மிஸ்டர் கழுகு: ஒற்றை கஜானா பேக்கேஜ்... கொதிப்பில் உடன்பிறப்புகள்... ‘திராவிட மாடலுக்கு ஸ்வாஹா?!’

வீடியோ வைரலானதும், கட்சித் தலைமையிலிருந்து ராஜேஷ் குமாருக்கு ‘டோஸ்’ விழுந்திருக்கிறது. இதில் இன்னொரு ட்விஸ்ட்.
தமிழ்நாடு அரசு நடத்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றுவிட்டு அலுவலகம் வந்து சேர்ந்தார் கழுகார். “முதல்வரும் ஆளுநரும் ராசியாகிவிட்டார்களா... என்ன?” என்று கேட்டபடி தேநீர் கோப்பையை நீட்டினோம். “அப்படித்தான் தெரிகிறது. ஆனால், தி.மு.க கூட்டணிக் கட்சிகள்தான் காதில் புகைவிடுகின்றன” என்ற கழுகார் செய்திகளுக்குள் நுழைந்தார்.
“ ‘புரோட்டோகால்படிதான் தேநீர் விருந்துக்குச் சென்றார் முதல்வர்’ என்கிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், உதயநிதி, துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட ஆறு அமைச்சர்களையும் அழைத்துக் கொண்டு இவ்வளவு ஆர்வமாக அவர் சென்றதையும், ஆளுநரோடு துரைமுருகன், உதயநிதி சகிதம் முதல்வர் 15 நிமிடங்கள் பேசியதையும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லையாம். ‘நம்மை ஆளுநரோடு மோதவிடுறாங்க... இன்னொரு பக்கம், அவங்க சமரசம் ஆகிக்குறாங்க. புரோட்டோகால் என்றால், முதல்வர் மட்டும் சென்றிருக்கலாமே... மகனையும் சேர்த்து அழைத்துக்கொண்டு போய்தான் ஆளுநரைக் குளிர்விக்க வேண்டுமா...’ எனக் கொதிக்கிறது அந்தத் தலைவர்கள் வட்டாரம்.”

“சரிதான். இடைத்தேர்தல் அப்டேட் இருக்கிறதா?”
“அது இல்லாமலா... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்திருக்கிறது அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்க முதலில் ஆர்வம்காட்டிய, முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் இப்போது தயங்குகிறாராம். ‘தேர்தல் செலவுகள் கழுத்தை நெரித்துவிடும்போலிருக்கிறதே... எப்படித் தாக்குப்பிடிப்பது?’ என்று அவர் சொல்ல, ‘சில சமுதாயத் தலைவர்கள் மூலமாக ராமலிங்கத்தைக் குழப்பிவிட்டுவிட்டனர். அதனால்தான் பின்வாங்குகிறார்’ என்கிறார்கள் ஈரோடு
அ.தி.மு.க-வினர். எடப்பாடி பழனிசாமியே ஈரோட்டுக்கு நேரில் சென்று பஞ்சாயத்துப் பேசியிருக்கிறார்.”
“யார்தான் வேட்பாளராம்?”

