அரசியல்
அலசல்
Published:Updated:

பி.டி.ஆர் - மூர்த்தி பனிப்போர்... தகிக்கும் மதுரை தி.மு.க!

மூர்த்தி  - பி.டி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
News
மூர்த்தி - பி.டி.ஆர்

“பி.டிஆர் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல. பெரிய குடும்பத்துப் பிள்ளை, படித்தவர் என்பதை மறந்து சில நேரங்களில் சாதாரண அரசியல்வாதிபோல நடந்துகொள்கிறார்

மதுரை அரசியலில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்களே அந்தந்தக் கட்சியின் தென்மாவட்ட அரசியல் முகமாகப் பார்க்கப்படுவார்கள் என்பதால் அங்கே உட்கட்சி அக்கப்போருக்குப் பஞ்சமே இருக்காது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில்கூட, சீனியரான செல்லூர் ராஜூவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையே பனிப்போர் இருந்தது. ஆனால், வெளிப்படையாக அதை அவர்கள் காட்டிக்கொண்டதில்லை. ஆனால், இப்போது நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தியும் ஒருவருக்கொருவர் சவால்விடுக்கும் வகையில் வெளிப்படையாக மோதிக்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தான் நடத்திய கறிவிருந்துக்கு வராத தி.மு.க-வினரை, சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார் பி.டி.ஆர். “தி.மு.க-வில் சிலர் கட்சி நிகழ்வுகளைத் தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்கக் கூறி மிரட்டுகிறார்கள். நான் பெரிய மனிதன். பெருந்தன்மை இன்றி, அற்ப விஷயங்களுக்காக நீங்கள் சிறிய மனிதர்களாகிவிடாதீர்கள்” என்றார் அவர்.

அமைச்சர் மூர்த்தி கலந்துகொள்ளும் எந்த நிகழ்விலும் மேயர் உள்ளிட்ட பி.டி.ஆருக்கு நெருக்கமானவர்கள் கலந்துகொள்வதில்லை என்பதை ஒரு மரபாகவே கடைப்பிடிக்கிறார்கள். இதனால், சமீபத்தில் அய்யர் பங்களா, ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் மழைவெள்ள நீரை அகற்றாவிட்டால், மேயருக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிரடியாக அறிவித்தார் அமைச்சர் மூர்த்தி.

மதுரை தி.மு.க-வுக்குள் என்ன நடக்கிறது என்ற விசாரணையில் இறங்கினோம்...

பி.டி.ஆர் - மூர்த்தி பனிப்போர்... தகிக்கும் மதுரை தி.மு.க!

தொடங்கியது எப்படி?

மதுரை அரசியல் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகி, “2016-லேயே பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ ஆகிவிட்டார் என்றாலும்கூட, 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வரும்வரையில் அவர்களுக்குள் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. மேயர் தேர்தலில்தான் மோதலே தொடங்கியது. காரணம் கட்சியைப் பொறுத்தவரையில், பி.மூர்த்திக்கு மாநகர தி.மு.க-வில் வேலையில்லை. ஐடி விங் மாநிலப் பொறுப்பாளர் என்பதால், தியாகராஜனும் மாவட்ட அரசியலில் ஆர்வம் காட்டவில்லை.

2021-ல் இருவருமே அமைச்சராக்கப்பட்டதால், இருவர் பின்னாலும் உள்ளூர் நிர்வாகிகள் அணிதிரள ஆரம்பித்தார்கள். மேயர் தேர்தலில், வேட்பாளர் தேர்வு முதல் அனைத்துப் பொறுப்புகளும் பி.டி.ஆரிடமே ஒப்படைக்கப்பட, தனி ஆவர்த்தனம் செய்தார் அவர். கட்சியில் சீனியர், மாவட்ட அமைச்சர் என்ற முறையில் ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட பி.மூர்த்தியை அவர் கலந்தாலோசிக்கவில்லை. கூடவே, மாநகர் தி.மு.க-வின் அன்றைய பொறுப்பாளர்களான கோ.தளபதி, பொன்.முத்துராமலிங்கம் ஆகியோரையும் அவர் பொருட்படுத்தவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் ஆதரவாளர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டதால், கடுப்பான அவர்கள் பி.டி.ஆருடன் வெளிப்படையாகவே முரண்பட்டார்கள். மேயர் இந்திராணி பொன்வசந்தும், பி.டி.ஆர்-போலவே அமைச்சர் மூர்த்தி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைப் புறக்கணித்ததால், இந்த விரிசல் பெரிய பிளவாகவே மாறியது. `எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற அடிப்படையில், கோ.தளபதி, பொன்.முத்துராமலிங்கம் உள்ளிட்ட மொத்த சீனியர்களும் இப்போது மூர்த்தி பக்கம் போய்விட்டார்கள். அவர்கள் மூர்த்தியோடு இணக்கமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் டெண்டர்களும் கொடுக்கப்படவில்லை” என்றார் அவர்.

