அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: எடப்பாடிக்கு ஒரு மெசேஜ்... அண்ணாமலைக்கு ஒரு மெசேஜ்... அமித் ஷா பஞ்சாயத்து

அமித் ஷாவுடன் சந்திப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷாவுடன் சந்திப்பு

அண்ணாமலை குறித்து நாம் இவ்வளவு சொல்லியும் பேருக்காகக்கூட ஒரு வார்த்தை அவரைக் கண்டித்துச் சொல்லவில்லையே... என்று கடுமையாக அப்செட் ஆகியிருக்கிறார் எடப்பாடி.

பெரிய டிராவல் பேக் மற்றும் விமான டிக்கெட்டோடு அலுவலகத்துக்குள் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “என்ன... நீரும் டெல்லி செல்கிறீரா?” என்று கிண்டலாகக் கேட்ட நம்மை ஏற இறங்கப் பார்த்தவர், “தமிழ்நாட்டில் அரசியல் அனல் தாங்க முடியவில்லை. அதனால், முசோரிக்குச் சென்று ஓய்வெடுக்கப்போகிறேன்” என்றார். “எமெர்ஜென்சி எக்ஸிட்டைத் திறந்துவிடாதீர்...” என்று கலாய்த்தபடி பயணத்துக்கு எடுத்துச் செல்ல தேன்குழல் முறுக்கைக் கொடுத்தோம். அதில் ஒன்றை எடுத்துக் கொறிக்கத் தொடங்கிய கழுகாரிடம், “அமித் ஷா-வுடனான சந்திப்பில் என்ன பேசினாராம் எடப்பாடி... போன காரியம் சக்சஸா?” என நாம் கேள்வியை முன்வைக்க... முறுக்கைச் சுவைத்தபடியே உரையாடலைத் தொடர்ந்தார்.

“கடந்த இதழில் குறிப்பிட்டதுபோல, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறித்தும், அவரது வார் ரூம் விவகாரங்களையும் அமித் ஷாவிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘எதிர்க்கட்சியாகச் செயல்படத் தடையாக இருப்பதே தமிழக பா.ஜ.க-வும், ஓ.பி.எஸ்-ஸும்தான். இந்த இருவர் விஷயத்தை நீங்கள்தான் சரிசெய்து கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை அ.தி.மு.க தரப்பில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அமித் ஷா, அண்ணாமலையைத் தன் அறைக்குள் அழைத்திருக்கிறார். இரண்டு தரப்பையும் வைத்துக்கொண்டு ‘பழைய கதையை விடுங்கள். பாஸ்ட் இஸ் பாஸ்ட்... தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது. இந்த நிலையில், தேவையில்லாத குழப்பங்களை இரு தரப்புமே தவிர்க்க வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான், தி.மு.க-வை எதிர்கொள்ள முடியும்’ என அட்வைஸ் செய்து அனுப்பி வைத்திருக்கிறார். அண்ணாமலை அருகிலேயே இருந்ததால், எடப்பாடியால் தமிழ்நாடு பா.ஜ.க-வினர் குறித்தோ, அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் குறித்தோ அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை என்கிறார்கள்.”

அமித் ஷாவுடன் சந்திப்பு
அமித் ஷாவுடன் சந்திப்பு

“ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பில் யாருடைய முகத்திலும் உற்சாகம் இல்லையே?”

“எப்படி இருக்கும்... வீராவேசமாகக் கிளம்பிச் சென்றவர்கள், அமித் ஷாவிடம் சொல்ல வந்ததை முழுதாகச் சொல்ல முடியவில்லை அல்லவா... அண்ணாமலை குறித்து நாம் இவ்வளவு சொல்லியும் பேருக்காகக்கூட ஒரு வார்த்தை அவரைக் கண்டித்துச் சொல்லவில்லையே... என்று கடுமையாக அப்செட் ஆகியிருக்கிறார் எடப்பாடி. வருத்தத்தோடு வருத்தமாக, தமிழ்நாட்டில் நடந்துவரும் ஜி ஸ்கொயர் மீதான ரெய்டு குறித்தும், நிதியமைச்சர் பி.டி.ஆரின் ஆடியோ பரபரப்புகள் குறித்தும் சில ஃபைல்களை அமித் ஷாவிடம் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்”

“அதெல்லாம் சரி... திடீரென அண்ணாமலை அங்கே எப்படித் தோன்றினாராம்?”

