மிஸ்டர் கழுகு: இரட்டை இலைச் சின்னம்... அலைக்கழிக்கும் பா.ஜ.க... ஆத்திரத்தில் எடப்பாடி!

இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில், தான் அறிவிக்கும் வேட்பாளரையே அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஏற்க வேண்டும் எனக் கோரி எடப்பாடி எழுதிய கடிதத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.
“கேரளாவில் வீதிக்கு வீதி பிபிசி ஆவணப்படத்தைத் திரையிடுகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால், தமிழ்நாட்டில் ஆவணப்படத்தை மொபைலில் பார்ப்பதற்குக்கூட தடைபோடுகிறது காவல்துறை. ‘மொஹல் கார்டன்’ பெயரை ‘அம்ரித் உத்யான்’ என்று மாற்றியதைப்போல, இவர்களும் ஆவணப்படத்தின் பெயரை தமிழில் மாற்றியாவது திரையிட அனுமதித்திருக்கலாம்” என்று நக்கலடித்தபடியே நுழைந்த கழுகாருக்கு, பனங்கிழங்கை முறித்துக் கொடுத்தோம். “ரொம்ப நாளைக்குப் பிறகு இதைச் சாப்பிடுகிறேன்” என்ற கழுகார்...
“அந்த ஆவணப்படம் மத்திய அரசுக்கு எதிரான வலுவான ஆயுதம் என்பதால், அதை தமிழ்நாடு முழுக்கத் திரையிட வேண்டுமென்பது கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பம். ஆளும் தரப்பிடம் இது தொடர்பாக கோரிக்கையும் விடுத்திருந்தார் திருமாவளவன். ஆனால், முதல்வரிடமிருந்து உறுதியான உத்தரவு காவல்துறைக்கு வராததால், படத்தைத் திரையிடுவதில் குழப்பம் நிலவுகிறது. ‘ஆளுநரை எதிர்க்க நாங்கள் வேண்டும். மோடி அரசை விமர்சிக்கவும் வீழ்த்தவும் நாங்கள் வேண்டும். பெயரளவுக்கு பா.ஜ.க-வை எதிர்ப்பதுதான் தி.மு.க-வின் திராவிட மாடலா?’ என தி.மு.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே கடுப்பிலிருக்கிறார்கள்.”
“ஆவணப்படத் தடைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ‘கொந்தளிக்கப்’போவதாக தி.மு.க எம்.பி-க்கள் சொல்லியிருக்கிறார்களே?”
“கொந்தளிக்கவேண்டியது களத்தில்தானே... ‘நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கம்பு சுற்றுவார்கள். பேசிவிட்டு வெளியே வந்து, ‘சார்... சார்... ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ’ என பா.ஜ.க தலைவர்களிடம் தன்னிலை விளக்கமளிப்பார்கள். அவர்கள் சொல்வதை ஏன் சீரியஸாக எடுக்கிறீர்கள்?’ என கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள் பொருமுகிறார்கள். ஆவணப்படத்தை தி.மு.க கையில் எடுக்கிறதோ, இல்லையோ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதை ஒரு பிரசார ஆயுதமாகக் கையில் எடுக்கவிருக்கிறாராம் சீமான். வார்டுக்கு வார்டு படத்தைத் திரையிடவும் நாம் தமிழர் கட்சியினர் தயாராகிறார்கள்.”
“ ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தை முதல்வர் தொடங்கியிருக்கிறாரே... பின்னணி என்னவாம்?”
“வேறென்ன... 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான். அதற்குள்ளாக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வை முடித்துவிடத் தீர்மானித்திருக்கிறார் முதல்வர். ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒவ்வொரு எம்.எல்.ஏ-விடமிருந்தும் அவரவர் தொகுதி தொடர்பான 10 முக்கியக் கோரிக்கைகள் பட்டியலை வாங்கினார்கள் அல்லவா... அந்தக் கோரிக்கைகளின் நிலை குறித்து அதிகாரிகளுடன் பேசவிருக்கிறார் முதல்வர். அதேபோல, சட்டம்-ஒழுங்கு குறித்தும் மண்டலவாரியாக ஐ.ஜி-க்கள், டி.ஐ.ஜி-க்களுடன் ஆலோசனை நடத்தவும் முடிவெடுத்திருக்கிறாராம். இந்த ஆய்வுப் பயணத் திட்டமே மேலிடத்து மாப்பிள்ளையின் ஐடியாதானாம்.”

