Published:Updated:

`ஸ்டாலின்போன்ற எதிர்க்கட்சித் தலைவர்... தமிழகத்தின் துரதிருஷ்டம்!’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர் - ஸ்டாலின்
விஜயபாஸ்கர் - ஸ்டாலின்

`அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்தும், அமைச்சர் இறப்பில் அரசியல் லாபம் தேடும் எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்நாடு பெற்ற்றிருப்பது நமக்கெல்லாம் துரதிருஷ்டம்’ - அமைச்சர் விஜயபாஸ்கர். 

``மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துகள் கூறிவரும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும். மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் இறப்பிலும், `அறிக்கை’ என்ற பெயரில் மலிவான அரசியல் செய்வது வேதனையாக இருக்கிறது" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

துரைக்கண்ணு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
துரைக்கண்ணு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``ஸ்டாலின், `அறிக்கை’ என்ற பெயரில் அநாகரிகமாக அரசியல் செய்கிறார். கொரோனா காலத்திலும் முதலமைச்சர், களத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். அமைச்சர்கள் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். கொரோனா உச்சகட்டம் அடைந்து உலகத்தில் இரண்டாம் அலை அடிக்கும் நேரத்திலும், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இட ஒதுக்கீடு: `நாங்கள் எதிர்க்கட்சி; அரசியல்தான் செய்வோம்!’ - முதல்வருக்கு ஸ்டாலின் பதில்

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10% பேர் மட்டுமே மருத்துவமனையில் இருக்கிறார்கள். அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 40 சதவிகிதமாக இருந்த நுரையீரல் பாதிப்பு 90 சதவிதமாக அதிகரித்ததால் அவர் உயிரிழந்தார். அவருக்கு காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர் உயிரிழந்தார்.

பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

அவரின் மரணத்தில் ஸ்டாலின் யாரை குற்றம்சாட்டுகிறார் எனத் தெரியவில்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது அமைச்சரின் மரணத்தில் அரசியல் செய்கிறார். அநாகரிகமாகப் பேசுவது ஏற்புடையதல்ல. அன்பழகன், எஸ்.பி.பி., வசந்தகுமார் என யாராக இருந்தாலும் நேரிலும், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமும் விசாரித்தோம்.

விஜயபாஸ்கர் ஸ்டாலின்
விஜயபாஸ்கர் ஸ்டாலின்

சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தோம். துரைக்கண்ணு இறப்பில் மர்மம் இருக்கிறது எனக் கூறுவது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், வார்த்தையை கவனமாகக் கையாள வேண்டும். இறப்பில் மர்மம் இருக்கிறது என அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. இதைவைத்து அரசியல் செய்கிறார். விஷத்தை அள்ளித் தெளிக்கிறார்.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சையில் இருந்தபோது, உயரிய மருந்துகள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக அவருக்கு அரசு தேவையான மருந்துகளை அளித்தது. கடவுளுக்கு நிகராகப் பணி செய்யும் நமது மருத்துவர்களின் சேவையைக் கொச்சைப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சித் தலைவருடைய அறிக்கை அமைந்திருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

வேளாண்மைத்துறை அமைச்சர் சிகிச்சை பெற்றுவந்த காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் சிகிச்சை பெற்றார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்தபோதிலும், அமைச்சர் இறப்பில் அரசியல் லாபம் தேடும் எதிர்கட்சித் தலைவரை தமிழ்நாடு பெற்ரிருப்பது நமக்கெல்லாம் துரதிர்ஷ்டம். அவருடைய இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. மறைந்த அமைச்சரின் இறப்பின்மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் 16-ம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு ஓரிரு நாளில் கலந்தாய்வு நேரில் நடைபெறும். 7.5 சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஸ்டாலின், பழனிசாமி
ஸ்டாலின், பழனிசாமி

மக்கள் சுயகட்டுப்பாடுடன்கூடிய தீபாவளியாகக் கொண்டாடினால் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தலாம். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுவரை எட்டு மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறினார். இந்தப் பேட்டியின்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு