அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: முடங்கும் இலை? - டெல்லி ஆட்டம்!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

டெல்லியை நோக்கி எடப்பாடி வீசிய பந்தை, ஈரோடு பக்கம் திருப்பிவிட்டுவிட்டார்களே... ஆட்டமே அதுதானே.

ட்விட்டரில் ‘ஃப்ளாஷ் நியூஸ்’ பார்த்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். முந்திரி பக்கோடாவை அவருக்கு நீட்டியபடி, “நிமிடத்துக்கு நிமிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காட்சிகள் மாறுகின்றனவே...” என்றோம். பக்கோடாவைக் கொறித்தபடி நமது கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “ம்ம்... கவர் ஸ்டோரியில் நீங்கள் சொல்லாத சில விஷயங்களைச் சொல்கிறேன். இரட்டை இலைச் சின்னத்தை வைத்து ஓர் ஆட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறது டெல்லி” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரும் இடையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது எடப்பாடி தரப்பு. இதில், பதில் மனு தாக்கல் செய்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம், ‘இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டதை ஏற்கவில்லை. சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரிதான் முடிவெடுப்பார்’ எனக் கூறியிருக்கிறது. இதன்படி பார்த்தால்,

மிஸ்டர் கழுகு: முடங்கும் இலை? - டெல்லி ஆட்டம்!

பி ஃபார்ம்-ல் பன்னீரும் எடப்பாடியும் சேர்ந்து கையெழுத்திட்டால்தான் சின்னம் கிடைக்கும். இருவரும் ஒன்றுசேர்வதற்கான அறிகுறியே தென்படவில்லை. இருவருமே ஆளுக்கொரு வேட்பாளரைக் களமிறக்கியிருக்கிறார்கள். ஆக, சின்னம் முடங்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.”

“சரிதான்... இதில் டெல்லி என்ன ஆட்டம் ஆடுகிறது?”

“டெல்லியை நோக்கி எடப்பாடி வீசிய பந்தை, ஈரோடு பக்கம் திருப்பிவிட்டுவிட்டார்களே... ஆட்டமே அதுதானே. ‘சின்னம் முடங்கினால் அதற்கு பா.ஜ.க காரணமல்ல. தேர்தல் ஆணையம் காரணமல்ல. ஈரோடு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவக்குமார்தான் காரணம்’ என ரூட்டை தமிழ்நாட்டுக்கு மாற்றிவிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். சமீபத்தில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில், ‘இரட்டை இலை யாருக்குக் கிடைக்கிறதோ, அவர்களுக்கு ஆதரவளிக்கலாம்’ எனப் பேசியிருந்தார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இப்போது யாருக்கும் ஆதரவளிக்கத் தேவையிருக்காதுதானே... பா.ஜ.க இதைத்தான் எதிர்பார்த்தது. அது நடந்துவிட்டது.’’

“வேறு என்ன செய்யப்போகிறார்களாம்?”

“ஈரோடு கிழக்குக்கு நியமிக்கப்பட்ட பா.ஜ.க தேர்தல் பணிக்குழுவினர், தேர்தல் பணி எதையும் இதுவரை செய்யவில்லை. கேரளாவின் கொன்னி சட்டமன்றத் தொகுதிக்கு, 2019-ல் இடைத்தேர்தல் நடந்தது. பா.ஜ.க வேட்பாளராக கேரள பா.ஜ.க மாநிலத் தலைவர் சுரேந்திரன் என்பவர் களமிறங்கினார். தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டாலும், 17 சதவிகித வாக்குகளை பா.ஜ.க அப்போது பெற்றது. ‘அதேபாணியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் நாம் தனித்துக் களமிறங்க வேண்டும். பலத்தை நிரூபிக்க வேண்டும்’ என டெல்லியில் தூபம் போட்டிருக்கிறார்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். போதாக்குறைக்கு, ‘நீங்களே நில்லுங்கண்ணா... உங்க முகத்துக்கே பத்தாயிரம் ஓட்டு கூடுதலாக விழும்’ என அண்ணாமலையை உசுப்பேற்றுகிறார்களாம். ஆனால், வாக்குகள் குறைவாகப் பெற்றால் மானம் போய்விடுமே என டெல்லி யோசிக்கிறது.”