“தனக்கு வலுசேர்க்கும் ‘வைட்டமின்’களை கட்சியிலிருந்து எதிர்பார்க்கிறார் ராமலிங்கம். இவர் பின்வாங்கினால் களமிறக்குவதற்கு முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, பகுதிச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோரையும் ஆப்ஷனில் வைத்திருக்கிறது எடப்பாடி தரப்பு. இந்தத் தேர்தலை கெளரவப் பிரச்னையாகக் கருதும் எடப்பாடி, பத்து நாள்களுக்கு முன்னதாகவே ஈரோட்டில் முகாமிடத் திட்டமிட்டிருக்கிறாராம். அவர் தங்குவதற்காக பெருந்துறையிலுள்ள அவரது சம்பந்தி வீடு தயாராகிறது. தலா இரண்டு ‘ஸ்வீட்’ பாக்ஸுகளை ஈரோட்டுக்கு அனுப்பிவைக்கும்படி அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.”
“தி.மு.க சும்மாவா இருக்கிறது?”
“அங்கே உற்சாகம் கரை புரள்கிறது. கொசுவலை ஏரியா ‘கம்பெனி’ தரப்பிலிருந்து வேறு தினமும் பெட்டி பெட்டியாக உற்சாக பானங்கள் வந்திறங்குகின்றனவாம். ‘வேளா வேளைக்குச் சாப்பாடு, செலவுக்குப் பணம்’ எனக் கட்சியினரைத் திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள் தி.மு.க தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள். ‘70,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஜெயிக்கவைக்க வேண்டும்’ என முதல்வர் கட்டளையிட்டிருப்பதால், பரபரப்பாகியிருக்கிறார் கொங்கு அமைச்சர். உள்ளாட்சித் தேர்தலின்போது கொலுசுச் சத்தத்தால் கோவையை அதிரச்செய்தவர், இந்த முறை வெள்ளி குத்துவிளக்குகளால் ஈரோடு கிழக்கையே பிரகாசப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறாராம். அதற்காக திருச்சி, காரைக்குடி, மதுரை ஏரியாக்களில் வெள்ளிக் குத்துவிளக்குகளுக்கு ஆர்டர்களும் பறந்திருக்கின்றன.”

“விளக்கேத்துறது இருக்கட்டும்... ஒருவர், ‘திராவிட மாடல் ஆட்சிக்கே ஸ்வாஹா’ போட வைத்திருக்கிறாரே?”
“ஹா... ஹா... அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக நாமக்கல்லில் விழாப் பந்தல் அமைப்பதற்கான பூமி பூஜையில்தான், ‘திராவிட மாடல் ஆட்சி ஸ்வாஹா.... உதயநிதி ஸ்டாலின் நாமம் ஸ்வாஹா...’ எனப் புரோகிதர்கள் மந்திர உச்சாடனம் செய்திருக்கிறார்கள். இந்தப் ‘புதுவித’ பூஜையில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் பயபக்தியோடு பங்கேற்றதுதான் வேடிக்கை. வீடியோ வைரலானதும், கட்சித் தலைமையிலிருந்து ராஜேஷ் குமாருக்கு ‘டோஸ்’ விழுந்திருக்கிறது. இதில் இன்னொரு ட்விஸ்ட். ‘நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு முட்டை நிறுவனம், சென்னையின் பிரபல ஹோட்டலில் ராஜேஷ்குமார் தங்குவதற்கு வருடம் முழுவதும் அறை எடுத்துக் கொடுத்திருக்கிறது. சர்ச்சைக்குரிய அந்த நிறுவனத்துக்கே மீண்டும் ஒப்பந்தங்கள் கிடைக்க காய்நகர்த்திவந்த ராஜேஷ்குமார், இப்படிச் சறுக்கியிருப்பதால் அவருக்கு அறை எடுத்துத் தந்த நிறுவனமும் கடுப்பாகிவிட்டது’ என்கிறார்கள் நாமக்கல் தி.மு.க-வினர்.”
“நெடுஞ்சாலைத் துறையில் என்ன சலசலப்பு?”
“தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, ‘நெடுஞ்சாலைத்துறையில் பேக்கேஜ் டெண்டர் முறையே இனி இருக்காது’ எனத் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்திலேயே அறிவித்தார் அல்லவா... இந்த அதிரடி அவர்களுக்கே பாதகமாகிவிட்டதாம். எதிர்பார்த்த ‘ஸ்வீட் பாக்ஸ்’ வராதது குறித்து துறையின் உயரதிகாரிகளை அழைத்துப் பேசியிருக்கிறது அமைச்சர் தரப்பு. ‘பேக்கேஜ் முறை ரத்து செய்யப்பட்டது தான் எல்லாவற்றுக்கும் காரணம். மீண்டும் அதைக் கொண்டுவந்தால்தான் நமக்கெல்லாம் லாபம்’ என விளக்கியிருக்கிறார் ஓர் அதிகாரி. ‘நல்லவேளை எங்க கண்ணைத் திறந்தீங்க... இனி, சின்னச் சின்ன டெண்டர்களையும் பேக்கேஜ் முறைக்குள்ளேயே கொண்டு வந்துடுங்க’ என்று சொல்லிவிட்டதாம் அமைச்சர் தரப்பு. இதையடுத்தே, பேக்கேஜ் ரத்து அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. சின்னச் சின்ன டெண்டர்கள் எடுத்துவந்த கட்சிக்காரர்களெல்லாம், ‘அவர் ஆளுங்க பெட்டி பெட்டியா வாங்கி அடுக்குறதுக்கு, எங்க வயித்துல அடிச்சுட்டாங்களே.... ஏற்கெனவே டாஸ்மாக் பார் கட்சிக்காரனுக்கு இல்ல... தலையாரி வேலையும் இல்ல... இப்ப சின்ன டெண்டர்கூட இல்லைன்னா எப்படி... எல்லோருக்குமான வளர்ச்சிதான் திராவிட மாடல்னு முதல்வர் சொல்வதெல்லாம் வெறும் வாய்வார்த்தைதானா?’ எனக் கொந்தளிக்கிறார்கள்” என்ற கழுகார், சமோசாக்களை சுவைத்தபடி அடுத்த செய்திக்குத் தாவினார்.