‘‘சந்திப்பில் அண்ணாமலையும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, கர்நாடகத் தேர்தல் பணியில் இருந்தவரை டெல்லிக்கு வரச்சொல்லியிருக்கிறது மேலிடம். ‘நாங்கள் அண்ணாமலையோடு பேச மாட்டோம். அமித் ஷாவோடுதான் பேசுவோம்’ என்று சொல்லி, டெல்லிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்குப் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அமித் ஷா. சந்திப்பில் தன் பக்கத்தில் அண்ணாமலையை வைத்துக்கொண்டதன் மூலமாக ‘எங்கள் அனுமதியோடுதான் அண்ணாமலை செயல்படுகிறார்’ என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது டெல்லி தலைமை. அதோடு ‘கூட்டணி குறித்த விஷயத்தில் டெல்லி மேலிடம்தான் முடிவெடுக்கும்’ என்பதை அண்ணாமலைக்கும், ‘அந்த முடிவை மாநிலத் தலைமை இல்லாமல் எடுக்க மாட்டோம்’ என்பதை அ.தி.மு.க-வுக்கும் இந்தச் சந்திப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.”

நிதியமைச்சர் பி.டி.ஆர்
நிதியமைச்சர் பி.டி.ஆர்

“நீங்கள் இருவருமே எங்கள் கைப்பாவைகள்தான் என்பதை மிக அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் என்று சொல்லும்!”

“அதை ஏன் நாம் சொல்வானேன்... இன்னொரு மேட்டர் இருக்கிறது கேளும். முன்னாள் அமைச்சர் ஒருவர்மீது கடந்த ஆண்டு நவம்பரில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த விவகாரத்தில் விரைவில் தான் விசாரிக்கப்படலாம் என்பதை அறிந்துதான் எடப்பாடியுடன் டெல்லிக்குப் பறந்திருக்கிறார் அவர். அந்த வழக்கு தொடர்பாக டெல்லி வட்டாரத்தில் பேசியிருக்கிறார். மேலும் பெண் பிரமுகர் மூலமாக ‘மஞ்சள்’ பிசினஸில் தீவிரம் காட்டிய அவரை, அமலாக்கத்துறை சுற்றிவளைக்கத் தயாராகிவருகிறதாம். இதிலிருந்து தப்பிக்க சில ஆலோசனைகளையும், ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வந்திருக்கிறாராம் அந்த மாஜி.”

“முதல்வரின் டெல்லி பயணம்..?”

“அதற்குத்தான் வருகிறேன்... ஜூன் 3-ம் தேதி நடைபெறவிருக்கும் கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்புவிழாவுக்குக் குடியரசுத் தலைவர் முர்முவை அழைப்பதற்கான பயணமாம்...”

“அவ்வளவுதானா?”

“ஏன் இப்படிக் கேட்கிறீர் என்பது புரிகிறது... ‘குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகத் தமிழ்நாட்டுக்கு வந்த முர்முவை வரவேற்க ஜூனியர் அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்பிவைத்துவிட்டு இதற்கு மட்டும் ஏன் நேரில் சென்று அழைப்பு விடுக்கிறார்கள்..?’ என்பதுதானே உம் கேள்வி. உமது லாஜிக் சரிதான். ஆனால் ‘குடியரசுத் தலைவரை அழைக்கத்தான் டெல்லி பயணம். வேறு எந்தக் காரணமும் இல்லை’ என்று சூடம் கொளுத்தி சத்தியம் செய்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் பட்சி ‘ஏதோ நடக்கிறது’ என்றுதான் சொல்கிறது.”

“சட்ட மசோதா விஷயத்தில், தி.மு.க-வில் எல்லோரும் பின்வாங்கிவிட, ஒருவர் மட்டும் `குய்யோ முய்யோ’ என்று கூவுகிறாரே?”

