Published:Updated:

`அங்கு ரூ.30,000 சம்பளம்; இங்கு ரூ.80,000..!'-மருத்துவர்களுக்கு இறுதி எச்சரிக்கைவிடுத்த விஜயபாஸ்கர்

`மருத்துவர்கள் இன்று மாலைக்குள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்' என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

தமிழகத்தில் மருத்துவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாகத் தங்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்தப் போராட்டம் நடைபெறுவதால் நோயாளிகள் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று போராட்டக்காரர்களின் ஒரு சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர், மருத்துவர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், `அமைச்சருக்கு ஆதரவான மருத்துவர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்களின் கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை' என்று கூறி ஒரு தரப்பு மருத்துவர்கள் இன்றும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், `இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்பாத மருத்துவர்கள் வேலை இழந்ததாக அறிவிக்கப்படுவார்கள்' என நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

நோயாளிகள்
நோயாளிகள்

இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ``அரசின் கோரிக்கையை ஏற்று இன்று ஒருநாளில் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,550 மருத்துவர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு என் சார்பிலும் அரசு, மக்கள் மற்றும் நோயாளிகள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்லும் பாதை, படிகளை அடைத்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவின் வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தீபாவளி சமயத்தில் மருத்துவர்கள் ஸ்டிரைக் ஏன்... அமைச்சர் விஜயபாஸ்கர்தான் காரணமா?

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மருத்துவமனை போராட்டக் களம் கிடையாது. உங்கள் போராட்டம் மற்றும் கோரிக்கைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது. நாங்கள் எந்த நேரத்திலும் மருத்துவர்களைச் சந்தித்து இது குறித்துப் பேசத் தயாராக இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4,683 மருத்துவர்களில் 50 பேர் மட்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர்களைத் தண்டிப்பது அரசின் நோக்கம் இல்லை. எங்களைப் பொறுத்தவரை நோயாளிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது.

மக்கள் மற்றும் நோயாளிகளின் நலன்கருதி மருத்துவர்கள் விரைவாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என முதல்வரும் மென்மையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், மருத்துவர்கள் அதையும் கேட்கவில்லை. இரவு முழுவதும் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்தால்கூட 30,000 ரூபாய் சம்பளம்தான் வழங்கப்படும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் வேலைக்குச் சேர்ந்த முதல் மாதமே 80,247 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுபோக, வேலை நேரம், விடுமுறை உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், பணியில் இருக்கும் மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என விரும்பினாலும் அதற்கான வாய்ப்பையும் அரசு வழங்குகிறது. அவர்கள் படிக்கும் காலத்தையும் பணிக்காலமாகக் கருதி அப்போதும் மருத்துவர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் படிப்பை முடித்துவிட்டு வந்தவுடன் அதிக சம்பளம் கொடுத்து பணி உயர்வும் வழங்கப்படுகிறது. ஆனால், மருத்துவர்கள் மத்திய அரசு வழங்கும் சம்பளத்தைக் கேட்கிறார்கள்.

அமைச்சருக்கு ஆதரவான மருத்துவர்கள் என்னைப் பார்த்துப் பேசியதாக சிலர் கூறுகின்றனர். 50 ஆண்டுகளாக இருக்கும் ஒரு மருத்துவ சங்கம் எப்படி அமைச்சருக்கு ஆதரவாக இருக்கும். அவர்கள் அரசை நம்பி தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

பிற துறைகளை ஒப்பிடும்போது, மருத்துவம் ஒரு சேவைத்துறை. அவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் அனைத்து மருத்துவர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும். தேவைப்பட்டால் இன்னும் சில மணி நேரம் கூடுதலாக கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், இன்றைக்குள் பணிக்குத் திரும்பாத மருத்துவர்களின் இடங்கள் காலி பணி இடங்களாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதுவும் இன்று மாலையே காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமனம் தொடங்கும்” என எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.