“நெய்வேலியில், ‘அரசியலமைப்பைப் பாதுகாப்போம் - கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரசாரத்தை முன்னெடுப்பது குறித்து, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கொடிக்குனில் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் பேசிய அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும், பிரசாரத் திட்டம் குறித்து அதிகம் பேசாமல், அழகிரியைப் புகழ்வதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இதில் கடுப்பான கொடிக்குனில் சுரேஷ், ‘நாம எதுக்காக வந்துருக்கோம்... நீங்க என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க... இங்க வந்துருக்குறவங்க காங்கிரஸ் தொண்டர்கள் மாதிரியே எனக்குத் தெரியல... பணம் கொடுத்து கூட்டம் கூட்டுனா இப்படித்தான் இருக்கும்’ எனக் கடுகடுத்தபடி கிளம்பிவிட்டாராம்” என்ற கழுகார்...
“தமிழ்நாடு தலைமைச் செயலாளர் பதவிக்கான ரேஸ் சூடுபிடித்திருக்கிறது. ஹன்ஸ் ராஜ் வர்மா, முருகானந்தம் இவர்கள் இருவருக்கிடையேதான் கடும் போட்டி. சீனியாரிட்டியின்படி இந்திய அளவில் 5-வது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் இருக்கிறார் ஹன்ஸ் ராஜ் வர்மா. கருணாநிதி ஆட்சியில் மின்சாரத்துறை சேர்மனாக பதவி வகித்ததிலிருந்தே மேலிடக் குடும்பத்துக்கு நெருக்கமாக அறியப்படும் அவர், அந்த நெருக்கத்தை வைத்து தீவிரமாகக் காய்நகர்த்துகிறாராம். முருகானந்தமோ, அரசின் நிதித்துறைச் செயலாளராக முதல்வரின் நம்பிக்கையைப் பெற்றவர். அந்த ரூட்டில் அவரும் காய்நகர்த்துகிறார். யார் என்ன கணக்கு போட்டாலும், மேலிடத்து மாப்பிள்ளை போடும் கணக்குதான் தலைமைச் செயலாளர் தேர்வுக்கான விடையாக இருக்கும் என்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.
கழுகார் எக்ஸ்க்ளூசிவ்
* சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ‘நந்தவன’ அதிகாரி, அலுவலகத்துக்கே பெரும்பாலும் வருவதில்லையாம். அவரிடம் பல கோப்புகள் தேங்கியிருப்பதால், கடுப்பான மாநகராட்சியின் உயரதிகாரி, ‘விருப்பம் இருந்தால் வேலை செய்யுங்கள். இல்லையென்றால், ராஜினாமா செய்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்’ எனக் கடுகடுத்துவிட்டாராம்.
* வடசென்னை ஏரியா ஒன்றில், ‘செல்லமாக’ இயங்கும் விடுதியில் பெட்டி பெட்டியாகக் கறுப்புப் பணம் குவிந்திருக்கிறதாம். ஈரோடு இடைத்தேர்தலுக்குக் கொண்டு செல்வதற்காக, சில கரைவேட்டிகள் பதுக்கியிருப்பதாகத் தகவல்.