“சரிதான்... இன்னொருவரும் பயணத்தை ஆரம்பித்திருக்கிறாரே?”
“பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனைத்தானே சொல்கிறீர்... கோவையிலிருந்து பழநி கோயிலுக்குப் பாதயாத்திரை தொடங்கியிருக்கிறார் அவர். வரும் ஏப்ரல் 14-ம் தேதி, திருச்செந்தூரிலிருந்து தமிழ்நாடு முழுவதும் யாத்திரை செல்ல பா.ஜ.க மாநிலத் தலைவர் திட்டமிட்டிருக்கும் நிலையில், வானதியின் இந்த ‘போட்டி யாத்திரை’ கமலாலயத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக் கிறது. ‘இதில் ஹைலைட் என்னவென்றால், வானதியின் யாத்திரையைத் தொடங்கிவைத்ததே மாநிலத் தலைவர்தான். அவரையே சிறப்பு விருந்தினராக அழைத்ததில் இருக்கிறது அக்காவின் ராஜ தந்திரம்’ எனக் குதூகலிக்கிறார்கள் வானதியின் ஆதரவாளர்கள். ‘கொங்கு ஏரியாவில் பா.ஜ.க-வின் முகம் யார்?’ என்கிற போட்டி கமலாலயத்தில் முற்றியிருப்பதாலேயே, இந்த யாத்திரையில் இறங்கியிருக்கிறாராம் வானதி” என்ற கழுகாருக்கு சூடாக வெங்காய பஜ்ஜியும், டீயும் கொடுத்தோம். சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.
“ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்காக, விருதுநகர் மாவட்டம், செண்பகத்தோப்பிலுள்ள தன் குலதெய்வம் பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இடைத்தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு, துண்டுப்பிரசுரம் தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை கவனிக்க, தன் இளைய மகன் ஜெயபிரதீப் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்திருக்கிறார். ‘தம்பி சிறப்பாகச் செயல்பட்டு, இடைத்தேர்தலில் நம் பலம் நிரூபிக்கப்பட்டால், கட்சியில் அவருக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்துவிடலாம்’ எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறாராம் பன்னீர். இடைத்தேர்தல் செலவுகளுக்காக சென்னையைச் சேர்ந்த ஒரு பில்டரிடமும், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமும் துண்டுபோட்டிருக்கிறதாம் பன்னீர் தரப்பு. ‘இவரோட சேர்ந்தவங்க எதிர்காலமே ஊசலாடிக்கிட்டு இருக்கு. இதுல, இளைய மகனையும் நுழைச்சுவிடப் பார்க்குறாரு. ஆனாலும் ஐயாவுக்கு ரொம்பதான் ஆசை’ எனக் கிண்டலடிக்கிறார்கள் எதிர்த்தரப்பில்.”
“எவ்வளவு பெரிய வியூகம் வகுத்திருக்கிறார்... அதைப்போய் கேலி செய்கிறார்களே?”

“ம்க்கும்... எடப்பாடி விவகாரத்துக்கு வருகிறேன். இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில், தான் அறிவிக்கும் வேட்பாளரையே அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஏற்க வேண்டும் எனக் கோரி எடப்பாடி எழுதிய கடிதத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதற்குக் காரணமாக, பொதுக்குழு வழக்கைத் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியிருப்பதால், அந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கச் சொல்லியும், இரட்டை இலைச் சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது எடப்பாடி தரப்பு. இந்த மனுமீது பிப்ரவரி 2-ம் தேதிக்குள் எதிர்த்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்யவும், தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராகச் சேர்க்கவும் சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.”

“என்ன முடிவெடுத்திருக்கிறார்களாம் எடப்பாடி தரப்பில்?”