மிஸ்டர் கழுகு: முடங்கும் இலை? - டெல்லி ஆட்டம்!

“அவர்கள் யோசித்து முடிப்பதற்குள் தேர்தலே முடிந்துவிடும். சரி, ‘மிதப்பில் இருந்துவிடாதீர்கள்...’ எனப் பொருள்படும்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்தார் என்கிறார்களே?”

“உண்மைதான். தி.மு.க-வினருக்குத் தேவைப்படும் எச்சரிக்கைதான் அது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், ‘காங்கிரஸை வெற்றிபெறவைப்பது தி.மு.க-வின் பொறுப்பு’ எனப் பேசியிருக்கிறார் திருமா. தி.மு.க கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் ‘ஈகோ’ மோதல் தேர்தல் களத்தில் தலைதூக்கியிருக்கிறது. இதைத்தான் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறாராம் திருமா. ‘எடப்பாடி அணி பா.ஜ.க-வை உதறிவிட்டு, கோதாவில் குதித்திருக்கிறது. போட்டி கடுமையாகவே இருக்கும். மிதப்பில் இருந்துவிட வேண்டாம்’ என்பதையே கூட்டணியினருக்குக் குறிப்பாக, தி.மு.க-வினருக்கு உணர்த்தியிருக்கிறார் திருமா என்கிறார்கள் சிறுத்தைகள்.”

“ம்ம்... வேலூரில், ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் தொடக்கம் எப்படி இருந்தது?”

மிஸ்டர் கழுகு: முடங்கும் இலை? - டெல்லி ஆட்டம்!

“திட்டம் நல்ல திட்டம்தான். ஆனால், கருணாநிதியின் சமாதியில் வைக்கச்சொல்லி சிறுமி கொடுத்த பேனாவை வாங்கியது, காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தது என ‘போட்டோ ஷூட்’ விழாவாகத்தான் பெரும்பகுதி கடந்திருக்கிறது. மேலும், துரைமுருகன் படித்த காட்பாடி பள்ளிக்கு முதல்வர் சென்றிருந்தபோது, வேலூர் மேயர் சுஜாதாவை மேடைக்கு ஏறவிடாமல் முதல்வரின் பாதுகாவலர்கள் தடுத்திருக்கிறார்கள். ‘நான் மேயர்ங்க... என்னை ஏன் தடுக்குறீங்க?’ என சுஜாதா சத்தம் போட்டுப் பார்த்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையாம். பிப்ரவரி 2-ம் தேதி துரைமுருகனுக்கு 51-வது திருமணநாள். அன்றைய தினம் துரைமுருகன் வீட்டுக்குச் சென்ற முதல்வர், அவருக்குப் பரிசளித்துவிட்டு மதிய விருந்தையும் அங்கேயே முடித்திருக்கிறார். கிருஷ்ணகிரி கலவரம் தொடர்பாக முதல்வருக்குக் காவல்துறை அதிகாரிகள் அப்டேட் அளித்திருக்கிறார்கள். ‘யாராவது திட்டமிட்டு கலவரம் செய்யத் தூண்டினார்களா என விசாரிங்க’ என உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர். இனி கள ஆய்வு செல்லும்போது, ஒவ்வொரு துறை அமைச்சரையும் உடன் அழைத்துச் சென்று, அவரவர் துறைரீதியாகக் களத்தில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டிருக்கிறாராம் முதல்வர்” என்ற கழுகாருக்கு ஜில்லென இளநீர் பாயசத்தை அளித்தோம். பாயசத்தைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“டெல்லி தகவல் ஒன்றைச் சொல்கிறேன். பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் நாளின் முடிவில், அ.தி.மு.க., தி.மு.க-வின் சீனியர்கள் இரண்டு பேர் தனியே சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது, அ.தி.மு.க சீனியரை அறிவாலயம் பக்கம் வரச் சொல்லியிருக்கிறார் தி.மு.க சீனியர். அதற்கு முன்னவர் தயங்கவும், ‘சரி... நீங்க வர வேண்டாம். உங்க கிருஷ்ண பரமாத்மா நம்ம பக்கம் வந்து புல்லாங்குழல் வாசிக்கலையா... அது மாதிரி நீங்களும் நமக்கு சார்பா நாடாளுமன்றத்துல பேசுங்க. உங்களுக்குத் தேவையானதையெல்லாம் தமிழ்நாட்டுல நான் பண்ணித் தர்றேன்’ என்றிருக்கிறார் பின்னவர். இலைக் கட்சியில் தனக்கு இப்போதிருக்கும் பதவி இன்னொரு முறை கிடைக்காது என்பதை உணர்ந்திருப்பதால், அ.தி.மு.க சீனியரும் பலமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.”