மாவட்டச் செயலாளர் தேர்தல்!

“இந்தப் பிளவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் மாவட்டச் செயலாளர் தேர்தல் வந்தது. தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளராக தான் இருந்தபோது, அந்த அணியின் துணைச் செயலாளராக இருந்த இலக்குவன் மூலம் தனக்கு அறிமுகமான அதலை செந்தில்குமாரை மாவட்டச் செயலாளராக்க விரும்பினார் பி.டி.ஆர். அதைவிட நல்ல சாய்ஸை பி.டி.ஆர் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், ‘இந்த அதலை செந்தில்குமாரின் டிராக் ரெக்கார்டு சரியில்லை’ என உடனிருந்தவர்கள் எடுத்துச் சொன்னபோதும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே கோ.தளபதி, மூர்த்தி மூலமாக சீனியர் அமைச்சர்களைப் பிடித்து, மதுரை மாநகர் மா.செ-வாகத் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டார்.

மேயர் தேர்தலில் ஸ்கோர் செய்த பி.டி.ஆருக்கு உட்கட்சித் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியே கிடைத்தது. கூடவே, மாநகரில் பிடி இல்லாமல் இருந்த மூர்த்திக்கு, ஒரு ‘தளபதி’யையும் தானே ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார் பி.டி.ஆர். இப்போது மதுரையில் இருக்கும் பகுதிச் செயலாளர்களில் வெறும் எட்டுப் பேர் மட்டுமே பி.டி.ஆருடன் இருக்கிறார்கள். கட்சிக்காரர்களுடன் நெருங்கிப் பழகாதது, இன்னமும் பண்ணையார்த்தனமாகவே நடந்துகொள்வது போன்றவை பி.டி.ஆரின் மைனஸ்” என்கிறார்கள் மூர்த்தி ஆதரவு தி.மு.க-வினர்.

அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் உறவு!

“ஒரு கட்சி என்றால், கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால், சொந்தக் கட்சி அமைச்சரைக் கவிழ்க்க மாற்றுக்கட்சியினருடன் கைகோப்பது மூத்த அமைச்சரான மூர்த்திக்கு அழகா?” என்று கேட்கிறார்கள் பி.டி.ஆர் ஆதரவாளர்கள். இது குறித்துப் பேசிய அவர்கள், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மோசமான முறைகேடு நடந்தது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற முறையில் பி.டி.ஆரும், சு.வெங்கடேசன் எம்.பி-யும் இது பற்றிக் கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால் மூர்த்தியோ, அ.தி.மு.க அமைச்சர்களுடன் அண்ட் கோ போட்டுக்கொண்டு அமைதி காத்தார். இப்போதும்கூட அவரது அந்த உறவு தொடர்கிறது. அதனால்தான், பி.டி.ஆரை விமர்சிக்கும் செல்லூர் ராஜூ, உதயகுமார் போன்றோர் அமைச்சர் மூர்த்தி பற்றியோ, அவரது துறையைப் பற்றியோ எதுவும் பேசுவதில்லை. மூர்த்தி வீட்டுத் திருமணத்தில் சித்தாந்த எதிரிகளான பா.ஜ.க-வினருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பை ஊரே அறியும்” என்றனர்.

“பி.டிஆர் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல. பெரிய குடும்பத்துப் பிள்ளை, படித்தவர் என்பதை மறந்து சில நேரங்களில் சாதாரண அரசியல்வாதிபோல நடந்துகொள்கிறார். மூர்த்தியைப் பொருளாதாரரீதியில் முடக்க வேண்டும் என்று அவரது தொழில்ரீதியிலான பல ஃபைல்களை முடக்கி வைத்திருக்கிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர். மூர்த்தி மகன் திருமண ஆடம்பரம் பற்றி மூர்த்தி முன்னிலையிலேயே முதல்வர் ஸ்டாலினிடம் விமர்சித்திருக்கிறார்” என்கிறார்கள் மூர்த்தி ஆதரவாளர்கள்.

இந்தப் பிரச்னையைத் தலைமை கண்டித்ததால், ‘தேவர் ஜயந்திக்காக பசும்பொன் வருகைதரும் முதலமைச்சரை வரவேற்க செயற்குழுக் கூட்டம்’ என்ற பெயரில் ஒற்றுமைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறது மதுரை தி.மு.க. ஆனாலும், இந்தப் பனிப்போர் முழுவதுமாக ஓயவில்லை என்பதே கள நிலவரம்!