசீலனை என்றால் என்னவென்றுதான் கேட்டேன்.

இதற்கே அமைச்சர் கோபப்படுகிறார். மைக்கை ஆஃப் செய்ய முயன்றனர். இதுதான் தகராறுக்குக் காரணம். கடைசி வரை அந்த விதவைப் பெண்ணுக்கு நலத்திட்ட உதவியை அவர்கள் தரவே இல்லை. தி.மு.க-வினர் விளம்பரத்துக்காக ஆசைப்படுபவர்கள் இல்லை. தேவையில்லாமல் அ.தி.மு.க-வினர்தான் சண்டைக்கு வருகிறார்கள்’’ என்றார். 

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

இதுபற்றி அமைச்சர் வீரமணியின் தரப்பில் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ‘‘அரசு நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏ நடந்துகொண்ட விதம் சரியில்லை. மேடையில் கலெக்டரின் அருகில்தான் எம்.எல்.ஏ நந்தகுமார் உட்கார்ந்திருந்தார். கலெக்டரிடமே, பிரச்னையைச் சொல்லி தீர்வு கண்டிருக்கலாம். அதைவிடுத்து அந்தப் பயனாளியை மேடைக்கே வரவழைத்து வாக்குவாதம் செய்கிறார். அதனால்தான், எங்களுக்குக் கோபம் வந்தது’’ என்றனர்.