Published:Updated:

`வெளிநாடு பறக்கும் நேரத்திலா இந்தச் சோதனை!'- மனம் நொந்த விஜயபாஸ்கர்

அ.சையது அபுதாஹிர்

சுகாதாரத் துறைச் செயலாளர் பிலா ராஜேஷ் லண்டன் நகருக்கு ஏற்கெனவே சென்றுவிட்டார். அங்கு முதல்வரின் நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். இந்த நிலையில், டாக்டர்கள் போராட்டத்தினால் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பயணம் இப்போது சிக்கலில் உள்ளது.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையிலும் இந்தப் போராட்டம் நீட்சி அடைந்துள்ளது. இதனால், நோயாளிகள் பாதிக்கப்படாமல் மாற்று ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை செய்துவருகிறது

விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி
விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை சென்னையிலிருந்து நேரடியாக லண்டன் நகருக்கு எடப்பாடி பழனிசாமி செல்ல இருக்கிறார். லண்டனில் மருத்துவப் பணியாளர்களின் தரத்தை மேம்படுத்த அங்கு மனிதவள நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய இருக்கிறார். மேலும், இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டுவரும் அவசர ஆம்புலன்ஸ் திட்டத்தையும், மலேரியா உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளார்கள். லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனை தமிழகத்தில் தனது கிளையை நிறுவ உள்ளது. அது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தமும் லண்டனில் கையொப்பமாகிறது. இதைத் தவிர இந்துஜா தொழில் குழுமத்தினருடன் சந்திப்பும் இருக்கிறது.

தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதல் திட்டங்களே சுகாதாரத் துறை சார்ந்த திட்டங்கள் இருப்பதால் அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு லண்டன் செல்ல இருக்கிறார். அவரைத் தவிர, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் வெளிநாடு பயணத்தில் பங்கெடுக்க உள்ளார்கள்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

ஆனால், அவர்கள் முதல்வர் லண்டன் சென்றபிறகே இவர்கள் கிளம்ப இருக்கிறார்கள். முதல்வரோடு பயணிக்க இருந்த விஜயபாஸ்கருக்கு கடைசி நேரத்தில் புதிய சிக்கல் மருத்துவர்களின் போராட்டம் வடிவில் எழுந்துள்ளது.

சுகாதாரத் துறைச் செயலாளர் பிலா ராஜேஷ் லண்டன் நகருக்கு ஏற்கெனவே சென்றுவிட்டார். அங்கு முதல்வரின் நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். இந்த நிலையில், டாக்டர்கள் போராட்டத்தினால் விஜயபாஸ்கர் பயணம் இப்போது சிக்கலில் உள்ளது. இன்று காலைமுதல் சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டக் குழுவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

போராட்டம்
போராட்டம்

``இந்தப் போராட்டத்தை நான் சுமுகமாக முடித்தால்தான் நாளை லண்டன் கிளம்ப முடியும். போராட்டத்தை வைத்துக் கொண்டு கிளம்ப முடியாது” என்று நாசூக்காக அவர்களிடம் சொல்லியுள்ளார். ஆனால், மாலைவரை பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருந்தும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இரவுக்குள் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, காலை விமானம் ஏறிவிடும் டென்ஷனில் அமைச்சர் தரப்பு இருக்கிறது.