“இந்த மனுமீது உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த முடிவை எடுப்பார்கள். ‘பா.ஜ.க வேறு... தேர்தல் ஆணையம் வேறு என நாங்கள் நினைக்கவில்லை. பா.ஜ.க அரசு நினைத்தால், எங்களுக்குச் சாதகமான முடிவை எடுக்கச் சொல்லி தேர்தல் ஆணையத்துக்கு சமிக்ஞை கொடுக்க முடியும். அதைச் செய்யாமல் தேர்தல் ஆணையத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்குமாக எங்களை அலைக்கழிக்கிறார்கள். எல்லாக் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிவரும் நிலையில், நாங்கள் இன்னமும் வேட்பாளரைக்கூட அறிவிக்க முடியாமல் தவிக்கிறோம். நட்புக் கட்சியாக இருந்துகொண்டு இப்படிக் குடைச்சல் கொடுப்பார்கள் என நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்மிடம்தானே வந்தாக வேண்டும்... இதற்கெல்லாம் அப்போது அவர்கள் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்’ எனக் கொதிக்கிறார்கள் எடப்பாடி தரப்பில். ‘பொறுத்ததே பொறுத்தோம்... இன்னும் மூன்று நாள்கள் பொறுத்திருப்போம்’ எனச் சொல்லி அவர்களை ஆசுவாசப்படுத்தி வைத்திருக்கிறார்களாம் சீனியர்கள்” என்ற கழுகார்...
“தமிழ்நாடு முழுக்க, 300 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ரேஷன் பொருள்களை திடீர் சோதனை மூலமாக மடக்கிப் பிடித்திருக்கிறது சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி போலீஸ். இந்தத் தகவலை வெளியே தெரியாமல் அமுக்கிவிட்டாலும், இந்த ரெய்டால், துறையின் மேலிடப் புள்ளிக்கு கடும் அதிர்ச்சியாம். ஒவ்வொரு மாதமும் இந்தக் கடத்தல் மூலமாக பெரும் தொகை அவர் தரப்புக்குக் கொட்டி யிருக்கிறது. அதில் போலீஸ் கைவைத்துவிட்டதால், முகம் வெளிறிப் போயிருக்கிறாராம் அவர். ‘விவகாரம் பெரிதானால், என் பதவிக்கே ஆபத்து’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்க்கிறாராம் அவர்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.
கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:
கொங்கு அமைச்சரையும், ‘ஐ’ அமைச்சரையும் வழக்கிலிருந்து காப்பாற்றுவதாகச் சொல்லி உச்ச இடத்திலிருந்து பேரம் பேசப்படுகிறதாம். வழக்கை ஜெயமாக்கிவிடலாம் என்று நம்பிக்கையூட்டியிருப்பதால், இரு அமைச்சர்களும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.
* இடைத்தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டப் புள்ளி கொண்டு சென்ற ‘ரோஸ் மில்க்’ கட்டுகளில், சில கட்டுகளைக் காணவில்லையாம். தன் டிரைவரில் தொடங்கி, உடன் பயணித்தவர்கள் வரை எல்லோரையும் வேட்டியை உருவாத குறையாக விசாரித்திருக்கிறார் அந்தப் புள்ளி. ஆனால், ‘ரோஸ் மில்க்’ மட்டும் சிக்கவே இல்லை.
* பல அரசு அமைப்புகளின் அதிகாரங்கள், அமைச்சர்களிடமிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வசம் மாறியிருக்கின்றன. அந்த அமைப்புகளின் முடிவுகளை அமைச்சர்களுக்கு அதிகாரிகள் தெரியப்படுத்துவதே இல்லையாம். ‘பெயருக்குக் கையெழுத்து போட மட்டும்தான் நாங்களா?’ என பொருமித் தீர்க்கிறார்கள் அமைச்சர்கள்.
****
வருந்துகிறோம்
22.01.2023 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், 10, 11-ம் பக்கங்களில் `உனக்கு பேய் பிடிச்சிருக்கு” செக்ஸ் டார்ச்சர் செய்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ..!’ - என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பான செய்திகளில், கட்டுரைகளில் பாதிக்கப்பட்ட பெண்களின், குழந்தைகளின் பெயர்களையோ புகைப்படங்களையோ வெளியிடுவது தவறு; அந்த வகையில், மேற்குறிப்பிட்டிருக்கும் அந்தக் கட்டுரையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும், அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டதற்காக வருந்துகிறோம்.
- ஆசிரியர்