Published:Updated:

`ஜீவித்குமாரின் முடிவால் இன்னொரு மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும்!’- அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

`நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித்குமார் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி கலந்தாய்வில் பங்கேற்காமல், பொதுப்பிரிவில் பங்கேற்பதாக எடுத்திருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று’ - விஜயபாஸ்கர்.

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில் அது குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``விவசாயிகளின் கனவுத் திட்டமான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முதற்கட்டமாக ரூ.7677 கோடி ஒதுக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக முதல்வர் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக, 50 சதவிகிதத்துக்கும் அதிகமான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை அரசிடம் ஒப்படைத்துவருகின்றனர். கையகப்படுத்தும் நிலத்துக்கு அதிக தொகையை வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியிருக்கிறோம். கரூரிலிருந்து புதுக்கோட்டைக் கவி நாடு கண்மாய் வரையிலும் 52 கிலோமீட்டருக்கு கால்வாய் அமைக்கப்படவிருக்கிறது. தற்போது முதற்கட்டமாக ரூ.331 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்படவிருக்கிறது. டிசம்பர் மாதத்தில் டெண்டர் பணிகள் முடிவடைந்து ஜனவரி மாதம் இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது. அதுவும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் நடைபெறும்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், திட்டமிட்டபடி 18-ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும். அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித்குமார் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி கலந்தாய்வில் பங்கேற்காமல், பொதுப்பிரிவில் பங்கேற்பதாக எடுத்திருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. இதன் மூலம் மற்றோர் அரசுப் பள்ளி மாணவர் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். முதல்வர் கொண்டு வந்திருக்கும் இட ஒதுக்கீடுதான் இது போன்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

பாதிப்பு எண்ணிக்கையை இரண்டு சதவிகிதமாகக் குறைத்திருக்கிறோம். எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தினசரி 80,000 வரையிலான ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுத்துவருகிறோம். கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களில் 2.8 சதவிகிதம் பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருக்கிறது. தமிழகம் உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும், அடுத்த இரு மாதங்களுக்குப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். பண்டிகைக் காலங்கள் வருகின்றன. ஆன்மிகப் பயணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலம் வேறு தொடங்கியிருக்கும் நிலையில் மிகுந்த எச்சரிக்கையாகப் பொதுமக்கள் இருக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு