Published:Updated:

14 நாள்கள் வெளிநாடு பயணம்; புறப்பட்டார் முதல்வர்! - உடன் செல்லும் அமைச்சர்கள் யார் யார்?

ஆர்.பி.
பிரேம் குமார் எஸ்.கே.

ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதால், விஜயபாஸ்கர் முதல்வருடன் லண்டன் பயணமாவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

CM Palanisami
CM Palanisami

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை, அவர் தனது பயணத்தைத் தொடங்கினார்.

Minister vijaya baskar
Minister vijaya baskar

காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்கிறார். அங்கு, மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளைக் கண்டறிந்து, அதை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். செப்டம்பர் 1 -ம் தேதி அமெரிக்கா செல்லும் முதல்வர், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்.

அங்கிருந்து செப்டம்பர் 7-ம் தேதி புறப்படும் முதல்வர் பழனிசாமி, செப்டம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில், துபாயில் தொழில் முனைவோர்களைச் சந்தித்து கலந்துரையாடுகிறார். இறுதியாக, செப்டம்பர் 10-ம் தேதி சென்னை திரும்புகிறார். முதலீட்டை ஈர்ப்பதே முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் நோக்கம் என ஏற்கெனவே தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், `நான் தொழில் அதிபர் கிடையாது. சாதாரண விவசாயி. நான் நேரில் சென்று அழைத்தால், தமிழகத்தில் தொழில் தொடங்க வருவார்கள்’ என்றார்.

Minister RB Udhayakumar
Minister RB Udhayakumar

முதல்வரின் இந்தப் பயணத்தின்போது, உடன் செல்லும் அமைச்சர்களின் பட்டியலில் சிறு குழப்பம் நிலவிவந்தது. லண்டன் பயணத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொள்வார் என கூறப்பட்ட நிலையில், நேற்று நடந்த மருத்துவர்களின் ஸ்டிரைக் அதற்கு சிக்கலை ஏற்படுத்தியது. எனினும் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதால், விஜயபாஸ்கர் முதல்வருடன் லண்டன் பயணமாவத்தில் எந்த சிக்கலும் இல்லை. பின்னர், லண்டனிலிருந்து முதல்வர் அமெரிக்கா செல்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை திரும்புவார்.

முதல்வரின் அமெரிக்கா பயணத்தில், அமைச்சர்கள் சம்பத், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப் பயணங்களில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொள்வார் என்று கூறப்பட்ட நிலையில், அவரின் பயணம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Panneer selvam
Panneer selvam

இந்த 14 நாள்கள் பயணத்தின்போதும், முதல்வர் வசமுள்ள துறைகளை மற்ற அமைச்சர்களுக்கோ துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

`வெளிநாடு பறக்கும் நேரத்திலா இந்தச் சோதனை!'- மனம் நொந்த விஜயபாஸ்கர்

சென்னை விமான நிலையத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ``அன்னிய முதலீட்டை கொண்டு வருவதற்காக இதுவரை எந்த முதலமைச்சரும் தமிழகத்தில் வெளிநாட்டு பயணங்களை சமீபகாலமாக மேற்கொண்டதில்லை. புது முயற்சியாக தமிழக முதல்வர் எடப்பாடியார் இன்று இங்கிலாந்து அமெரிக்கா போன்ற உலக நாடுகளுக்கு சென்று தமிழகத்திற்கு தேவையான முதலீடுகளைப் பெற்று தர பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பயணம் வெற்றிகரமான பயணமாக அமைவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.