“தி.மு.க சீனியர்களே 12 மணி நேர வேலை சட்ட மசோதா விஷயத்தில் மக்களின் எதிர்ப்பைப் புரிந்துகொண்டு பின்வாங்கிவிட்டார்கள். பிரச்னை ஓயும் நேரத்தில் அணையும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும்விதமாக இந்தத் தொழிலாளர் விரோத சட்டத்துக்கு முட்டுக்கொடுத்து, சம்பந்தமே இல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறார் வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா. ‘என்ன நடக்குதுனு புரியாம சிறுபிள்ளைத்தனமாகப் பேசியிருக்கிறார். தலைமை கூப்பிட்டு வசமா குட்டு வைக்கப்போகிறது’ என்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள்” என்ற கழுகாருக்கு ஜில்லென இளநீர் பாயசம் கொடுத்தோம். அதை வாங்கிப் பருகியபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“நிதியமைச்சரின் இரண்டாவது ஆடியோ வெளியாகியிருக்கிறது. இந்த ஆடியோ விவகாரத்தால், கோபத்தின் உச்சத்தில் இருக்கிறதாம் தலைமை. முதல் ஆடியோ வெளியானபோதே தலைமையை நேரில் சந்தித்து விளக்கமளிக்க அமைச்சர் எவ்வளவோ முயன்றும், நேரம் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். இரண்டாவது ஆடியோ வெளியானதும், ‘அருகிலேயே வரக் கூடாது’ என அனலைக் கக்கியிருக்கிறது தலைமை. ஆனால், இரண்டாவது ஆடியோ வெளியான அன்று மாலை ‘எப்படியாவது முதல்வரைச் சந்தித்து விளக்கம் அளித்தே தீருவேன்’ என முதல்வர் முகாம் அலுவலக வாசலிலேயே காத்திருந்திருக்கிறார் அமைச்சர். சுமார் ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு முதலமைச்சரைச் சந்தித்த நிதியமைச்சர், ஆடியோ குறித்து சில விளக்கங்களைச் சொல்லியிருக்கிறார். அதைக் கடமைக்குக் கேட்டுக்கொண்டு அனுப்பிவைத்திருக்கிறார் முதல்வர். அமைச்சரின் விளக்கத்துக்கு வாரிசிடமும் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லையாம்.”

“சீனியர் அமைச்சர் ஒருவர், எதிர் முகாமின் காதைக் கடித்ததாகக் கேள்விப்பட்டோமே?”

பிரபாகர் ராஜா
பிரபாகர் ராஜா

“முதன்மையானவரின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் அந்த சீனியர் அமைச்சர், இலைத் தரப்பை அழைத்து ‘இவ்வளவு பிரச்னை போய்க்கிட்டிருக்கு. அதையெல்லாம் எடுத்துப் பேசவேண்டியதுதானேங்க. அட்லீஸ்ட் அந்த ஆடியோ விவகாரத்தையாவது சத்தமாப் பேசுங்க’ என பி.டி.ஆருக்கு எதிராகக் கம்பு சுற்றியிருக்கிறார். சீனியர் அமைச்சரின் இந்தக் கருத்தை இலைத் தரப்பு, தங்கள் தலைமையிடம் கொண்டுசெல்ல, ‘இப்போதான் அவங்களே எக்ஸ்போஸ் ஆகிட்டிருக்காங்களே... நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்’ எனக் கூலாகச் சொல்லியிருக்கிறது தலைமை” என்ற கழுகார்...

“குட்கா வழக்கில் தொடர்புடைய நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறதாம். பொதுவாக, காவல்துறையைப் பொறுத்தவரை, குற்றச்சாட்டில் சிக்கி மெமோ பெற்றவர்கள், சென்சிட்டிவ் பதவியில் இருக்கக் கூடாது. அதனால் மேற்கண்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நான்கு பேரில், இருவருக்கு ஐ.பி.எஸ் அந்தஸ்து கொடுப்பதிலும் இதனால் சிக்கல் எழுந்திருக்கிறதாம்” என்றபடியே கையிலிருந்த முறுக்கு பாக்கெட்டை பையில் போட்டுக்கொண்டு புறப்பட்டார்!