மிஸ்டர் கழுகு: முடங்கும் இலை? - டெல்லி ஆட்டம்!

“இவரும் புல்லாங்குழல் வாசிக்கிறாரா எனப் பார்ப்போம். முதல்வர் அலுவலகப் பஞ்சாயத்து ஒன்று கோட்டையில் உருள்கிறதே... கேள்விப்பட்டீரா?”

“அந்தச் செய்தித்துறை நியமனம்தானே... என் காதுக்கும் வந்தது. முதல்வர் அலுவலகத்தில், உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பரத்குமார் என்பவரைச் சமீபத்தில் நியமித்திருக்கிறார்கள். பா.ஜ.க மீனவரணித் தலைவர் நீலாங்கரை முனியசாமியின் மகன்தான் இவராம். ‘பேனா சின்னம் தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில், ‘வள்ளுவரைவிட பெரிய ஆளா கருணாநிதி?’ எனக் கேட்டவர்தான் முனியசாமி. அவரின் மகனை வேலூரிலிருந்து சென்னைக்கு இடம் மாற்றி, அதுவும் முதல்வர் அலுவலகத்தில் நியமிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?’ எனக் கொந்தளிக்கிறார்கள் தி.மு.க-வினர். அறிவாலய உணர்வுள்ள அதிகாரிகள் மத்தியில் இந்த நியமனம் விவாதப் பொருளா கியிருப்பதால், முதல்வர் அலுவலகத்தில் விசாரணை ஆரம்பித்திருக் கிறது” என்று சிறகை படபடத்த கழுகார்,

“புதுச்சேரி

எம்.எல்.ஏ-க்களின் அலுவலகங்களுக்கு கலர் பிரின்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அந்த பிரின்டர்களில் முதல் காப்பியாக அப்பா பைத்தியம் சாமிகளின் படம் வரும்படி தயாராக வைத்திருந்திருக் கிறார்கள் அதிகாரிகள். நல்ல நேரமெல்லாம் பார்த்து அங்கு வந்த முதல்வர் ரங்கசாமி, அந்த பிரின்டர் பட்டனை அழுத்தியிருக்கிறார். அப்போது, அப்பா பைத்தியம் சாமிகளின் உருவம் கறுப்பு வெள்ளை நிறத்தில் வந்ததால், ரங்கசாமியின் முகமும் கறுத்துவிட்டதாம். பதறிப்போன அதிகாரிகள், மீண்டும் பட்டனை அழுத்தச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அடுத்தடுத்து ஐந்து முறை பட்டனை அழுத்தியும் கறுப்பு வெள்ளையாகவே படம் வெளிவந்திருக்கிறது. ‘கெட்ட சகுனமா...’ எனக் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ரங்கசாமி” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.