Published:Updated:

`பொன்.மாணிக்கவேல் எங்கள் பெயரைக் குறிப்பிடவே இல்லை!' - சிலைகடத்தல் புகாரை மறுக்கும் அமைச்சர்கள்

இ.லோகேஷ்வரி
லோகேஸ்வரன்.கோ

சிலைக் கடத்தலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லையென அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன்
திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன்

சிலைக் கடத்தலில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பிருப்பதாக, பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக ஒரு தகவல் வந்தது. இதையடுத்து, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் அதை மறுத்துள்ளனர்.

சிலைக் கடத்தல்
சிலைக் கடத்தல்

சிலைக் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி காதர் பாட்ஷா, பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மற்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளுமாறு மனு தாக்கல் செய்தனர். பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ``சிலை கடத்தல் சம்பவங்களில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக'' பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஒரு தகவல் வந்தது. ஆனால் நீதிமன்றத்தில், அமைச்சர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தத் தகவல் மட்டும் பரவியது. குறிப்பாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் ஆகியோர், சிலைக் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்று செய்தி வந்தது.

சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
சேவூர் எஸ்.இராமச்சந்திரன்

சிலைக் கடத்தலில் அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பிருக்கிறது. அமைச்சர்களுக்குத் தொடர்பில்லை'' என பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார் பொன்.மாணிக்கவேல். அதேநேரம், சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வு இருக்கும்போதே, விசாரணையில் அமைச்சர்களின் தலையீடு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிலைக் கடத்தலில் அமைச்சர்களின் தொடர்பிருப்பதாக செய்தி வெளியாந்தையடுத்து, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாகப் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது, ``சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில், சிலை கடத்தலில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியிருக்கிறார். அந்த அமைச்சர்கள் யாரென்று நீதிமன்றம் சொல்வதற்குள் தனியார் தொலைக்காட்சியில் சிலை கடத்தலில் எங்கள் இருவருக்கும்தான் தொடர்பிருப்பதாக அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளனர்.

திண்டுக்கல் சீனிவாசன் 
திண்டுக்கல் சீனிவாசன் 

நீதிமன்றத்தில் எங்கள் பெயரை பொன்.மாணிக்கவேல் குறிப்பிடவே இல்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் எங்களின் புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக அந்தத் தொலைக்காட்சி மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர உள்ளோம். பிரஸ் கவுன்சிலில் புகார் கூறியுள்ளோம். அந்தத் தொலைக்காட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பில்லை" என்றனர்.